ஒப்பிடாதீர்கள்... பிறரோடு!
இருபத்தொன்றாம் நூற்றாண்டு என்பது தொழில்நுட்ப வளர்ச்சியின் நூற்றாண்டு. அதிலும் சமூக வலைதளங்கள் இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் கவர்ந்து இழுத்துள்ளன.
இருபத்தொன்றாம் நூற்றாண்டு என்பது தொழில்நுட்ப வளர்ச்சியின் நூற்றாண்டு. அதிலும் சமூக வலைதளங்கள் இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் கவர்ந்து இழுத்துள்ளன. அனைவருடனும் எளிதில் தொடர்பு கொள்வதற்காக உருவாக்கப்பட்ட சமூக வலைதளங்கள் தற்போது சிறைச்சாலைகளாக மாறி இளைஞர்களைக் கைது செய்து வருகின்றன.
மற்றவர்களுடன் விரும்பிய நேரத்தில் தொடர்பு கொள்வது, வேண்டிய தகவல்களை உடனடியாகப் பகிர்ந்து கொள்வது என பல நன்மைகளை சமூக வலைதளங்கள் அளித்து வருவதை மறுப்பதற்கில்லை. எனினும், பலர் தங்களது விலைமதிப்பற்ற நேரத்தை சமூக வலைதளங்களிலேயே மூழ்கடித்து வருகின்றனர்.
மற்றவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்களின் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதில் அடக்க முடியாத ஆர்வம் கொண்டுள்ளனர். அதை ஆர்வம் என்று சொல்வதை விட ஒருவித அச்சம் என்றே கூறலாம். தம்மை விட மற்றவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களோ என்ற அச்சமே சமூக வலைதளங்களில் அவர்கள் தொடர்பான அனைத்தையும் தொடர்ந்து கண்காணிப்பதற்குக் காரணமாகிறது.
இத்தகைய உணர்வு மிகக் கொடியது என்பதை பலர் உணர்வதில்லை. இவ்வாறு மற்றவர்களைப் பற்றி சமூக வலைதளங்கள் மூலமாகத் தொடர்ந்து கண்காணித்து வருவது அவர்களைப் போலவே வாழ வேண்டும் என்ற தீராத ஆசையை மனதில் ஏற்படுத்திவிடுகிறது. அவர்கள் புதிய பொருள்களை வாங்கினால் நமக்கும் அந்தப் பொருள்களை வாங்க வேண்டும் என்ற ஆவல் தோன்றும்.
வெளிநாடுகளுக்கோ சுற்றுலாத் தலங்களுக்கோ அவர்கள் பயணித்தால், நாமும் அங்கு பயணிக்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டிவிடும். அவ்வாறு ஏற்படும் ஆசைகளை நாம் நிறைவேற்ற முயற்சி செய்தால் பெரும் பொருளாதார இழப்புகளைச் சந்திக்க நேரிடலாம். அவற்றை நிறைவேற்ற முடியாமல், அந்த ஆசைகளைத் தொடர்ந்து மனதில் கொண்டிருந்தால் அமைதியை இழந்து மனஅழுத்தத்துக்கு உள்ளாகும் நிலைஉருவாகும்.
அப்படியானால், இதிலிருந்து விடுபட வழி உள்ளதா? நிச்சயம் உள்ளது. வாழ்க்கையில் தோன்றும் எந்தப் பிரச்னைக்கும் மூல காரணத்தைக் கண்டறிந்து அதற்குத் தீர்வு காண முயல வேண்டும். சமூக வலைதளங்களில் மற்றவர்களை அதிகமாகப் பின்தொடர்வதே பெரும்பாலான பிரச்னைகளுக்கு மூலக் காரணமாக அமைகிறது.
பெரும்பாலானோர் தங்களின் மகிழ்ச்சியான தருணங்களை மட்டுமே சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். அதைக் காணும் நாம் அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பதாக எண்ணி அவர்களைப் போலவே வாழத் துணிகிறோம். அவர்களைப் போலவே உடையணியவும், அவர்கள் வைத்திருக்கும் பொருள்களை வாங்கவும் தீரா ஆசை கொள்கிறோம்.
ஆனால், உங்கள் வாழ்வில் காணப்படும் துன்பம் நிறைந்த பக்கங்கள் அவர்களின் வாழ்விலும் உண்டு என்ற அடிப்படையை நீங்கள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். அதைப் புரிந்து கொண்டுவிட்டால் அவர்களிடம் உள்ள பொருள்களுக்காகவும் அவர்கள் வாழும் வாழ்க்கைக்காகவும் நீங்கள் ஏக்கத்தை வளர்த்துக் கொண்டு அச்சத்துக்கு உள்ளாக மாட்டீர்கள்.
அடுத்தது, உங்களிடம் இல்லாத பொருள்களுக்காக ஏங்குவதை நீங்கள் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அத்தகைய எண்ணங்கள் உங்களின் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையைச் சிதைத்துவிடும். உங்களிடம் என்ன இருக்கிறதோ அவற்றில் மட்டும் கவனம் செலுத்தினால் தேவையில்லாத மனஅழுத்தத்தில் சிக்கி உழல்வதிலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம். உங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொன்றையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்.
மற்றவர்கள் வாழ்வுடன் ஒப்பிட்டு உங்களுக்குத் தேவையில்லாத அச்சம் ஏற்படக் காரணமாக இருப்பது, சமூக வலைதளங்களின் முறையற்ற பயன்பாடாகும். சமூக வலைதளங்களை நல்ல காரியங்களுக்காக தினமும் அதிகபட்சம் 30 நிமிடங்கள் பயன்படுத்தினாலே போதுமானது. அதை விடுத்து உங்களுக்குக் கிடைத்துள்ள பொன்னான நேரத்தின் பெரும்பகுதியை சமூக வலைதளங்களில் செலவிட்டு வந்தால், கண்பார்வைக் குறைபாடு, தூக்கமின்மை, மனச்சோர்வு, கவனக்குறைவு உள்ளிட்டவற்றால் நீங்கள் துன்பத்துக்கு உள்ளாகநேரிடும்.
சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதைக் கைவிட்டு நண்பர்கள், உறவினர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு, உங்களின் நேரத்தை மகிழ்ச்சியுடன் கழிக்கலாம். நண்பர்களுடன் இணைந்து விளையாடுதல், மரம் நடுதல், குறிப்பிட்ட விஷயங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவற்றில் நீங்கள் கவனம் செலுத்தலாம். இது போன்ற செயல்கள் உங்கள் நண்பர்களுடனான நெருக்கத்தை அதிகரிப்பதற்கும் உதவும்.
சமூக வலைதளம் என்னும் கனவுலகத்தில் வாழாமல், தற்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தினர், நண்பர்களுடன் கலந்துரையாடும்போது செல்லிடப்பேசி, கையடக்கக் கணினி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். நண்பர்களுடன் சுற்றுலா சென்றால், அந்த இடத்தில் உள்ள இயற்கை அழகுகளைக் கண்டு களிக்க வேண்டும். மாறாக அந்த இடங்களைப் படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதில் ஆர்வம் காட்டக் கூடாது.
அவ்வாறு செய்தால் நீங்கள் பதிவிட்ட படத்தை யாரெல்லாம் பார்த்தார்கள், அது குறித்து யார் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதை அறிவது குறித்த சிந்தனையே உங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். அச்சிந்தனை சமூக வலைதளம் நோக்கியே உங்களை மீண்டும் இழுத்துச் செல்லும்.
எனவே, மற்றவர்கள் வாழ்வைக் குறித்து அறிந்து கொள்வதில் செலுத்தும் கவனத்தை உங்களின் வாழ்க்கை குறித்த சிந்தனைகளில் நீங்கள் செலுத்த வேண்டும். சமூக வலைதளங்களில் விரயமாகும் உங்கள் நேரத்தை மற்ற பயனுள்ள விவகாரங்களை நோக்கி மடைதிருப்பினால் உங்கள் வாழ்வு மேம்படுவதோடு உங்களை நம்பியுள்ளவர்களின் வாழ்வும் சிறக்கும்.