முகப்பு
இளைஞர்மணி

மனமே... நலமா?

மகிழ்ச்சி, சோகம், கோபம், பதற்றம், சோர்வு, எரிச்சல், அச்சம் உள்ளிட்டவை மனிதர்களுக்கு இயற்கையாக ஏற்படும் உணர்வுகள்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:46 PM
பகிர்:

மகிழ்ச்சி, சோகம், கோபம், பதற்றம், சோர்வு, எரிச்சல், அச்சம் உள்ளிட்டவை மனிதர்களுக்கு இயற்கையாக ஏற்படும் உணர்வுகள். இவையனைத்தும் வரம்புக்குள் இருந்தால் எந்தவிதப் பிரச்னையும் இல்லை. இந்த உணர்வுகள் எல்லை மீறும்போது பல்வேறு பிரச்னைகள் வரிசைகட்டி வந்து நிற்கின்றன.  

மனநலத்தை உரிய முறையில் பேணுவதற்கு இந்த உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியமானது. உடல்நலத்தை அன்றாடம் பேணுவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானது மனநலத்தையும் முறையாகப் பேணுவது. மனம் நலமுடன் இருந்தால் மட்டுமே அன்றாடப் பணிகளிலும் செயல்பாடுகளிலும் முழு கவனத்தைச் செலுத்த முடியும். 

வாழ்க்கையை மகிழ்ச்சியாக உணர்வதும் அன்றாடம் திறம்படச் செயல்படுவதும் மனம் நலமுடன் இருப்பதற்கான முக்கிய அறிகுறிகள். 

மனநலத்துடன் இருப்பவர்களிடம் மகிழ்ச்சி, பெருமிதம், திருப்தி, அன்பு உள்ளிட்ட நேர்மறையான உணர்வுகள் வழிந்தோடும். அவர்கள் தங்கள் வாழ்க்கையை முழு ஈடுபாட்டுடன் வாழ்வார்கள். நண்பர்களுடனும் உறவினர்களுடனும் நெருங்கிய உறவைப் பேணுவார்கள்; அதிகமாக அன்பு பாராட்டுவார்கள். 

மனத்தை நலமுடன் வைத்திருப்பவர்கள் நலம் விரும்பிகளிடமும், அவர்களால் விரும்பப்படுபவர்களிடமும் அதீத அன்பைச் செலுத்துவார்கள். அவர்கள் தங்கள் வாழ்வை அர்த்தமுள்ளதாகவும் மதிப்புமிக்கதாகவும் எண்ணுவார்கள். சாதிக்கத் தூண்டும் செயல்களில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவார்கள்.  

தங்களைப் பற்றி உயர்வான எண்ணத்தை அவர்கள் கொண்டிருப்பர். எப்போதும் உற்சாகத்துடன் காணப்படும் அவர்கள் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். மேற்கண்ட பண்புகளைக் கொண்டு உங்கள் மனம் முழு நலமுடன் உள்ளதா என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.   

மனதை நலமுடன் வைத்துக் கொள்வதற்கான சில வழிமுறைகளும் உள்ளன. 

முதலில் உங்களின் மனநலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் காரணிகளைக் கண்டறிவது மிக அவசியம். ஏழ்மை, பொருளாதாரப் பாதுகாப்பின்மை, வேலையின்மை, போதிய கல்வித் தகுதியின்மை, சமூகத்தில் பின்தங்கிய நிலை, மற்றவர்களுடன் நெருங்கிப் பழகாமல் எப்போதும் தனிமையில் இருப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் உங்கள் மனநலனைப் பாதிக்க வாய்ப்புகள் உள்ளன. 

வாழ்வில் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் மனதை நலமுடன் வைத்திருப்பதற்குத் தேவையான அடிப்படை விஷயம் போதிய தூக்கம். இளைஞர்களுக்கு தினமும் 7 மணி நேர தூக்கம் மிகவும் அவசியம். அதிலும் இரவில் அறையில் எந்த வெளிச்சமுமின்றி தூங்க வேண்டும். ஆனால், இளைஞர்களில் பெரும்பாலானோர் நள்ளிரவுக்குப் பிறகு உறங்கி முற்பகலில் துயில் எழும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும். 

மன நலனைப் பாதுகாக்க அனைத்துவித சத்துகளும் நிறைந்த உணவுகளை உண்பது மிக அவசியம். தற்காலச் சூழலில் துரித உணவுகள் அதிகரித்துள்ளன. அவற்றை முற்றிலுமாகத் தவிர்ப்பது இயலாத காரியம் என்பதால், துரித உணவுகள் உண்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.   பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும். 

உடல்நலத்தையும் மனநலத்தையும் ஒருசேரப் பாதுகாக்க உதவுவது உடற்பயிற்சி. காலையிலோ அல்லது மாலையிலோ காற்றோட்டமான இடத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். யோகாசனப் பயிற்சி, தியானப் பயிற்சி ஆகியவை மனத்தை நலமுடன் வைத்திருக்கப் பெரிதும் உதவும். 

தனிமையில் இருக்காமல் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் நெருங்கிய உறவைப் பேண வேண்டியது அவசியம். அவர்களுடன் சமூக வலைதளங்களில் மட்டும் தொடர்பு கொள்ளாமல் நேரில் சந்தித்துப் பழக வேண்டும்.  

நண்பர்களுடன் இணைந்து விளையாடலாம்; சுற்றுலா செல்லலாம்; பள்ளி, கல்லூரியின் மகிழ்ச்சியான நாட்களை அசைபோடலாம். இதுபோன்ற செயல்கள் மனஇறுக்கத்தைக் குறைத்து கவலைகளிலிருந்து விடுபட வழிவகுக்கும்; மனநலனைக் காக்கும். 

எல்லாரும் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை என்பதை உணர்ந்து கொள்வது தேவையில்லாத எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். எல்லாருடைய வாழ்விலும் சறுக்கல்கள், கவலை, சோர்வு, அதிருப்தி போன்றவை உண்டு. எனவே, உலகில் உங்களுக்கு மட்டும்தான் பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று நினைத்து  உங்கள் மனநலனுக்கு நீங்களே பாதிப்பை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. 

எந்தப் பிரச்னைகள் குறித்தும் அதிகமாகக் கவலைப்படக் கூடாது. அது மன நலனை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் உடல்நலத்துக்கும் கேடு விளைவிக்கும். பிரச்னைகளிலிருந்து விடுபடுவதற்கான வழிகளை ஆராய வேண்டும்.   

நீங்கள் செய்யும் எந்தவொரு செயலையும் முழு ஈடுபாட்டுடன் மேற்கொள்ள வேண்டும். மகிழ்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் செயல்களைச் செய்தால் எந்தவிதக் கவலைகளுமின்றி மனம் நலமுடன் காணப்படும். உடல்நலத்துடன் மனநலத்தையும் பேணிக் காத்து வாழ்வில் மகிழ்ச்சியைப் பெருக்குவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.