கழிவுகள் மறுசுழற்சி!: உலகைத் தூய்மையாக்கும் இளம் தொழில்முனைவோர்கள்!
"காசைக் கரியாக்காதே...' என பொறுப்பில்லாத இளைஞர்களிடம் பெரியவர்கள் கூறுவதுண்டு.
"காசைக் கரியாக்காதே...' என பொறுப்பில்லாத இளைஞர்களிடம் பெரியவர்கள் கூறுவதுண்டு. ஆனால், இளைஞர்கள் சிலர் தங்களின் பொறுப்பான செயல்களால் கழிவுகளையும் காசாக்கி வருகின்றனர்.
உலகம் முழுவதும் மட்கும் கழிவு, மட்காத கழிவுகள் என பெருகி வரும் கழிவுகளை அகற்ற வழியின்றி அரசுகள் தவித்து வருகின்றன. தற்போது உலக நாடுகளில் ஒரு முறை பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறியப்படும் மின் பொருள்கள் அதிகரித்து வரும் நிலையில், அத்தகைய மின் கழிவுகளின் குப்பை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் ஆண்டு தோறும் 2 மில்லியனுக்கும் அதிகமான மின்கழிவுகள் உருவாவதாகக் கூறப்படுகிறது. இப்படி பயனின்றி தூக்கி வீசப்படும் மின் கழிவுகளைக் கையாள பல்வேறு முறைகளை பல்வேறு நாடுகள் செயல்படுத்தி வரும் நிலையில், இளைஞர்கள் சிலர் தூக்கி எறியப்படும் இத்தகைய மின்கழிவுகளை காசாக்கும் வேலையில் ஈடுபட்டு வெற்றியும் பெற்று வருகின்றனர்.
ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜ்குமார், மும்பையைச் சேர்ந்த ஜிக்னேஸ் ஷா ஆகியோர்தான் கழிவுகளை காசாக்கும் தொழிலில் ஈடுபட்டுவரும் இளம் தொழில்முனைவோர்களாவர்.
ராஜ்குமார் தகவல் தொழில்நுட்பத் துறையில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தவர். அந்த சமயத்தில், ஒவ்வோர் அலுவலகத்திலிருந்தும், தொழிற்சாலைகளில் இருந்தும் ஏராளமான மின் கழிவுகள் உருவாகி வருவதையும் அவற்றைக் கையாள முடியாமல் நிறுவனங்கள் படும் கஷ்டங்களையும் அவர் புரிந்து கொண்டார். நாள்தோறும் பெருகி வரும் இக்கழிவுகளைப் பயன்படுத்தி ஏதேனும் புதிய பொருள்களை உருவாக்கினால் கழிவுகள் அகற்றப்படுவதுடன், அந்த கழிவுகள் மூலம் வருமானத்தையும் பெருக்க முடியுமே என சிந்தித்தார் ராஜ்குமார்.
2018 - ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் 3 மில்லியன் மெட்ரிக் டன் மின் கழிவுகள் குவிந்தன. இவற்றில் 5 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுவதைத் தெரிந்த ராஜ்குமார் மின் கழிவு மறுசுழற்சி ஆலையை ராஜஸ்தானின் குஷ்கேராவில், "தேஷ்வால் வேஸ்ட் மேனேஜ்மென்ட்' என்ற நிறுவனத்தை நிறுவினார். அது போல் மானேசரில் மற்றொரு பெரிய அளவிலான மறுசுழற்சி மையத்தைத் தொடங்கினார்.
பயன்படுத்தப்பட்ட கழிவு பேட்டரிகள், பிளாஸ்டிக் போன்றவை இந்த மையங்கள் மூலம் மறுசுழற்சி செய்யப்பட்டன. இதையடுத்து, தகவல் தொழில்நுட்பத் துறை, கனரக தொழில்கள், ஆட்டோமொபைல்கள், நுகர்வோர் பொருள்கள், மருத்துவத்துறை, தொலைத்தொடர்பு துறை உள்ளிட்ட துறைகள் மூலம் வெளியாகும் கழிவுகளைக் கையாள முடிவு செய்த ராஜ்குமார், அத்தகைய 200-க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட தொடங்கினார்.
""நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து சுமார் 1,000 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான மின் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளன. மேலும் 2019-க்குப் பிறகு ஆண்டுக்கு 500 டன்களுக்கு மேல் மறுசுழற்சி செய்ய இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறோம். ஆண்டு தோறும் ரூ.23 கோடி வருவாய் கிடைக்கும். வருமானத்தை தாண்டி என்னால் இந்த சமூகத்திற்கு சேவை செய்வதற்கும், உலக நலனுக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் பங்களிக்க முடிந்தது என்ற பெருமையும் கிடைத்துள்ளது'' என்கிறார் அவர்.
மும்பையைச் சேர்ந்தவர் ஜிக்னேஸ் ஷா, காகித உற்பத்தி துறையில் இருந்தவர். இதிலிருந்து வரும் கழிவுகளை கையாளத் தெரிந்தவர். பேக்கேஜிங் தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுகளை மறுசுழற்சி செய்தால் பெரும் லாபம் ஈட்ட முடியும் என தெரிந்ததையடுத்து, 1999 -ஆம் ஆண்டு, டீலக்ஸ் ரீசைக்கிளினிங் நிறுவனத்தை மும்பையில் தொடங்கினார். தொடங்கப்பட்டது முதல் சில ஆண்டுகள் வரை மறுசுழற்சி தொடர்பான ஆலோசனைகளை மட்டுமே அவர் வழங்கி வந்தார். பின்னர் மாதத்திற்கு சுமார் 75 டன் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் வகையில் தனது ஆலையை மேம்படுத்தினார்.
தற்போது இந்நிறுவனத்தின் மூலம் ஆண்டுக்கு 13,000 மெட்ரிக் டன் கழிவுகளை மறுசுழற்சி செய்ய முடியும் என்கிறார் ஷா. தொடக்கத்தில், டெட்ராபாக் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக் கழிவுகளை மட்டுமே மறுசுழற்சி செய்தோம். 2004 - ஆம் ஆண்டு முதல், மூன்று சக்கர வண்டி, ஆட்டோ ரிக்ஷா துறைகளுக்குத் தேவையான சீட் பேக் மற்றும் பேக்ரெஸ்ட் போன்றவற்றைத் தயாரித்து வழங்கி வருகிறோம். நிறுவனம் ஆண்டுக்கு சுமார் ரூ.40 கோடி விற்றுமுதல் ஈட்டுகிறது'' என்கிறார் ஷா.