விவசாயிகளாக மாறிய விமானிகள்!
ஹார்ஸ் பாரேக், இஷான் மோடி ஆகிய இருவரும் மும்பையைச் சேர்ந்தவர்கள். உள்நாட்டு விமான ஓட்டிகளாக இருந்தவர்கள்.
ஹார்ஸ் பாரேக், இஷான் மோடி ஆகிய இருவரும் மும்பையைச் சேர்ந்தவர்கள். உள்நாட்டு விமான ஓட்டிகளாக இருந்தவர்கள். ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தவர்கள். கரோனா பொதுமுடக்கம் அவர்களை வீட்டில் தங்க வைத்துவிட்டது. என்றாலும் அவர்களால் சும்மா இருக்க முடியவில்லை. அவர்களுடைய சிந்தனைகள் பறந்து கொண்டிருந்தன.
மும்பையில் உள்ள குர்லா ரயில்நிலையத்துக்கு எதிரில் உள்ள பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தோட்டத்தில் தினமும் ஒரு பெண் கொத்துமல்லி இலைகளைப் பறிப்பதை ஏற்கெனவே ஹார்ஸ் பாரேக் பார்த்திருக்கிறார். அந்த நினைவு வரவே, வீட்டில் ஒன்றும் செய்யாமல் இருப்பதை விட தோட்டம் அமைத்தால் என்ன என்று அவருக்குத் தோன்றியிருக்கிறது.
மனைவி கரிமாவிடம் கலந்து ஆலோசித்திருக்கிறார். தன்னைப் போலவே வீட்டில் இருந்த நண்பரான இஷானிடமும் பேசியிருக்கிறார். இருவரும் சரி என்று சொன்னவுடன், தோட்டம் அமைப்பது என்று முடிவாகியிருக்கிறது.
மும்பை நகரில் தோட்டம் அமைக்க இடத்துக்கு எங்கே போவது? அவருடன் பள்ளியில் படித்த நண்பர் ஒருவர் செம்பூரில் இருப்பது நினைவுக்கு வரவே ஹார்ஸ் பாரேக் அவரைத் தொடர்பு கொண்டு தோட்டம் அமைப்பது பற்றிச் சொல்லியிருக்கிறார். செம்பூர் நண்பர் தனது வீட்டு மாடியை தோட்டம் அமைப்பதற்குத் தந்திருக்கிறார். இப்படித்தான் உருவாகியிருக்கிறது ஹார்ஸ் பாரேக், இஷான் மோடி ஆகிய இருவரும் இணைந்து உருவாக்கிய ஃபார்ம்ஜெட் நிறுவனம்.
""பத்து லட்சம் ரூபாயில் முதலீட்டில் இந்த ஃபார்ம்ஜெட் நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறோம். மாடித் தோட்டம் என்பதால் மண் தொட்டிகளை வைத்து அதில் செடிகளை வளர்க்கிறோம் என்று நினைத்துவிடாதீர்கள். நாங்கள் செய்வது ஹைட்ரோபோனிக்ஸ் முறையிலான விவசாயம். அதாவது மண் இல்லாமல் செடி வளர்க்கும் முறை.
செடிக்குத் தேவை சத்துகள். மண்ணில் வேர் பிடித்துதான் செடிகளுக்குச் சத்துகள் கிடைக்க வேண்டுமா? நாங்கள் நண்பர் வீட்டு மாடியில் யுபிவிசி குழாய்களில் செடிகளை வளர்க்கிறோம். யுபிவிசி குழாய்கள் சுற்றுச்சூழலுக்குக் கேடு தராதவை என்பதால் அதைப் பயன்படுத்துகிறோம். இந்தக் குழாய்களின் வழியாக 10 நிமிடத்துக்கு ஒருமுறை தண்ணீர் செல்லும். அந்தத் தண்ணீரில் செடிகளுக்குத் தேவையான சத்துகளான மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் ஆகியவற்றை 2 நிமிடங்களுக்கு ஒருமுறை கலந்துவிடுவோம். செடிகளை வளர்க்கத் தொடங்கிய நான்கு மாதங்களிலேயே எல்லாச் செடிகளும் நன்றாக வளர்ந்துவிட்டன'' என்கிறார் ஹார்ஸ்.
பூச்சிக் கொல்லி மருந்துகளோ, ரசாயன உரங்களோ பயன்படுத்தத் தேவையில்லாத இவர்கள் மாடித்தோட்டத்தில் விளையும் காய்கறிகளை, கீரைகளை, துளசிச் செடிகளை பலரும் ஆர்டர் செய்து வாங்கிச் செல்கிறார்கள்.
""ஒருவர் தனக்குத் தேவையான காய்கறி, கீரைகளை காலையில் ஆர்டர் செய்தால், மதியம் அவர்களுக்கு அவற்றைப் பறித்துத் தருகிறோம். விற்பனைக்குத் தேவையானவற்றை மட்டுமே பறிப்பதால், எப்போதும் எங்களிடம் புத்தம் புதிய காய்கறி, கீரைகளே கிடைக்கும். அப்படி நாங்கள் அறுவடை செய்வதை விடியோ படமாகவும் எடுத்து வாடிக்கையாளர்களினன் செல்லிடப் பேசிக்கு அனுப்பி வைக்கிறோம்'' என்கிறார் இஷான் மோடி.
""இதுபோன்று ஏற்கெனவே நிறைய ஹைட்ரோபோனிக்ஸ் தோட்டங்கள் மும்பையில் உள்ளன. ஆனால் அவையெல்லாம் செயற்கைமுறையில் அமைந்தவை. ஏர்கண்டிஷனிங், எல்இடி விளக்குகள் அவற்றுக்குத் தேவைப்படுகின்றன. ஆனால் நாங்கள் இயற்கையான சூழலில் எங்களுடைய தோட்டத்தை உருவாக்கியிருக்கிறோம்'' என்கிறார்கள் இருவரும் பெருமையுடன்.