ஹெல்மெட் வென்டிலேட்டர்!
""நம்நாட்டில் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படுவதில்லை. எல்லாம் வெளிநாடுகளில்தான்'' என்று சிலர் சொல்லக் கேட்டிருப்பீர்கள்.
""நம்நாட்டில் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படுவதில்லை. எல்லாம் வெளிநாடுகளில்தான்'' என்று சிலர் சொல்லக் கேட்டிருப்பீர்கள். ஆனால் அவர்கள் சொல்வதற்கு மாறாக, நம்நாட்டிலும் பல இளைஞர்கள் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். தேவைக்கேற்ப புதுவிதமான பல கருவிகளை உருவாக்கியும் வருகிறார்கள். அந்த வகையில் ஐஐடி - புவனேஸ்வரைச் சேர்ந்த பொறியியல் பயிலும் மாணவர்கள் குழு ஒன்று ஒரு புதுவிதமான சுவாசிக்கும் கருவியை உருவாக்கியிருக்கிறது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. மூச்சுத் திணறலால் அவதிப்படுபவர்களை வென்டிலேட்டர் வசதி உள்ள மருத்துவ அறையில் வைத்து மருத்துவம் செய்ய வேண்டியிருக்கிறது.
83 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வென்டிலேட்டர்களின் தேவையும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால், வென்டிலேட்டர்களின் பற்றாக்குறையும் ஏற்பட்டுவிட்டது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஐஐடி - புவனேஸ்வரைச் சேர்ந்த மாணவர்கள் தலையில் ஹெல்மெட் போல அணியக் கூடிய வென்டிலேட்டரை உருவாக்கியிருக்கிறார்கள். பார்ப்பதற்கு நீர்க்குமிழி போல இந்த ஹெல்மெட் வடிவ வென்டிலேட்டர் உள்ளது. இதன் பெயர் ஸ்வாஸ்நெர்.
ஐஐடி - புவனேஸ்வரில் பணிபுரியும் பேராசிரியர் சுராஜ் சர்மா தலைமையில் தபஸ்வின் பதி, சாய் சம்பித் நாயக், சித்தார்த் நாயக், அனன்யா அப்ரமேயா, ஜிவிதேஷ் தேபதா, விட்டல் குப்தா, நந்த் கிஷோர் குப்தா, திவ்யஜோதி தாஸ், ஷோவித் மித்ரா ஆகிய பொறியியல் மாணவர்கள் அடங்கிய குழு இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறது.
பொதுவாக சுவாச நோய்களால் பாதிக்கப்படுபவர்கள், மூச்சுத் திணறலால் துன்பப்படுபவர்களுக்கு மருத்துவம் செய்வதற்காக "ஹைபர்பேரிக் ஆக்சிஜன் தெரபி' என்ற ஒரு மருத்துவமுறை பயன்படுகிறது.
நாம் சுவாசிக்கும் காற்றில் நைட்ரஜன், கார்பன் டைஆக்ûஸடு, ஆக்சிஜன் உட்பட பல காற்றுப் பொருள்கள் கலந்து இருக்கின்றன. காற்றை உள்ளிழுக்கும்போது காற்றிலுள்ள ஆக்சிஜன் ரத்தத்தில் கலக்கிறது. மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டவருக்கு நேரடியாகவே தூய்மையான ஆக்சிஜனைத் தந்தால் அவர் விரைவாக, மிக எளிதாக சுவாசிக்க முடியும். மூச்சுத்திணறலிலிருந்து அவர் மிக விரைவாக மீண்டு விட முடியும். இதுதான் "ஹைபர்பேரிக் ஆக்சிஜன் தெரபி' மருத்துவமுறையின் அடிப்படை. அதன் அடிப்படையிலேயே இந்த ஹெல்மெட் வென்டிலேட்டரை உருவாக்கியிருக்கிறார்கள்.
ஒரு வென்டிலேட்டரை அமைக்க வேண்டும் என்றால் லட்சம் ரூபாய்க்கும் மேல் செலவாகும். ஆனால் இந்த ஹெல்மெட் வென்டிலேட்டரை உருவாக்க ரூ.1,800 போதும். கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் இந்த ஹெல்மெட் வென்டிலேட்டர் மிக அதிக அளவில் பயன்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
ஐஐடி - புவனேஸ்வரில் பயிலும் மாணவர்கள் உருவாக்கியுள்ள இந்த ஹெல்மெட் வென்டிலேட்டர், மருத்துவ தரத்திலான பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்குள் காற்று செல்ல, காற்றை வெளியேற்ற குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மேல் பகுதியிலும், கீழ் பகுதியிலும் காற்று கசியாதபடி அமைத்திருக்கிறார்கள்.
இதில் பொருத்தப்பட்டுள்ள ஒரு குழாயில் ஆக்ஸிஜன் உள்ளே செல்கிறது. அந்த ஆக்ஸிஜனை சுவாசித்துவிட்டு வெளிவிடும் காற்றை இன்னொரு குழாய், வெளித்தள்ளுகிறது. அவ்வாறு வெளியிடப்படும் காற்று தூய்மையாக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. மருத்துவமனையின் சுவரில் பொருத்தப்பட்டுள்ள ஆக்சிஜன் சிலிண்டர்களின் மூலம் இந்த ஹெல்மெட் வென்டிலேட்டருக்கு ஆக்சிஜன் இணைப்பு தரப்படுகிறது.
மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாசிப்பதற்குத் தேவையான காற்றின் அழுத்தம், ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொருவிதமான அளவில் இருக்கும். சிலருக்கு அதிக அழுத்தமுள்ள காற்றும், சிலருக்கு அதைவிட குறைந்த அழுத்தம் உள்ள காற்றும் தேவைப்படலாம். இந்த ஹெல்மெட் வென்டிலேட்டரில் காற்றின் அழுத்தத்தை நோயாளிக்குத் தேவையான அளவில் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும் வசதி உள்ளது.
இதில் இன்னொரு முக்கியமான சிறப்பு அம்சமும் உள்ளது. இதை அணிந்துள்ள நோயாளியின் மூச்சுவிடும் நிலை எவ்வாறு உள்ளது என்பதைத் தொலைவில் உள்ள மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் தெரிந்து கொள்ள முடியும். அதற்கான இணைய தொடர்புகளைக் கொண்டுள்ள கண்காணிப்பு அமைப்பையும் இந்த வென்டிலேட்டரில் பொருத்தியிருக்கிறார்கள். கரோனா தீ நுண்மி தொற்று அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும் தற்போதைய சூழ்நிலையில், நோயாளிகளின் அருகில் அடிக்கடி மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் செல்வதிலிருந்து இது அவர்களைப் பாதுகாக்கிறது.
சிகாகோ மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பக்தி பட்டேல் என்ற பேராசிரியர், 2016 - ஆம் ஆண்டிலிருந்து ஹெல்மெட் வென்டிலேட்டர் குறித்து ஆராய்ந்து வருகிறார். அவருடைய வழிகாட்டுதலின் கீழ் இந்த ஸ்வாஸ்நெரை மேம்படுத்த இந்த மாணவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.
இந்த ஸ்வாஸ்நெர் ஹெல்மெட் வென்டிலேட்டர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுவாசக் கோளாறுகள் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படும். இதைச் சிறிது மாற்றி மக்கள் கூடும் இடங்களில் பணியாற்றும் காவல்துறையினர், மருத்துவப் பணியாளர்கள் அணிந்து கொள்ளும்விதமாக இந்த மாணவர்கள் வடிவமைத்திருக்கிறார்கள். அவ்வாறு மாற்றி அமைத்த வென்டிலேட்டரில், குழாய் வழியாக ஆக்சிஜன் செல்வதற்குப் பதிலாக வடிகட்டப்பட்ட தூய்மையான காற்று உள்ளே செல்லும். இதை அணிந்து கொண்டு அவர்கள் பணியாற்றும்போது, தூய்மையான காற்றைச் சுவாசிக்க முடியும். காற்றில் கலந்து இருக்கும் கரோனா தொற்றில் இருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.
இந்த ஹெல்மெட் வென்டிலேட்டரை தில்லியைத் தலைமையகமாகக் கொண்ட "ரெஸ்பிரோடெக் மெட் சொல்யூஷன்ஸ்' என்ற நிறுவனம் தயாரிக்க முன்வந்திருக்கிறது.