இளைஞர்மணி

நேபாள கபடி போட்டியில் மேன் ஆப் தி மேட்ச்!

சீமைக்கருவேல மரங்கள் புடைசூழ்ந்த வன்னிவயல் பகுதியில் பெயருக்கு ஏற்றாற்போல சிறியதாக உள்ளது சித்தூர்.

ஜெயப்பாண்டி


சீமைக்கருவேல மரங்கள் புடைசூழ்ந்த வன்னிவயல் பகுதியில் பெயருக்கு ஏற்றாற்போல சிறியதாக உள்ளது சித்தூர். கூலி வேலைக்குப் போய் குடும்பத்தை காக்கும் தந்தை நவநீத கிருஷ்ணன். சித்தூரின் ஊராட்சி மன்றத் தலைவரானாலும் குடும்பத்தலைவியாக குழந்தைகள் நலனில் அக்கறை கொண்ட தாய் ஜெயசித்ரா.  செவிலியராக ஆசைப்பட்டு படித்துவரும் சகோதரி கோசிகாஸ்ரீ என சாமானியக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த டார்வின் என்ற 21 வயது இளைஞர்  தற்போது அந்தக் கிராமத்தில் மட்டுமல்லாது ராமநாதபுரம் மாவட்ட கபடி வீரர்கள் அனைவராலும் ஆச்சரியமுடன் பார்க்கப்படுகிறார்.

சித்தூர் கிராமத் தெரு மணலில் 13 வயதில் ஆரம்பித்த அவரது கபடி விளையாட்டு,  தற்போது நேபாளம் வரை தொடர்வது கனவா, நனவா என அவரை திக்குமுக்காட வைத்துள்ளது. இதுவரை மாநில, தேசிய அளவில் 15 பதக்கங்கள், 20-க்கும் மேற்பட்ட வெற்றிச் சான்றுகள் என குவித்துள்ளார் டார்வின்.

சிற்றூரில் தொடங்கி சர்வதேசத்தை எட்டியது வரையிலான சாதனையை அவர் பிரமிப்புடன் நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து:

""தெருவில் விளையாட்டுத் தனமாக தொடங்கிய எனது கபடி ஆர்வம் பள்ளிகளில் மாவட்ட அளவில் விளையாட வைத்தது. 

மாவட்டக் கபடிப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்ற நான் உடற்கல்வி இளங்கலை படிப்புக்காக காரைக்குடி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சேர்ந்து படித்தேன். பள்ளிப் படிப்பின் போது மாவட்ட, மாநில அளவிலான கபடிப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டிய எனக்கு, கல்லூரி அளவில் வாய்ப்புக்  கிடைக்கவில்லை.

கடந்த 2020 - ஆம் ஆண்டு கரூரில் நடந்த "ஊரக இளைஞர் கபடிக் கழகம்' சார்பிலான கபடிப் போட்டிகளில் பங்கேற்று விளையாடினேன். அதில் சிறப்பாக விளையாடிய எனக்கு மாநில அளவிலான 40 பேர்   பங்கேற்கும் போட்டியில் விளையாடும் வாய்ப்புக் கிடைத்தது.

கரூரில் நடந்த மாநிலப் போட்டியில் 4 ஆவது இடத்தை வகித்த எனக்கு, கோவாவில் கடந்த 2020 - நவம்பரில் நடந்த போட்டியில் தமிழக அணி சார்பில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. தமிழக அணியில் 12 பேர் இடம் பெற்றிருந்தோம். அப்போட்டிகளில் தேசிய அளவில் 7 மாநிலங்களைச் சேர்ந்த 80 கபடி வீரர்கள் விளையாடினோம். 

தமிழக அணி சார்பில் நான் இடம் பெற்ற நிலையில், ஹரியாணா, மகாராஷ்டிரம் ஆகியவற்றை வென்று இறுதியில் கர்நாடகத்தை தமிழக கபடி அணி வென்றது. வெற்றிக்கான புள்ளியில் 10 புள்ளிகளை நான் எடுத்தது அனைவரையும் எனது திறமையின் மீது நம்பிக்கைகொள்ளவைத்தது.

"ஊரக இளைஞர் கபடிக் கழகம்' சார்பில் நேபாளத்தில் 21 வயதுக்கு உள்பட்டோருக்கான கபடிப் போட்டி கடந்த ஜனவரி 21 ஆம் தேதி தொடங்கி நடந்தது. போட்டியில் இந்திய அணி சார்பில் 12 பேர் தேர்வு செய்யப்பட்டதில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரும் இடம் பெற்றோம். அதில் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து நானும், ராமநாதபுரம் நகர் இந்திராநகரைச் சேர்ந்த திவாகரும் இடம் பெற்றோம் என்பது பெருமைக்குரியது. 

இந்திய கபடி அணியில் எங்களைத் தவிர்த்து மகாராஷ்டிராவில் 2, கர்நாடகாவில் 3, ஜம்மு-காஷ்மீரில் 2 என இடம் பெற்றிருந்தனர். இந்தியா, நேபாளம், பூடான் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையேயான இப்போட்டியில் ஒவ்வொரு நாட்டு அணியும் அனைத்து அணிகளுடன் விளையாடும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இறுதிப்போட்டியில் இந்திய அணி நேபாளத்தைச் சந்தித்தது. அப்போது இந்திய அணியானது 60 க்கு 30 என்ற புள்ளிக்கணக்கில் நேபாளத்தை வென்று வாகை சூடியது. இறுதிப் போட்டியில் நானும், திவாகரும் கபடி மேன் ஆப் த மேட்ச் விருதையும் பெற்றுள்ளதுடன், போட்டியின் ஆல் ரவுண்டர் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

நேபாளக் கபடி போட்டியில் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தியதால் வரும் சில மாதங்களில் தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேசக் கபடிப் போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாடவும் எங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. நேபாளப் போட்டியில் பங்கேற்க பொருளாதார வசதி இல்லாத நிலையில் தனியார் நிறுவனம் சார்பில் நிதியுதவியும் அளிக்கப்பட்டது. ஆகவே தெற்காசியப் போட்டியில் பங்கேற்கவும் தனியார் உதவியை எதிர்பார்க்கும் நிலை உள்ளது'' என்கிறார் இந்த சர்வதேச கபடிப்போட்டி வீரர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT