முகப்பு
இளைஞர்மணி

கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 4: சிகரம் தொடு!

"இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன் நினைத்து வாட ஒன்றுமறந்து வாழ ஒன்று!'

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:34 AM
பகிர்:


"இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன் நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று!'

-கண்ணதாசன் பாடல்.

ஆனால் உண்மையில் மனிதனுக்கு இரண்டு மனம் உண்டு. சிந்திக்கும் மனம் ஒன்று, உணர்ச்சிகளின் பிழம்பு மற்றொன்று. மூளையைச் சுமக்கும் தலையில் ஊற்றெடுக்கும் சிந்தனை, இதயத்திலிருந்து பொங்கும் உணர்ச்சிகள் இவை இரண்டும் ஒருவரது ஆளுமையை நிலைநிறுத்துகின்றன.

பள்ளியில் நன்கு படிக்கும் மாணவன் பொறியியல் அல்லது மருத்துவ மேல் படிப்பிற்குச் சென்று என்ஜினியர், டாக்டர் ஆகிறான். கலைக்கல்லூரிக்குச் சென்று பட்டம் பெற்று அரசு தேர்வாணையத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, அரசு உயர் பதவியில் என்ஜினியர், டாக்டர்களை மேற்பார்வையிடும் பதவி பெறுகிறான். வக்கீலுக்குப் படித்து அரசு அதிகாரிகள் இடும் ஆணையை நீதிமன்றத்தில் சவாலிடுகிறான். சிலர் நீதியரசர்களாகிறர்கள்.

கடைசி மதிப்பெண் பெறுபவன், படிப்பு தொடர முடியாமல் ஒரே புகலிடம் என்று அரசியல் களத்தில் குதித்து அரசாளுமை பெற்று, பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்று உயர் பதவி பெற்ற மற்றவர்களை ஆட்டிப் படைப்பதும் உண்டு. பள்ளி படிப்பில் நாட்டமில்லாதவன், சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டு குறுக்கு வழியில் பணக்காரனாகி பண பலம் மூலம் அரசியலை வியாபாரமாக்கி தன் வசப்படுத்துவதையும் அவ்வப்போது பார்க்கிறோம். இது மதிப்பெண்கள் மட்டும் எதிர்காலத்தை உருவாக்காது என்பதை வலியுறுத்தும் ஒரு வேடிக்கையான பார்வை. ஆனால் மதிப்பெண்களும் மதிப்பீடுகளும் தான் சமுதாயத்திற்கு வலிமை சேர்க்கின்றன என்பதை நாம் மறுத்துவிட முடியாது.

இதில் கவனிக்க வேண்டியது ஒவ்வொரு துறையிலும் முன்னேற அறிவாற்றல் மட்டும் போதாது, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறன் அதாவது உணர்வுசார் நுண்ணறிவும் இன்றியமையாதது. அதுதான் வெற்றி, தோல்வியை உறுதி செய்யும்.

அறிவை நிர்ணயிக்கும் குறியீடு இன்டலிஜென்ஸ் கோஷண்ட் ( ஐக்யூ) எவ்வளவு முக்கியமோ அதே போல் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் இமோஷனல் இன்டலிஜென்ஸ் கோஷண்டும் (இக்யூ) முக்கியம்.

டேனியல் கோல்மேன் என்ற நிபுணர், ""ஒருவரின் வெற்றியை 80% நிர்ணயிப்பது உணர்ச்சிகளின் குறியீடே. அறிவுக் குறியீடு 20% தான்'' என்கிறார். மனவலிமைத் திறன் பற்றி ஆய்வு செய்து அவர் எழுதி 1995 -ஆம் ஆண்டு வெளியான புத்தகத்தில் இதைப் பற்றி விரிவாகக் கூறியுள்ளார். அந்த ஆண்டு அதிக அளவில் விற்பனையான புத்தகம் என்று வாசகர்களின் வரவேற்பை அது பெற்றது.

உணர்ச்சிகளின் நுண்ணறிவை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கலாம். முதலில் தன்னைப் பற்றிய உணர்வு; அதன் அதிர்வு அலைகள், அதைப் பற்றிய சரியான புரிதல் அவசியம். நாம் மற்றவர்களைப் பார்த்து நமது வாழ்க்கையை ஒப்பிட்டு நேரத்தை விரயமாக்குவதைத் தவிர்த்து, நமது வலிமைகள் பலவீனங்கள் பற்றி சிந்தித்து அதற்கேற்றாற் போல் நடந்தால் நல்ல மாறுதல் ஏற்படும்.

தற்கொலைகள் நிகழ்வதற்கு தன்னைப் பற்றிய தவறான மதிப்பீடு மற்றும் சுற்றுப்புறத் தாக்கம் காரணமாக அமைகிறது.

நல்ல செய்தி என்னவென்றால் 2017- இல் இருந்து ஒவ்வொரு வருடமும் தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொண்டு அதிக மதிப்பெண்கள் பெற்று வருகிறார்கள் என்பதே 2017-இல் 38.87 சதவிகிதத்திலிருந்து தேர்ச்சி விகிதம் 2019-இல் 48.57 % ஆக உயர்ந்திருக்கிறது. 2020 தேர்ச்சி விகிதம் 57.44%, அகில இந்திய அளவில் 16300 தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தர வரிசையில் ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளார்கள். இந்தியாவில் உள்ள பல "எய்ம்ஸ்' மற்றும் ஜிப்மர் மருத்துவ கல்லூரிகளில் இடம் பிடித்துள்ளார்கள். இது நீட் தேர்வினால் வந்த நன்மை.

இந்தியாவில் உள்ள மத்திய மாநில மருத்துவக் கல்லூரிகளுக்கு தனியே நுழைவுத் தேர்வு தேவையில்லை, நீட் ஒன்றே போதும் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்த நிலையில் இதில் வேறு மாற்றங்களுக்கு இடமில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ளொதிக்கீட்டில் 400 க்கும் மேற்பட்ட அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் மருத்துவப் படிப்புக்குத் தகுதி பெற்றிருக்கிறார்கள். அவர்களது மருத்துவப் படிப்புச் செலவை அரசே ஏற்றிருப்பது வரவேற்கத்தக்கது.

இவையெல்லாம் மாணவர்களின் மன வலிமையால் சாத்தியமானது. இளைஞர்கள் மனவலிமையோடு எதையும் எதிர்கொள்ளத் துணிந்துவிட்டால், "நீட்' தேர்வை அரசியலாக்க முடியாது.

"இ க்யூ'வில் இரண்டாவது அம்சம், நம்மை நாமே சவால்களைச் சந்திக்க மனரீதியாகத் தயார் செய்து கொள்வது. சுவாமி விவேகானந்தர் கூறுவார்: "தினமும் உன்னுடன் சில நிமிடங்களாவது உரையாடு; இல்லாவிட்டால் ஒரு நல்ல மனிதனைச் சந்திக்கும் வாய்ப்பை இழப்பாய்!' இது எவ்வளவு உண்மை! நம்மை பற்றிய சுய மதிப்பீடு நன்றாக இருக்க வேண்டும். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல்; எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற முடிவுகளைத் தவிர்த்தல்; நேர்மையான நடத்தை; மாற்றங்களை எதிர்கொள்ள சரியான மனப்பக்குவம்; புதிய சிந்தனைகளை ஏற்கும் பரந்த மனப்பான்மை இவை எல்லாம் சமமான மன நிலைக்கு செறிவூட்டுகள்.

மூன்றாவதாக, சுய உந்துதலை வளர்க்க வேண்டும். நமக்கு நன்மை பயக்கும் செயலைச் செய்வதற்கு யார் தூண்டுதலும் தேவையில்லை. நாமே செயலாக்கத்தில் இறங்க வேண்டும். எதிர்மறைச் சிந்தனைகளைத் தவிர்த்து எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையூட்டும் விதத்தில் நமது நிகழ்காலத்தை வளம் பெறச் செய்ய வேண்டும்.

"இ க்யூ' வில் நான்காவது முக்கியமான பகுதி, மற்றவர் நலம் பேணும் உயர்ந்த குணம். பிறர் கஷ்டப்படுவதைப் பார்த்து இரக்கப்படுபவர் ஒருவகை. உதவிக்கரம் நீட்டுபவர் ஒரு சிலரே. பொதுச்சேவையில் ஈடுபடுவது, நமது நேரத்தைப் பிறருக்காக ஒதுக்குவது என்பதுதான் மனிதம்.

ஹிட்லரின் ஜெர்மனியில் யூதர்கள் அடைக்கப்பட்ட " வதை முகாம்'களில் பணியாற்றிய படித்த மருத்துவர்கள், செவிலியர்கள், உயர் அதிகாரிகள் அங்கு நடந்த அக்கிரமங்களுக்கும் உயிர் பலிக்கும் உடந்தையாக இருந்தார்களே - "காஸ் சேம்பர்' - விஷ வாயு கொலைகளை நிறைவேற்றினார்களே - அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்? மனிதம் என்ற புனிதத்தைக் கற்பிக்காத கல்வி முறையற்ற கல்வி என்பதல்லாமல் வேறென்ன?

"இ க்யூ' வில் சமுதாய நல்லுணர்வு ஐந்தாவது பாகம். கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் நோபல் பரிசு பெற்ற டேவிட் பால்டிமோர் கூறுவார்: ""ஐவி லீக் எனப்படும் ஹார்வர்ட், ஸ்டான்போர்ட், பாஸ்டன் போன்ற பல்கலைக்கழகங்களில் பயில கடுமையான நுழைவுத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள், பணக்கார, வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. சாதாரண குடும்பத்திலிருந்து வருபவர்கள். அவர்களது வசதி குறைவு. ஆனால் மனநிலையும் ஆற்றலும், ஐக்யூ, இக்யூ இரண்டும் உயர்ந்தது என்பதால் அவர்களால் கடும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முடிகிறது. கஷ்டப்படாமல் இருக்க கஷ்டப்பட்டார்கள். ஆசைகளை தவிர்த்தார்கள். வசதிகளைப் பார்க்காது உழைத்தார்கள். இத்தகையவர்கள் தான் சாதனையாளர்கள்.

அரசுப் பணியிலிருப்பவர் அதிலும் பாதுகாப்புப் பணியில் இருப்பவர் மனதை சமன் நிலையில் வைக்க வேண்டும். அப்போதுதான் வரம்பு மீற மாட்டார்கள். சாத்தான்குளம், சேலம் முருகேசன் அடித்து கொலை போன்ற தலை குனிய வைக்கும் சம்பவங்கள் நிகழாது. உணர்ச்சிகள் நுண்ணறிவு பெற்ற அரசு அதிகாரிகள் ஊழலுக்கு துணை போக மாட்டர்கள்.

"ஒருவரது அறிவுக் குறியீடு 20 வயதில் உச்சத்தை அடைகிறது. அதன் பின் அதே நிலையில் இருக்கிறது . உணர்ச்சிகளின் நுண்ணறிவு அனுபவத்தில் வளர்கிறது. அறிவு வளர்ச்சிக்குத் துணை நிற்கிறது' என்று நியூராலஜி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கூழைக் கும்பிடு போடுபவர்களை உருவாக்குபவன் உண்மை தலைவன் அல்ல. தன் கீழ் தலைவர்களை உருவாக்குபவன் தான் மன வலிமை பெற்ற தலைவன். ""சிங்கத்தின் தலைமையில் கழுதைகள் கூட்டம், கழுதையின் தலைமையில் உள்ள சிங்கங்கள் கூட்டத்தை வீழ்த்தும்'' என்கிறார் கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ்.

தண்ணீரில் மிதக்கும் ஐஸ் கட்டியின் நுனி மேலோட்டமாகப் பார்க்கையில் அதன் ஆழம் தெரியாது. அருகில் போனால் தான் ஐஸ் கட்டி எவ்வளவு ஆழம் தண்ணீருக்கு அடியில் உறைந்திருக்கிறது என்பது தெரியும். அதனால் தான் கப்பலோட்டிகள் பாறை போன்ற ஐஸ் கட்டியைத் தவிர்த்து கப்பலை செலுத்துவார்கள். 1912- ஆம் ஆண்டு டைடானிக் என்ற சொகுசு கப்பல் அட்லாண்டிக் சமுத்திரத்தில் ஐஸ் கட்டி ஒன்றின் மீது மோதி மூழ்கியது. ஐஸ் பாறையின் அளவை மாலுமிகள் சரியாக அனுமானிக்காததால் இந்த பேரிழப்பு ஏற்பட்டது.

டைடானிக் மூழ்கிய சம்பவத்தை வைத்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் எவை என்பது பற்றி பல ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. அதில் ஒன்று மன வலிமை சம்பந்தப்பட்டது. மனம் ஐஸ் பாறையைப் போன்றது. மேலோட்டமாக அதன் ஆழம் தெரியாது. எப்போது உறையும், எவ்வளவு உருகும் என்று சொல்ல முடியாது. ஆழத்தை அனுமானிக்காததால் கப்பல் மூழ்கியது. அதைத் தவிர்க்க, மனதின் ஆழத்தை உணர்ந்து தடைகளை வெற்றிகரமாகக் கடக்க வேண்டும்.

ஓட்டப்பந்தயத்தில் ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்குள் கடக்க வேண்டும் என்ற மிகப் பெரிய சவால், 1866 -ஆம் ஆண்டு முதல் போட்டியாளர்களிடம் இருந்தது. 1954 -ஆம் ஆண்டு தான் இங்கிலாந்தைச் சேர்ந்த ரோஜர் பானிஸ்டர் 3.59 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்தார். இதைத் தொடர்ந்து கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கடந்துள்ளனர். மனவலிமையால் சாதிக்க முடியும் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு.

மன உறுதியோடு சிகரம் தொடுவோம்!

போன வார கேள்விக்குப் பதில்:

நாசா செலுத்திய செவ்வாய் கிரக விண்கலத்தின் பெயர் க்யூரியாசிடி - டா வின்சி நினைவாக!

இந்த வார கேள்வி:

இந்தியாவில் அதிக ஐ க்யூ உடையவர் யார் ?

(விடை, அடுத்த வாரம்)

கட்டுரையாளர்: மேனாள் காவல்துறைத் தலைவர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.