இளைஞர்மணி

கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 2

உலகில் அதிகம் ரசிகர்களை ஈர்க்கும் விளையாட்டு கால்பந்து. கூட்டு விளையாட்டுஎன்பதால் நல்ல சகோதர உணர்வுகளை வளர்க்கிறது,

ஆர். நட​ராஜ்

உலகில் அதிகம் ரசிகர்களை ஈர்க்கும் விளையாட்டு கால்பந்து. கூட்டு விளையாட்டுஎன்பதால் நல்ல சகோதர உணர்வுகளை வளர்க்கிறது, அதே சமயம் போட்டி என்று வந்துவிட்டால்உயிரைக் கொடுத்து தமது அணிக்கு வியர்வை சிந்துவதையும் பார்க்கிறோம். அந்த அளவிற்கு உணர்ச்சிப் பூர்வமான விளையாட்டு .

எந்த ஒரு விளையாட்டுப் போட்டியும் நமக்கு நல்ல வாழ்க்கைப் பாடங்களைப் புகட்டுகின்றது. பெருந்தன்மையோடு வெற்றியை ஏற்பது, துவண்டுவிடாமல் தோல்வியை எதிர்கொள்வது, நடுவரின் தீர்ப்பிற்குப் பணிதல் என்ற மூன்று முக்கிய பாடங்கள் உள்ளன. சிலர் சிறு வெற்றி பெற்றாலும் அலட்டிக் கொண்டு,
அலம்பல் செய்து வெற்றிப் புராணம் பாடுவார்கள். அவர்கள் கீழே விழுவதற்கு வெகு நேரம் ஆகாது! அதே போல் தோல்வி என்பதும் முடிவல்ல; பயணத்தில் ஒரு கட்டம் அவ்வளவே. வெற்றி, தோல்வி புகட்டும் பாடங்களை உணர்ந்து நேர்கோட்டில் கலங்காது முயற்சிகளைத் தொடர வேண்டும். இதைதான் வள்ளுவர், "கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கம் கடிந்து செயல்' என்றார் .

"பெண்டிட் லைக் பெக்காம்' என்று இங்கிலாந்து கால்பந்து வீரர் டேவிட் பெக்காமை வைத்து பிரபலமான திரைப்படம் வந்தது. அவர் பந்தை கிக் செய்வதில், அதுவும் எதிரி கோல் போஸ்ட் அருகில் புதிய யுக்தியை உருவாக்கியவர். கிக் செய்யும்போது பந்து செல்லும் பாதையை எதிரிகளிடமிருந்து வளைத்து, பந்திற்கு ஒரு சுழற்சியும் கொடுத்து, அது சரியாக கோல் போஸ்டில் விழும். அதனால் தான் எந்த ஒரு பணியிலும் பெக்காம் யுக்தி போல் எதிர்ப்புக் கணைகளின் தாக்கத்திலிருந்து வளைந்து வெற்றிப் பாதையை வகுக்க வேண்டும்.

அந்த அளவிற்கு பெக்காம் இங்கிலாந்து நாட்டவரை தனது கால்பந்து சாகசம் மூலம் கவர்ந்தார் .

கால்பந்து உலகத்தில் மிகவும் போற்றப்படும் வீரர்கள் பிரான்ஸ் நாட்டு மெர்சி, செடின் சிடானே, ப்ரேசில் நாட்டு பேலே, அர்ஜண்டினா மரடோனா, போர்ச்சுகல் நாட்டின் ரொனால்டோ ஆகியோர் தங்களுக்கென்று ஒரு பாணியை உருவாக்கி தங்கள் நாட்டுக்குப் பெருமை சேர்த்தார்கள்.

கால்பந்து விளையாட்டு 90 நிமிடம், போட்டியில் ஓர் அணியில் பதினொரு வீரர்கள், இரண்டு அணி சேர்த்து 22 போட்டியாளர்கள், ஒரு பந்து, அதைத் தன் வசப்படுத்தி கோல் போஸ்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்! இதில் தான் எவ்வளவு நூதன முறைகள்! இவற்றை ஆராய்ந்து மற்ற துறைகளுக்கும் கால்பந்து ஆளுமை தரும்பாடங்கள் பொருந்தும் என்று பிரசித்தி பெற்ற மேனேஜ்மெண்ட் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படுகிறது.

"நம்புவதே வழி என்ற மறைதனை நாமின்று நம்பிவிட்டோம்' என்றார் பாரதியார். கடும் பயிற்சி மூலம் தான் எந்த ஒரு குறிக்கோளையும் அடைவோம் என்ற நம்பிக்கை பிறக்கும். விளையாட்டுப் போட்டிகள் மட்டுமல்ல, எல்லாத் துறைகளிலும் தேர்ச்சி பெற கடும் இடைவிடாத முயற்சி தான் மூலதனம்.

""முயற்சி செய்பவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். மேலெழுந்த வாரியாக ஈடுபடுபவர், வெறித்தனத்தோடு முயற்சி செய்பவர், மூன்றாமவர் குறுக்கு வழியில் ஏதோ சாதனை செய்து திருப்தி அடைபவர்'' என்கிறார் "மாஸ்டரி' என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஜார்ஜ்லியோனார்ட்.

சராசரி மனிதர்கள் எல்லாரும் மேலே சொன்ன மூன்று பிரிவில் தான் அடங்குவார்கள். ஒரு கலையில் உச்சத்தை அடைய எல்லாவற்றையும் கடந்த தவம் போன்ற அர்ப்பணிப்பு தேவை. "ஏதோ கடனே‘ என்று நாட்டமில்லாமல் பணியில் ஈடுபடுபவர், இருந்த இடம் பள்ளம் என்று முன்னேறாமல் தோற்றுப் போவார். குறுகிய காலத்தில் தேர்ச்சி பெறலாம் என்று கவர்ச்சிகர விளம்பரங்கள் வருகின்றன. அவை நிலைக்காது. வெறித்தனமாக முனைவதில் ஆரம்ப முன்னேற்றம் இருக்கும். ஆனால் ஒரு கட்டத்தில் சமநிலை அடையும். அப்போது அமைதி காக்க வேண்டும். வெறித்தனம் தொடர்ந்தால் சரிவில் முடியும்.

உச்ச கட்ட தேர்ச்சி என்பது ஒரு நீண்ட பயணம். அதற்கு முடிவே இல்லை.

அந்தக் கால குருகுல வாச பயிற்சியில் அவ்வளவுஎளிதாக மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். மாணவன் ஆசிரியரிடம் சரணடைய வேண்டும். அதுவே மாணவனின் கற்க விழையும் ஆர்வத்திற்குஉரைகல்! இதையே தான் சீனாவின் ஜென் மாஸ்டர்கள் பின்பற்றினார்கள். அதன் மூலம் தான் நிகரில்லா திறம்பட பயின்ற இளைஞர்களை உருவாக்க முடிந்தது.

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி மேடம் க்யூரி, தனது "லெபாரடரிதான் கோயில்; அதில் தான் பரம்பொருளை அனுபவிக்கிறேன்' என்பார். இத்தகைய அர்ப்பணிப்பால் அவர் இயற்பியல், வேதியியல் இரண்டிலும் நோபல் பரிசு பெற்ற ஒரே விஞ்ஞானி என்ற சிறப்பை எய்த முடிந்தது.

உச்சத்தை அடைய அடிப்படை யுக்திகள் ஐந்துஉள்ளன. முதலில் எடுத்துகொண்ட பணி அல்லதுபாடத்தில் தேவையான அறிவுறுத்தல்களை முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். தேவையானால் நல்ல ஆசானை தெரிவு செய்து அவரின் வழிகாட்டுதலில் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
அடுத்த கட்டம், திட்டமிட்ட பயிற்சி. பயிற்சியில் வியர்வை சிந்த வேண்டும். அப்போதுதான் நாம் செய்ய வேண்டியவை ரத்த நாளங்களில் பதியும். பயிற்சியின் நடுவே ஓய்வும் சரியான உணவு, தியானம் அவசியம். அதுதான் சிந்தனை வளத்திற்கு வழிவகுக்கும்.

மூன்றாவதாக, தொடர்ச்சியாக நோக்கங்களை உயர்வாக வைக்க வேண்டும். மனதை அலையவிடக் கூடாது. உள்நோக்கம் தெளிவாக இருக்க வேண்டும். பல இடையூறுகள் வரும். ஆனாலும் தொய்வில்லாமல் குறிக்கோளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

நான்காவது, சரணாகதி. எடுத்துக் கொண்ட பணியோடு ஒன்றி விடுவதே ஒரே வழி. இந்த சரணாகதி வெற்றிப் பாதையைச் சுலபமாக்கும்.

ஐந்தாவது, பணியின் முடிவில் உச்சத்தின் விளிம்பில் முழுமையாக நமது சக்தியைச் செலுத்த வேண்டும். ஓட்டப் பந்தயத்தில் பார்த்திருக்கிறோம். வெற்றி கயிற்றை கடப்பதற்கு போட்டியாளர்கள் முழு வீச்சில்ஓடுவார்கள். அதேபோல் முக்கியமான தேர்வு நாளில்முழுகவனம் செலுத்தி உள் வாங்கிய எல்லாத் தகவல்களையும் கொட்டி விட வேண்டும்.

எல்லாருக்கும் ஒரேவிதமான புரிதல் இருக்காது.கற்றுக் கொள்வது வித்தியாசப்படும். சிலர் படித்ததை உடனே கிரஹித்துக் கொள்வார்கள். வேறு சிலருக்கு உள்வாங்குவதற்கு நேரம் பிடிக்கும். எடுத்த காரியம் கொடுக்கக் கூடிய பலன் அடிப்படையில் சிலர் அணுகுவார்கள். இதை ஜென் அறிஞர்கள் குதிரை ஓட்டத்தோடு ஒப்பிடுவார்கள். வேகமாக ஓடுபவை சிறந்தவை,

அடுத்தது நல்ல வகை, மூன்றாவது சாதாரண வகை, கடைசி மோசமானவை என்று நான்கு வகை குதிரைகள். வேகமாக ஓடுபவை, ஓட்டுபவரின் சவுக்கின் நிழல் பட்டாலே ஓடும். அடுத்த வகை, சவுக்கு தோலுக்குஅருகில் வந்தவுடன் வேகத்தை அதிகரிக்கும்.

மூன்றாவது, சவுக்கு அடி பட்டால் தான் ஓடும். மோசமான வகை, சவுக்கு அடி எலும்பு வரை உறைத்தவுடன் தான் ஓட தொடங்கும்!

மேலே கூரிய ஜென் உதாரணத்தில் ஒரு முக்கிய கருத்து அடங்கியிருக்கிறது. கற்பது எளிதாகி விட்டால், மேலும் முயற்சி செய்வதற்கான உந்துதல் இல்லாமல் போகும், உச்சத்தை அடைய முடியாது. திரும்பத் திரும்ப அடிபட்ட குதிரை திடீரென்று தறி கெட்டு ஓடும் சக்தி பெறும். எது மோசமான குதிரை என நினைக்கிறோமோ, அதுவே நல்ல குதிரையாக மாறக்கூடும், புடம் போட்ட தங்கம் போல! நல்ல திறமை உள்ளவரும் தன் திறனின் முழு சக்தியை உணர, திறன் குறைந்தவர் எடுக்க வேண்டிய முயற்சிக்கு நிகராக, இடைவிடாது உழைக்க வேண்டும். அதிலிருந்து தப்ப முடியாது!

இதில் வழிநடத்துபவர் அல்லது ஆசிரியரின்பொறுப்பும், அவரது ஈடுபாடும் முக்கியம். அந்த ஈடுபாடு தனக்குக் கீழ் வேலை செய்யும் பணியாளர்களின் முழு பலனை வெளிக்கொணர்வது அல்லது ஆசிரியர்என்றால் மாணவர்களைக் கற்றலில் முழு கவனம் செலுத்த வைப்பது மூலம் வெளிப்படும்.

அமெரிக்காவில் சிறந்த கணித ஆசிரியராகப் பரிசு பெற்றவர் செய்த ஒரே யுக்தி, விரிவான விடை எழுதுகையில் ஒரு தவறைப் புகுத்துவார். மாணவர்கள் ஆர்வத்தோடு அதைக் கவனித்து, தவறைக் கண்டுபிடிக்கவேண்டும். எல்லா மாணவர்களின் கவனத்தையும் ஒளிந்திருக்கும் தவறு மூலம் ஈர்த்து, வெற்றி கண்ட கனவுஆசிரியர், போற்றுதலுக்குரியவர் அல்லவா!

கடவுள் எல்லாரையும் அறிவாளிகளாகத்தான் படைத்திருக்கிறான். நாம் அன்றாடம் செய்யும் சராசரிபணிகள் மிக நூதனமான கம்ப்யூடராலும் செய்ய முடியாது. முழு வீச்சில் முயற்சி செய்தால் சாதிக்க முடியாதது, ஒன்றுமில்லை. ஆனால் அது நீண்ட பயணம். நிதானம், பொறுமை தேவை. அவசர உலகில் எல்லாம் நின்ற இடத்திலேயே விழ வேண்டும்; குறுக்கு வழியில் உடனடி பலன் அடைய வேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கியிருக்கிறது. தேர்ச்சி பெற்று உச்சத்தை அடைவதற்குபயணத்தின் நடுவே முடங்கும் தன்மைக்கு எதிரான போராட்டத்தை நடத்த வேண்டும்.

"வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்.
துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்'

என்ற கண்ணதாசன் பாடலுக்கு உதாரணமாக, ஆறு வயதே நிரம்பிய இரான் நாட்டை சேர்ந்த அராத் ஹுசைனி என்ற சிறுவன் கால்பந்து விளையாட்டில் சாதனை புரிந்து கொண்டிருக்கிறான். அவன் எடுக்கும் பயிற்சியைப் பார்த்தால் தலை சுற்றும். அவனது தந்தை அவனை சிறந்த கால்பந்து வீரனாக்க தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.

வெறுங்கை என்பது மூடத்தனம்- உன்
விரல்கள் பத்தும் மூலதனம்
கருங்கல் பாறையும் நொறுங்கிவிழும்
உன் கைகளில் பூமி சுழன்று வரும்

இளைஞர்களே, சாதிக்கப் பிறந்தோம். சாதித்துக் காட்டுவோம்!

போன வார புதிருக்கு விடை:

சராசரி மனிதன் மூளை எடை 1.4 கிலோகிராம்

30 வயது அமெரிக்கரின் மூளை 2.5 கிலோகிராம் (கின்னஸ் ரெகார்ட் 1992 )
ரஷிய எழுத்தாளர் டர்கனேவ்(1818-83) அவரது மூளை எடை2.012 கேஜி.
இந்த வார கேள்வி: கால்பந்து வீரர் "பேலே' முழு பெயர் என்ன? பேலே என்ற பெயர் எப்படி வந்தது?

(விடை, அடுத்த வாரம்)

கட்டுரையாளர் : மேனாள் காவல்துறைத் தலைவர் மேனாள் சட்ட மன்ற உறுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT