இளைஞர்மணி

முந்தி இருப்பச் செயல் - 40: ஆளுமைத் திறன்

ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும் வகுத்த சில தேர்வுமுறைகளைப் பின்பற்றி, மொழித்திறன் மற்றும் தர்க்கத் திறனின் அடிப்படையில் மட்டுமே நம்முடைய அறிவின் அளவைக் கணித்த காலம் மலையேறிவிட்டது.

சுப. உதயகுமாரன்

ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும் வகுத்த சில தேர்வுமுறைகளைப் பின்பற்றி, மொழித்திறன் மற்றும் தர்க்கத் திறனின் அடிப்படையில் மட்டுமே நம்முடைய அறிவின் அளவைக் கணித்த காலம் மலையேறிவிட்டது. மனித மூளை பல்வேறு அறிவுகளைப் பெற்றிருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் ஒவ்வோர் அறிவில் சிறந்து விளங்குகிறோம் எனும் உண்மையை நாம் இப்போது ஏற்றுக் கொண்டிருக்கிறோம். 

ஆற்றல்மிக்க ஓர் ஆளுமை உடலில் பலம் கொண்டவராக, மனத்தில் ஒளியுடையவராக, குணநலன்களில் காத்திரமானவராக இருத்தல் வேண்டும். பாரதியார் அழைக்கிறார் பாருங்கள்:

ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா 
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா 
களிபடைத்த மொழியினாய் வா வா வா 
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா 
தெளிமை பெற்ற மதியினாய் வா வா வா 
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா 
எளிமைகண் டிரங்குவாய் வா வா வா 
ஏறுபோல் நடையினாய் வா வா வா 

கண், நெஞ்சு, தோள், நடை என அனைத்துமே உடல் நலம் மற்றும் பலம் தொடர்பானவை. "சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்' என்றறிந்த இன்றைய இளைஞர்களும், இளம்பெண்களும் உடல்நலம் போற்றும் திறனும், தோற்றப் பொலிவைக் காக்கும் திறனும் கொண்டவர்களாகவே  திகழ்கின்றனர்.  

புறத்தூய்மை நீரான் அமையும் அகத்தூய்மை
வாய்மையால் காணப்படும்

என்று வள்ளுவம் வகுப்பது போல, புற ஆளுமை இனிமையாலும், அக ஆளுமை வாய்மையாலும் அமைந்தாக வேண்டும். 

புற ஆளுமை உங்கள் நடை, உடை, பாவனை போன்றவற்றை உள்ளடக்கியது. "நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச் செருக்கு' எனும் பாரதியின் சீர்மிகு விழுமியங்களைத்தான் "நடை' என்கிற ஒற்றைச் சொல்லால் நாம் குறிக்கிறோம். நடை என்பது உங்களை நீங்களே நடத்தும் பாங்கே அன்றி வேறல்ல. தன்னம்பிக்கை, தைரியம், நிறைவு, மகிழ்ச்சி போன்ற நேர்மறைக் குணங்கள் ததும்பி நிற்கும்படி பார்த்துக் கொள்வதே நடை. 

ஓர் ஆற்றல்மிகு ஆளுமைக்கு நடை போலவே உடையும் மிக முக்கியமானது. அதனால்தான் "ஆள் பாதி, ஆடை பாதி'  என்று சொல்கிறோம். எளிய, இனிய, காலநிலைக்கேற்ற, சூழலுக்கேற்ற, கண்ணியமான ஆடைகளை அழகுற அணியுங்கள். உங்களின் உடைதான் உங்களை ஒருவருக்கு முதலில் அறிமுகப்படுத்துகிறது. "முதற்கோணல் முற்றிலும் கோணல்' என்றாகிவிடும் அபாயம் இருப்பதால், ஆடைகள் விடயத்தில் அவசியம் கவனம் செலுத்துங்கள். 

நடை, உடை போல, பாவனைகளும் மிகவும் முக்கியமானவை. நம்முடைய பாவனைகள் பிறரின் அன்பையும், மரியாதையையும் பெற்றுத் தரும் வகையில் அமைவது மிகவும் முக்கியமானது. ஏற்றுக் கொள்ளத்தக்க மற்றும் ஏற்றுக் கொள்ளத் தகாத நடவடிக்கைகளை உங்களின் பொது அறிவே உங்களுக்குப் புலப்படுத்தும்.

"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. அக ஆளுமை ஆழமானதாய் அமைந்தாலும், புற ஆளுமை முகத்தில் மிளிர்வதை நாம் அறிகிறோம். ஒருவரின் தனிமனித நடத்தையும், பண்பாட்டுப் பரிவர்த்தனைகளும் கலந்து விரவி வெளிப்படும் "சமூக நயம்' (சோசியல் கிரேஸ்) என்பது முகத்தில் மையம் கொண்டிருப்பதை எளிதில் உணரலாம். 

முதலாவது, கண். கண்களைப் பார்த்துப் பேசுவது கருத்துப் பரிமாற்றத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருவர் நம் கண்களைப் பார்த்துப் பேசவில்லை என்றால், அதை ஓர் அவமரியாதையான  செயலாக, அந்த மனிதரை நம்பகத்தன்மை அற்றவராகப் பார்க்கும் போக்கு உலகின் பல கலாசாரங்களில் காணப்படுகிறது. ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது, கண்களால் கவனமாய் அவதானிப்பது அனைவராலும் விரும்பப்படுகிறது. 

கண்களை அலைய விடுவது ஈடுபாடின்மையை கோடிட்டுக் காட்டுகிறது. அதேபோல, எதிர்பாலரோடு உரையாடும்போது, கழுத்துக்குக் கீழே பார்க்காமல் இருப்பதும் மிகவும் முக்கியமானது. 

இரண்டாவது, காது. ஒருவர் பேசும்போது, கவனமாகக் கேட்பதும், கேட்பதை உரிய முக்கியத்துவத்தோடு உள்வாங்குவதும், உள்வாங்குவதை உரியவருக்கு உணர வைப்பதும் உங்களை மிகவும் விரும்பப்படுகிறவராக, வெற்றிகரமானவராக மாற்றும் வல்லமை கொண்டவை. 

மூன்றாவது வாய். இனிய வார்த்தைகளைத் தேர்ந்து, உரிய அர்த்தங்களோடு கோர்த்து, தெளிவாக, இனிமையாக, திறமையாகப் பேசுவது மிகவும் முக்கியமானது. 

நான்காவது மூக்கு. வாய் நாற்றம், வியர்வை நாற்றம், துர்நாற்றம் ஏதுமின்றி எதிரே நிற்பவரை முகம் சுளிக்க வைக்காமல் இருப்பதும், இதமான, மிதமான நறுமணங்களைக் கமழச் செய்வதும் சிறப்பானவை. 

ஐந்தாவது, மூளை. இங்கேதான் சிந்தித்தல், நினைத்தல், கவனித்தல், கருத்தூன்றல் என ஏராளமான வேலைகள் நடக்கின்றன. ஓர் ஆளுமையாக விளங்குவதற்கு சிந்தனையார்ந்த செயல்பாடுகள் இன்றியமையாதவை. 

இவற்றுள் மிக முக்கியமானவை மூன்று சொற்களும், அவற்றின் பின்னாலிருக்கும் உணர்வுகளும்தான். "நன்றி', "தயவுசெய்து', "மன்னித்துக்கொள்ளுங்கள்' எனும் மூன்று சொற்களை தேவைப்படும்போது உங்கள் பேச்சில் பயன்படுத்தத் தவறாதீர்கள். வெறும் வார்த்தைகளாக மட்டுமின்றி அவற்றில் புதைந்திருக்கும் உணர்வுகளையும் உண்மையாக உணர்ந்து வெளிப்படுத்துங்கள். 

உங்கள் தோழர்கள், உடன் பணிபுரிவோர் என அனைவரின் பெயர்களையும் நினைவில் வைத்திருங்கள். 

அப்போது அவர்களுக்கு உங்கள் மீது ஓர் இனம்புரியாத அணுக்கமும், அந்நியோன்யமும் ஏற்படுகின்றன. இம்மாதிரியான நினைவாற்றல் உங்கள் ஆளுமைக்கு மேலும் மெருகூட்டுகிறது. 

தமிழ்நாட்டிலோ, இந்தியாவிலோ அல்லது வெளிநாடுகளிலோ எங்கே பயணம் சென்றாலும், அந்தந்த ஊர் கலாசார நுணுக்கங்களை அவசியம் கவனியுங்கள். ஒரு சிறு தவறு பேரிழப்பை, பெரும் நட்டத்தை உண்டாக்கலாம்.

ஓர் அமெரிக்க வர்த்தகர் ஒரு முக்கியமான வியாபார ஒப்பந்தம் செய்வதற்காக சவூதி அரேபியா நாட்டுக்குச் சென்றாராம். வியாபாரரீதியில் பேரப்பேச்சு வெற்றிகரமாக அமைந்தாலும், அந்த அரபிக்கு அமெரிக்கரைப் பிடிக்காமல் போனதால் ஒப்பந்தம் கைகூடவில்லை. 

இருவரும் அருகருகே அமர்ந்திருக்கும்போது, அமெரிக்கர் தனது ஒரு காலை இன்னொரு காலின் மீது போட்டு உட்கார்ந்திருந்தார். அந்த காலில் அணிந்திருந்த செருப்பின் அடிப்பாகம் அரபியை நோக்கி இருந்தது அவருக்கு எரிச்சலையும், கோபத்தையும் அளித்தது. அவருடைய அரேபிய  கலாசாரத்தில் அது பெரும் அவமரியாதையாகக் கருதப்படுகிற நடவடிக்கை என்பதை அமெரிக்கர் உணராததுதான் பிரச்னை. 

உங்கள் நடவடிக்கைகளில், தனிமனிதப் பரிவர்த்தனைகளில் கருத்தூன்றி செயல்படுங்கள். நீங்கள் எதிர்கொள்ளும் அனைவருக்கும் மரியாதை கொடுங்கள். அனைவரையும் ஏற்ற தாழ்வுகள் இன்றி சமமாக நடத்துங்கள். சாதி, மதம், இனம், மொழி, பால், பாலியல் போன்ற வேறுபாடுகளை முற்றிலுமாகப் புறந்தள்ளி, மாந்தநேயத்தோடு மனிதர்களைக் கையாளுங்கள். 


மேற்குறிப்பிட்ட புற ஆளுமைத் திறன்களைவிட, 
அக ஆளுமைத் திறன்கள் இன்னும் நுண்மமானவை, 
முக்கியமானவை. முதலில், இந்த அகமும்  புறமும் 
ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து இரண்டறக் கலந்து இயல்பானதாக, உண்மையானதாக இருக்கும்படி  பார்த்துக் கொள்ளுங்கள். 

"தன்னெஞ்சறிவது பொய்யற்க' எனறுரைக்கிறது 
வள்ளுவம். உள்ளே இருப்பதே வெளியே  பரிணமிக்
கட்டும்; அதேபோல, வெளியே  தெரிவதே உள்ளே ஊன்றி வளர்க்கப்படட்டும்! 

நேர்மறை மனப்பான்மையோடு வாழ்வை, வாழ்வியல் பிரச்னைகளை, சக மனிதர்களை, சந்தர்ப்பங்களை எதிர்கொள்ளுங்கள். "எனக்கேன் இப்படியெல்லாம் நடக்கிறது?' என்று சுய இரக்கம் கொள்வது, "நான் பாக்கியம் இல்லாதவன்' என்று பரிதாபம் கொள்வது பெருந்தவறு. நேர்மறையான அணுகுமுறைதான் நேர்மறையான 
விளைவுகளை ஏற்படுத்தும். 
உள்ளார்ந்த மன நிறைவு மற்றும் மகிழ்ச்சிக்கு 
முதலிடமும், முன்னுரிமையும் கொடுங்கள். பணம், பதவி, பட்டங்கள், பெயர், புகழ் போன்றவற்றுக்குப் பின்னால் அலைபவர்கள் பெரும்பாலும் தங்களைப் 
பற்றிய பாதுகாப்பு உணர்வற்றவர்களாகவே இருப்பதைக் 
காணலாம். 
இரக்கமும், கருணையும் கொண்டவராக, பணிவும், பொறுமையும் உடையவராகவே இருங்கள். இவை வேறு யாரையும் மகிழ்விப்பதற்காக அல்லாமல், நமக்காக நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்பதை உணருங்கள். 
உங்கள் வாழ்வுக்கான அர்த்தத்தை அறிந்து கொள்ளுங்கள்; குறிக்கோளைக் கண்டுணருங்கள். அதன்பிறகு கவியரசு கண்ணதாசன் சொல்வதே உங்களின் தாரக மந்திரமாகட்டும்:
போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்
தூற்றுவார் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன்
ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன், அஞ்சேன்!

 (தொடரும்)

கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.
தொடர்புக்கு: hotmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT