இளைஞர்மணி

கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 13: எல்லையில்லா ஆனந்தம்!

உலகமே சந்தோஷமாக இருப்பவர்களைப்  பின் தொடர்ந்து செல்கிறது என்பது நிதர்சனமான உண்மை.

ஆர். நட​ராஜ்

உலகமே சந்தோஷமாக இருப்பவர்களைப்  பின் தொடர்ந்து செல்கிறது என்பது நிதர்சனமான உண்மை. எப்போதும் குறை சொல்லிக் கொண்டும், பொய், பித்தலாட்டங்களில் உழன்று கொண்டிருப்பவர்களைப் பார்த்து அஞ்சத் தோன்றுமே ஒழிய, அவர்களை நேசிக்கத் தோன்றாது. 

உலகிலேயே சந்தோஷமான மனிதரை சர்வதேச அமைப்பு  ஒன்று, அடையாளப்படுத்துகிறது. 

சந்தோஷம் வாழும் இடத்தில் இல்லை; வாழும் விதத்தில்தான் உள்ளது. இமாலய மலை அடிவாரத்தில்  உள்ள திபேத் பிரதேசத்தில் வாழும் பிரான்ஸ் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட  69 வயதான  மேத்யூ  ரிகார்ட்  என்ற  புத்த பிக்ஷý தான் உலகிலேயே சந்தோஷமான மனிதர்!

"நன்றி' என்ற சொல்லுக்கு  ஒரு படி மேலாக "மகிழ்ச்சி' என்ற சொல் பிரபலமாகி விட்டது. மகிழ்ச்சி  நமது வாஞ்சையை அழகாக  வெளிப்படுத்துகிறது. "கபாலி' படத்தில் ரஜனிகாந்த் "மகிழ்ச்சி' என்று சொல்லும் போது நம்மை அறியாமல் நல்லுணர்வு படர்கிறது. உணர்ச்சிகளின் கணிதம் அலாதியானது.துக்கத்தைப் பகிர்ந்தால் வகுத்தலுக்கு இணையாக குறையும். சந்தோஷத்தைப் பகிர்ந்தால் பெருக்கலுக்கு இணையாகப் பெருகும்!  

அமெரிக்க விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தின் நியூரோ சயின்ஸ் விஞ்ஞானி ரிச்சர்ட் டேவிட்சன் என்பவர் மேத்யூ ரிகார்டின் மூளையை சென்சார் மூலம் தொடர்ந்து பன்னிரண்டு வருடங்களாக அவர் தியானத்தில் இருக்கும்போது கண்காணித்து மூளையிலிருந்து வெளிப்படும் அதிர்வலைகளைச் சோதனை செய்தார். இதற்கு 256 சென்சார்கள் அவரது மூளையில் இணைக்கப்பட்டன.

சோதனையில் வெளிப்பட்ட முடிவுகள் மேத்யூ ரிகார்ட் எந்த நிலையிலும் பதற்றமில்லாமல் இருப்பதால், மூளையின் சமமான சீரான இயக்கத்தைக் கணிக்க முடிந்தது. அதன் அடிப்படையில் மேத்யூ தான் உலகத்திலேயே  உயர்ந்த சந்தோஷ நிலையில் வாழ்கிறார் என்று முடிவு செய்யப்பட்டது.

ஒருவர் தன்னைப் பற்றியும் தனக்கு எற்படும் பிரச்னைகளைப் பற்றியும்   நேரம், காலம் பாராது சிந்திக்கையில் மன அழுத்தம் விளைகிறது. நினைத்தது நடக்காவிட்டால் உலகமே தனக்கு எதிராகச் சதி செய்வது போன்ற பிரமை உண்டாகிறது. அல்லது ஏதாவது அனுகூலமாக நடந்தால் உலகமே தனக்காக இயங்குகிறது என்ற அகம்பாவம் தலைதூக்குகிறது. இவை இரண்டுமே சந்தோஷத்திற்கு தடைகள் என்கிறார் மேத்யூ ரிகார்ட். 

கருணையான மனோபாவம் தான் மனதைச் சம நிலைக்குக் கொண்டு வரும். நாம் அன்பு பாராட்டினால் மற்றவர்களும் அன்போடு பழகுவார்கள்.அதே நேரத்தில் நமது நேர்மையை மற்றவர்கள்  அவர்களது  சுய லாபத்திற்குப் பயன்படுத்த முயன்றால் அதனைப் புரிந்துகொண்டு தவிர்க்க வேண்டும். 

நமது மனம் நல்ல எண்ணங்களின் அடைக்கலமாக இருந்தால் உடல் புத்துணர்ச்சி  பெறும்; ஆரோக்கியம் வளரும். "இனிய உள்ளத்தில் கனிவான பேச்சு இயல்பாக வரும். நம்மைச் சுற்றி அமையும் சௌக்கியமான ஒளி வளையம் எல்லாரையும் காந்தமாக அரவணைக்கும்.

வாழ்க்கையில்  எல்லாவற்றிற்கும் பயிற்சி அவசியம். மாரத்தான் ஓட்டம் 26 கிலோ மீட்டர் ஓடணும் என்றால் ஓடிப் பழக வேண்டும். அது போல சந்தோஷமாக இருக்கவும் நம்மைப் பழக்கிக் கொள்ள முடியும். 

சிலர் இருக்கிறார்கள்: எந்த நிலையிலும் நிதானத்தை இழக்காமல், கூட இருப்பவர்களுக்கு தைரியம் கொடுத்து  ஆனந்தமான சூழலை உருவாக்குவார்கள். 

சந்தோஷத்தைப் பழக்குவதற்கு ஒரே வழி  தியானம்.  மனதைக் கட்டுப்படுத்தி, மகிழ்ச்சியான காட்சி  நினைவுகளை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். 

தியானிக்கும்போது மூச்சை இழுத்து விட வேண்டும். 

உடலைச் சுத்தம் செய்ய தண்ணீர் விட்டு அழுக்குகளை நீக்குகிறோம். மனதில் இருக்கும் அழுக்குகளை எவ்வாறு நீக்குவது? தியானத்தில் மூழ்கினால் மனதில் உள்ள மாசு நீங்கும். ஒரு நாளைக்கு இருபது நிமிஷம் தியானம் செய்தாலேபோதும்,  வாழ்நாள் பூராவும் சந்தோஷம் பெறலாம் என்று விஞ்ஞானரீதியாக, நியூரோ சயின்ஸ்  ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட சந்தோஷமான மனிதர் மேத்யூ ரிகார்ட் மூலம் நிரூபணமாகியுள்ளது. ஞாபக சக்தியை வளர்க்க இளைஞர்கள் தியானப் பயிற்சியை மேற்கொண்டால் தேர்வுகளைத் திறமையுடன் சந்திக்கலாம்.

கரோனா தொற்று தாக்குதலால், தனி மனித சந்தோஷம்  அவசர உலகின் சிக்கலில் சிக்கியிருக்கையில், ஒரு நாட்டின் சந்தோஷ அளவு எப்படி இருக்கும்? வருடா வருடம் ஒவ்வொரு நாட்டின் சந்தோஷக் குறியீடும் அளக்கப்படுகிறது. மார்ச் 20 - ஆம் நாள் "சர்வதேச சந்தோஷ  தினம்' அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு இந்த நாளில் உலக நாடுகளின் சந்தோஷ நிலையைத் தெரிவு செய்து அறிக்கை வெளியிடுகிறார்கள். 

தொடர்ந்து நான்கு வருடங்களாக சந்தோஷநிலையில் பின்லாந்து நாடு முதலிடம் வகிக்கிறது. இரண்டாவது ஐஸ்லாந்த்.  மூன்றாவது இடம் வகிப்பது டென்மார்க்.2012 - ஆம் ஆண்டிலிருந்து ஐநா சபை இத்தகைய கணக்கெடுப்பு எடுக்கிறது. உலகமே கரோனா அலையில் தவிக்கையில் மக்கள் மனநிலை எவ்வாறு இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது. கடந்த ஒரு வருடத்தில் சுமார் 26 லட்சத்திற்கும் மேலாக மக்கள் கரோனா அரக்கனுக்குப் பலியாகியிருக்கிறார்கள். கரோனா தடுப்பு விதிகள் காரணமாக நேரடியாக மக்களைத் தொடர்பு கொள்ள முடியாது. ஆயினும் இந்த ஆய்வு, தொழில்நுட்ப உதவியோடு கரோனாத் தொற்றை மக்கள் சமாளித்தது; கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைத்த விதம், இதன் அடிப்படையில் நடத்தி முடிக்கப்பட்டது.

வாழ்வாதாரத்தை இழந்து மனமும் உடலும் பாதிக்கப்பட்ட நிலையில், மக்களிடம் நலமான உணர்வுகள் எவ்வாறு இருக்கும்? ஆச்சரியத்துக்குரிய முடிவு என்னவென்றால், பெரும்பாலான நாடுகளில் மக்கள் கரோனா தொற்றை மன உறுதியுடன் எதிர்கொண்டுள்ளார்கள். 
உலகமே பாதிக்கப்பட்டிருந்ததால் ஒருவித ஒற்றுமை உணர்வும் பரஸ்பர சகோதரத்துவமும்  நாடுகளிடையே வளர்ந்துள்ளது என்று இந்த வருட அறிக்கை குழுவில் இருந்த பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர் ஜான் ஹல்லிவெல் கூறுகிறார்.
2015 -ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை நிலையான  அபிவிருத்திக்கான இலக்குகளை எல்லா நாடுகள் அடைய வேண்டும் என்ற குறிக்கோளை முன் வைத்தது. அதில் கல்வி, மருத்துவம், சுகாதாரம், வாழ்வாதாரம், மனித வள முன்னேற்றம்,  சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு, வன பாதுகாப்பு  போன்ற பல்வேறு துறைகளுக்கான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன.  உலக மக்கள் அமைதியான சூழலில் சந்தோஷமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே இதன் அடிப்படை நோக்கம். ஐக்கிய நாடுகள் நிலையான அபிவிருத்தி தீர்வுகளுக்கான கூட்டமைப்பு மேற்படி சந்தோஷக் குறியீடுகளை ஆராய்கிறது.
2020 -21  ஆசிய நாடுகள் எதிர்பார்த்ததை விட நன்றாகவே கரோனா தொற்றைச் சமாளித்திருக்கின்றன. மேலை நாடுகளைக் காட்டிலும் கடுமையான கரோனா தடுப்பு விதிகள் ஆசிய நாடுகளில் அமல்படுத்தப்பட்டன.  மக்கள் நலனுக்காக தொற்றை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது என்ற நல்லுணர்வு மக்களிடம் மன அமைதியை ஏற்படுத்த காரணமாகியுள்ளது  என்பது ஆய்வில் தெரிய வந்தது.
ஒட்டு மொத்த மக்களின் மகிழ்ச்சி நிலை உலக நாடுகளிடையே இந்தியாவின் இடம் 139. ஐந்து இடம் 2020 -ஆம் ஆண்டைவிட  முன்னேற்றம்! பாகிஸ்தான் 105, சைனா 84. இந்தியாவைக் காட்டிலும் முன்னிலையில் இருக்கிறார்கள் என்பது இந்தியாவில் ஊடகங்களில் எதிர்மறை விமர்சனங்களின் விளைவாக உண்மை நிலவரம் மங்கியது  என்பது இதற்கு காரணமாக இருக்கலாம். பணக்கார நாடான அமெரிக்கா 19 - ஆவது இடம், ஐந்து புள்ளி இறங்கியுள்ளது. பணம் மட்டும் சந்தோஷத்தைத் தராது என்பதற்கு இது ஒரு சான்று! 
மகாபாரத காலத்தில் துவாபரயுகத்தில் ஆப்கானிஸ்தான் அகண்ட பாரதத்தின் அங்கமாக இருந்தது. கௌரவர்களின் தாய் காந்தாரி, கந்தகார் தேச இளையராணி. பாரதப் போருக்கு காரணமான சகோதரன் சகுனி,  ஆப்கானிஸ்தானை ஆண்டவன். போரில் மகன்களை இழந்த காந்தாரி தனது சகோதரனையும் அவனது நாட்டையும் சபித்ததாக புராணம். அப்போது அந்த நாட்டின் பெயர் "அவகன் ஸ்தான்'. அதற்கு அர்த்தம் கெட்டுப்போன நாடு என்று பொருள். அதற்கேற்றாற் போல் அங்கு தொடர்ந்து நடக்கும் பயங்கரங்களுக்கு முடிவே இல்லை. சந்தோஷக் குறியீட்டின் கடைசியில் இருக்கும் நாடு ஆப்கானிஸ்தான். அதற்கு அடுத்தாற் போல் சிம்பாப்வே, ரவாண்டா , போட்ஸ்வானா! 
எப்போது, எங்கு, குண்டு பாயுமோ என்று பயந்து கொண்டிருந்தால் எப்படி மக்கள் சந்தோஷமாக இருக்க முடியும்?  பயங்கரங்கள் எல்லாம் மதக் கோட்பாடுகள் என்ற அடிப்படையில் என்பதுதான் வேதனை. மத போதகர்களா, பாதுகாவலர்களா அல்லது மத பாதகர்களா, ஆயுதம் தாங்கி ஆட்சியைப் பிடித்த தாலிபான்கள்? சில வருடங்களுக்கு முன் வேற்று மதச் சின்னங்களை தாலிபான் தீவிரவாதிகள் தகர்த்தனர். அதில் பிரம்மாண்டமான புத்தர் சிலையும் உடைக்கப்பட்டது. 
1919 - ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆளுகையிலிருந்து விடுபட்டு சுதந்திர நாடாகத் திகழ்ந்த ஆப்கானிஸ்தானுடன் இந்திய தலைவர்கள் நல்லுறவு பாராட்டினர். தமிழ் மக்கள் "பட்டாணிக்காரர்' என்று வியாபார நிமித்தமாக வந்த பக்தூன்நாட்டவரை அழைத்து மகிழ்ந்தனர். ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் கதை "காபூலிவாலா' என்ற பிரபலமான படமும் 1961 -இல்  வந்தது. நிறைய வளர்ச்சிப் பணிகளை ஆப்கானிஸ்தானில் இந்தியா தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. தீவிரவாதப் பிடியிலிருந்து ஆப்கானிஸ்தான் மக்கள் மீள வேண்டும்.
"ஈதல் இசை பட வாழ்தல்' என்பது தமிழர் மரபு. ஈகை குணம் என்பது நிலையான சந்தோஷத்தை அளிக்கிறது. ஆனால் மகிழ்ச்சி பலருக்கு கள்ளில், காமத்தில், செல்வத்தில், உணவில், தீமையில், செருக்கில், புகழில் !
தான் சேர்த்துவைத்த செல்வத்தைப் பறைசாற்றுவது சிலருக்கு சந்தோஷத்தை அளிக்கிறது. உலகப்  பணக்காரர்கள், பிரபலமான விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் தங்கள் பங்களாக்களைப் படம் பிடித்து  யூ ட்யூபில் வெளியிடுகிறார்கள். சில மக்கள் பிரதிநிதிகளும் தங்களது பகட்டான வீடுகளை இணையதளத்தில் பகிர்ந்து கொள்கிறார்கள். இவர்களுக்கு ஏழைகளைப் பற்றி பேச என்ன அருகதை என்று கேள்வி எழுகிறது! 
சந்தோஷ மனிதர்களின் ஆதர்ஷ்யமான குணங்கள், எதிர்காலத்தில் நம்பிக்கை, மற்றவர்களுக்கு உதவுதல், அற்ப சந்தோஷத்தில் விழாதல், கடந்தவற்றை நினைத்து மருகாதிருத்தல், தற்கால சிந்தனை, சகஜமாகப் பழகுதல், நன்றி மறவாமை, ஆசை அகற்றி அகம்பாவம் கொள்ளாதிருத்தல், மற்றவரின் நல்லவற்றை போற்றுதல்,  நல்லவர்களைப் பேணுதல், தன்னம்பிக்கை,  வலது மூளைக்கு வேலை கொடுக்கும் செயல்களில் ஈடுபடுதல், ஒப்பிட்டுப் பார்ப்பதைத் தவிர்த்தல், உயர்  குறிக்கோளோடு செயல்படுதல் ஆகியவற்றை எல்லோரும் கடைப்பிடிக்கலாம். 
சந்தோஷம் வெளியே இருந்து வருவதில்லை. நம் மனத்தில் உணரப்படுவதே ஆகும். எதையும் யாரிடத்தும் எப்போதும் எதிர்பாராது இருப்பவரே சந்தோஷப்பட முடியும். ஓடும், செம்பொன்னும் ஒன்றாகக் கருதுபவர் சந்தோஷிகள். நாம் சொல்வதை மற்றவர் கேட்க வேண்டும் என இருந்தால் வீட்டில் சந்தோஷம்  வராது. மற்றவர்கள் சொல்வதை நாம் கேட்டால் வரும்.
வெளியில் சந்தோஷம் நாம் பழக தேர்ந்தவர்களைப் பொறுத்தது. 
கல்வியில், கலைகளில், சேவையில் தான் மன நிறைவான மகிழ்ச்சி. தனது நேரத்தை பொது நலனுக்காக அர்ப்பணித்து பொது சேவையில் ஈடுபடுவதை இளைஞர்கள் பழக்கமாக்கிக்  கொள்ள வேண்டும். 
சென்ற வார கேள்விக்குப் பதில்: சர் சிவி ராமனுக்கு 1930- ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதை கொண்டாடும் வகையில் 28 பிப்ரவரி ஒவ்வோர் ஆண்டும் தேசிய விஞ்ஞான நாளாக அனுசரிக்கப்படுகிறது. 
இந்த வார கேள்வி:  "எல்லை காந்தி' என்று அழைக்கப்படும் தலைவர் யார்?

(விடை அடுத்த  வாரம்)

கட்டுரையாளர்: மேனாள் காவல்துறைத் தலைவர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Online Comments-களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்! | Director Raju Murugan | My Lord

நல்லகண்ணு மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு: நடிகர் ரஜினிகாந்த்!

குமரி மாவட்டத்துக்கு மார்ச் 4, 10 உள்ளூர் விடுமுறை!

நல்லகண்ணு மறைவு: தவெக தலைவர் விஜய் இரங்கல்!

பத்மாவத் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு என்ன ஆனது? - குடும்பத்தினர் விளக்கம்!

SCROLL FOR NEXT