முகப்பு
மகளிர்மணி

சாதனை சிறுமி 1

கோவை யுவபாரதி பப்ளிக் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வருகிறார் தர்ஷினி. தினமும் அதிகாலை 5 மணிக்கு எழுந்திருக்கும் பழக்கமுடைய சுறுசுறுப்பும், துறு துறு

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:07 PM
பகிர்:

கோவை யுவபாரதி பப்ளிக் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வருகிறார் தர்ஷினி. தினமும் அதிகாலை 5 மணிக்கு எழுந்திருக்கும் பழக்கமுடைய சுறுசுறுப்பும், துறு துறு பேச்சையும் உடைய ஆறரை வயதுடைய சுட்டிப் பெண் தர்ஷினியின் சாதனைகள் ஒவ்வொன்றும் அளப்பறியது. இளம் கன்று பயமறியாது எனும் சொல்லுக்கு எடுத்துக்காட்டு. தங்கம், வெள்ளி, வெண்கலம் என பல பதக்கங்கள், சான்றிதழ்கள், கோப்பைகள் என அள்ளிக் குவித்து வருகிறார். தினந்தோறும் காலை 5 மணிக்கு மைதானத்துக்குச் செல்லும் தர்ஷினி 7.30 மணி வரை ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பள்ளி விடுமுறையான சனி, ஞாயிறுகளில் கூட ஓய்வெடுக்காமல் 4 முதல் 5 மணி நேரம் வரை கூடுதல் பயிற்சியும் செய்து வருகிறார்.


காலையில் பால் அருந்துவது கூட ஸ்கேட்டிங் மைதானத்தில்தானாம். இவரது பெற்றோரும் மைதானத்துக்குச் செல்லாத நாள்கள் இல்லை. கடும் பயிற்சியையும், உழைப்பையும் ஸ்கேட்டிங்குக்கு அளித்து வரும் இந்தச் சிறுமியின் கனவு ஒலிம்பிக்கில் வெற்றி பெறுவது. 2014-இல் நடைபெற்ற கோவை மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் 150 மீட்டர் மற்றும் 500 மீட்டர் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று, மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வு பெற்றார். 2015-இல் சென்னையில் மாநில அளவிலான போட்டியில் 150 மற்றும் 500 மீட்டர் போட்டியில் 2 தங்கப் பதக்கங்களை வென்றார். தொடர்ந்து, புதுச்சேரியில் நடைபெற்ற தென் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்றார். மேற்கு மண்டலப் போட்டியில் தங்கப் பதக்கமும் மீண்டும் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் 2 தங்கப் பதக்கங்களும், நாமக்கல்லில் தமிழ்நாடு ஒலிம்பிக் மாணவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் 2 தங்கப் பதக்கங்களும் கோவை மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களும் 2014-இல் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியிலும் தங்கம், வெண்கல பதக்கங்களைப் பெற்றுள்ளார். இப்படி பல போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை அள்ளிவரும் இந்தச் சிறுமி தற்போது ஆசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிலும் இடம் பிடித்துள்ளார்.

 கோவையில் அண்மையில் நடைபெற்ற ஸ்கேட்டிங் மாரத்தான் காலிறுதிப் போட்டியில் பங்கேற்ற தர்ஷினி 10.5 கி.மீ. தூரத்தை 43 நிமிடங்களில் கடந்து இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளார். ஸ்கேட்டிங்கில் மட்டுமல்லாமல் படிப்பிலும் முதலிடம் பெறும் தர்ஷினி நீச்சல், ஓவியம் என அனைத்திலும் திறமை பெற்றிருக்கிறார். தற்போது, பரதநாட்டியத்தையும் ஒருகை பார்த்துவிட அதிலும் சேர்ந்துள்ளார்.

  ஸ்கேட்டிங் பயிற்சியாளர் தங்கதுரை கூறியதாவது:

 ""ஆறரை வயது சிறுமியாக இருந்தாலும் நாள்தோறும் காலை 5.30 மணிக்கு பயிற்சிக்கு வருவது மட்டுமல்லாமல் விடுமுறை தினங்களில் கூட 4 முதல் 5 மணி நேரம் கட்டாயம் பயிற்சிக்கு வந்துவிடுவாள்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.