1,700 பேரின் நாட்டிய நிகழ்ச்சி எனது சாதனையின் உச்சம் : சரோஜா வைத்தியநாதன்
பாரதத்தின் தொன்மை வாய்ந்த கலைகளில் ஒன்று பரதம். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில், இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் வரும் பாத்திரப் படைப்பான மாதவி எனும் ஆடல் நாயகி, சோழமன்னன் திருமாவளவன்
பாரதத்தின் தொன்மை வாய்ந்த கலைகளில் ஒன்று பரதம். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில், இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் வரும் பாத்திரப் படைப்பான மாதவி எனும் ஆடல் நாயகி, சோழமன்னன் திருமாவளவன்
முன்னிலையில் தனது நாட்டியத்தை அரங்கேற்றினார். அத்தகைய பன்னெடுங்கால பாரம்பரிய சிறப்புமிக்க பரதக் கலையை நாட்டின் தலைநகர் தில்லியில் 42 ஆண்டுகளாக கணேசா நாட்டியப் பள்ளியின் மூலம் வளர்த்து வருபவர் பரதக் கலைஞர் சரோஜா வைத்தியநாதன் (78).
தில்லி மட்டுமின்றி உலகில் 25 நாடுகளில் தன்னுடைய மாணவர்கள் நடத்தும் நாட்டியப் பள்ளியின் மூலமும் இந்தக் கலை பலருக்கும் சென்றடையச் செய்துள்ளவர் இவர்.
அண்மையில் தில்லியில் "வாழும் கலை' அமைப்பின் (ஆர்ட் ஆஃப் லிவிங்) சார்பில் நடைபெற்ற உலக கலாசார திருவிழாவின் தொடக்க நாளில் 1,700 பரதக் கலைஞர்களைக் கொண்டு பரத நாட்டிய நிகழ்ச்சி நடத்தி நடன உலகிலுள்ள பலரையும் வியக்க வைத்துள்ளார்.
உலகளவில் மிகப்பெரிய கலாசார நிகழ்ச்சியாகக் கருதப்படும் இந்த நிகழ்வில் பரத நாட்டிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அனுபவம் குறித்து சரோஜா வைத்தியநாதன் பகிர்ந்து கொண்டதாவது:
""தில்லியில் 2009-ஆம் ஆண்டில் "குவின்ல் பேட்டன் ரிலே' எனும் தொடர் ஓட்ட நிகழ்ச்சிக்காக இந்தியா கேட் பகுதியில் நடைபெற்ற தொடக்க விழாவில் எனது தலைமையிலான 80 கலைஞர்கள் பங்கேற்ற
பரத நாட்டிய நிகழ்ச்சியை 10 ஆயிரம் பேர் கண்டுகளித்தனர்.
அதைத் தொடர்ந்து, 2010-இல்
தில்லியில் காமன் வெல்த் போட்டியின் தொடக்க விழாவையொட்டி நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் 800 கலைஞர்கள் பங்கேற்று பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். இதில், எனது குழுவினர் 120 பேர் பங்கேற்ற பரத நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. பல்லாயிரம் பேர் கண்டுகளித்த இந்த நிகழ்வைத்தான் இதுவரை பெரிய சாதனையாக நான் கருதியதுண்டு.
ஆனால், இவற்றையெல்லாம் விஞ்சிடும் வகையில், தில்லியில் வாழும் கலை அமைப்பின் சார்பில் நடைபெற்ற உலக கலாசார திருவிழாவில் நான் நடத்திய பரதநாட்டிய நிகழ்ச்சி அமைந்துவிட்டதாகவே நினைக்கிறேன்.
இந்த உலக கலாசார திருவிழா நடைபெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பு, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்ஜியை சந்தித்தேன். அப்போது, 2 ஆயிரம்
பரதக் கலைஞர்கள் பங்கேற்கும் மாபெரும் பரத நாட்டிய நிகழ்ச்சியை உலக கலாசார திருவிழாவில் நடத்துமாறு கேட்டுக் கொண்டார். இவ்வளவு அதிக எண்ணிக்கையில் கலைஞர்களைத் திரட்டி கலை நிகழ்ச்சியை நடத்த முடியுமா என்று ஐயம் ஏற்படவே, அவரது வேண்டுகோளை தயங்கியபடி ஏற்க மறுத்தேன். ஆனால், அவர் "வாழும் கலை அமைப்பின் சார்பில் உதவி கிடைக்கும். ஏற்பாடு செய்யுங்கள்' என்று என்னிடம் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார். இதை "பகவான் கொடுத்த பெரிய சேவை' என நினைத்து ஏற்றுக் கொண்டேன். மேலும், எத்தனையோ பேர் இருக்க நமக்கு இந்த வாய்ப்பை குருஜி அளித்ததை ஒரு வரப்பிரசாதமாகவும் நினைத்தேன்.
இதையடுத்து, பரத நிகழ்ச்சிக்காக கலைஞர்களை அனுப்புமாறு தமிழ்நாடு, கொல்கத்தா, புணே, மும்பை, தில்லி, ஜெய்ப்பூர் உள்பட பல்வேறு நகரங்களில் இயங்கி வரும் நாட்டியப் பள்ளிகளுக்கு கடிதம் எழுதினேன். ஆனால், உலக கலாசார நிகழ்ச்சி மார்ச் மாதம் நடைபெற இருந்ததால் அந்த சமயத்தில் தேர்வு இருப்பதாகக் கூறி பாதிப்பேர் தங்களால் கலைஞர்களை அனுப்ப இயலவில்லை.
இதனால், எனது நாட்டியப் பள்ளி மாணவர்கள், அவர்களது மாணவர்கள் என மொத்தம் 500 பேர் மட்டுமே தொடக்கத்தில் சேர்ந்திருந்தனர். எனினும், விடா முயற்சியின் காரணமாக 1,700 கலைஞர்கள் நிகழ்ச்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் தில்லியில் உள்ள 40 நாட்டியப் பள்ளிகளைச் சேர்ந்த 1,000 கலைஞர்கள், தமிழகத்தில் இருந்து 270 கலைஞர்கள் இடம்பெற்றிருந்தனர். மேலும், 12 வயது முதல் 60 வயது வரையிலான கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பின்னர் பரத நாட்டிய நிகழ்ச்சிக்கான பாடல், இசை தயாரிக்கும் பணியைத் தொடங்கினேன். "ஆங்கிகம் புவனம்...'எனும் நாட்டிய தர்ப்பண சாஸ்திரத்தின் முதல் ஸ்லோகத்தையும், அதைத் தொடர்ந்து குரு, பிரம்மா, விஷ்ணு ஆகிய வார்த்தைகளையும் சேர்த்து பாடல் வரிகளை உருவாக்கி, அதற்கான ராகம், ஸ்வரம், ராகமாலிகா ஆகியவற்றையும் தொகுத்தேன். ஆங்கிகம் புவனம் என்பது என்னுள் எல்லாம் அடக்கம் என்று அர்த்தமாகும். அதேபோன்று, குரு பிரம்மா என்பது குருதான் இறைவன் என்பதாகும். இந்தப் பாடலின் இசை வடிவத்தை ஸ்ரீஸ்ரீ ரவி சங்கருக்கு அனுப்பி வைத்தேன். நன்றாக இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார். 12 நிமிடங்கள் கொண்ட இந்த இசைப் பாடலை 6 நிமிடங்களாகக் குறைத்தேன்.
பின்னர், பாடலுக்கு ஏற்ப நாட்டிய அடவுகள், பாவங்கள் ஆகியவற்றை உருவாக்கினேன். எனது நாட்டியப் பள்ளி மாணவிகளைக் கொண்டு அந்த அடவுகள், பாவங்களை நாட்டியமாடச் செய்து, அவற்றை வீடியோவாகப் பதிவு செய்து பிற ஊர்களில் உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கும் நாட்டியப் பள்ளி கலைஞர்களுக்குப் பயிற்சிக்காக அனுப்பி வைத்து தயார்படுத்தினேன்.
நாட்டியத்தில் பங்கேற்கும் கலைஞர்கள் அணியும் ஆடையை சிவப்பு நிறத்தை ஒத்த பல்வேறு நிறங்களைக் கொண்டு தேர்வு செய்தேன். அதேபோன்று, நகை உள்ளிட்ட ஆபரணங்களும் நேர்த்தியாகத் தேர்வு செய்யப்பட்டன.
சென்னையில் சங்கீத சீசனுக்குச் சென்றிருந்த போது, கலாசார நிகழ்ச்சியில் பங்கேற்கவிருந்த நாட்டியக் கலைஞர்களை ஓரிடத்தில் வரவழைத்து நாட்டியப் பயிற்சி அளித்தேன். இதில், 100 பேர் பங்கேற்றனர்.
இவ்வாறு 6 மாதங்களாக உரிய தயாரிப்புக்குப் பிறகு உலக கலாசார நிகழ்ச்சியில் எனது ஏற்பாட்டில் 1,700 கலைஞர்கள் ஒருசேர மேடையில் நாட்டிய நிகழ்ச்சியை நடத்தினர். உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து 35 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், பரதத்தில் மட்டுமே 1,700 கலைஞர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சிதான் தில்லியில் நடைபெற்ற மிகப்பெரிய பரத நிகழ்ச்சியாகும். இதை கின்னஸ் நிகழ்ச்சி போலக் கருதுகிறேன்.
உலக கலாசார திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக கதக் நடனமும், அதைத் தொடர்ந்து எங்களது குழுவினரின் பரத நிகழ்ச்சியும் நடைபெற்றது. பரத நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி, ஸ்ரீஸ்ரீரவிசங்கர் ஆகியோர் கண்டு மகிழ்ந்தனர். மேலும், கூடியிருந்த பல்லாயிரக்கணக்கானோர் கைதட்டி, ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதைக் கண்ட போது இந்த நிகழ்ச்சிக்காக நான் மேற்கொண்ட அத்தனை உழைப்புக்கும் பரிசும் வெகுமதியும் கிடைத்ததாக உணர்ந்தேன். மேலும், இதுபோன்ற நிகழ்வை நடத்த முடியுமா என்று ஐயுற்ற எனக்கு , இந்த வரவேற்பு ஆச்சரியத்தையும், உவகையையும் அளித்தது. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததை நினைக்கும்போது என் வாழ்வின் அளப்பரிய சாதனையாகக் கருதுகிறேன். இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு நாட்டியக் கலைஞர்களின் ஒத்துழைப்பும், ஒற்றுமையும், இறை அருளும், குருஜியின் ஆசிர்வாதமும்தான் காரணம்.
இளம் தலைமுறை நாட்டியக் கலைஞர்கள் இந்த நாட்டிய நிகழ்ச்சியை ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும். மேலும், கலைஞானம், பொறுமை, விடாமுயற்சியைக் கைக்கொள்ள வேண்டும்'' என்கிறார் சரோஜா வைத்தியநாதன்.
சில கலைஞர்களை வைத்து நிகழ்ச்சி நடத்துவதே மிகவும் சவாலான விஷயமாக இருந்து வரும் இன்றைய காலகட்டத்தில் ஒரே மேடையில் 1,700 கலைஞர்களை வைத்து எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த நாட்டிய நிகழ்ச்சியை நடத்தியுள்ள சரோஜா வைத்தியநாதன் உண்மையிலேயே ஒரு சாதனையாளர்தான்...!