மகளிர்மணி

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்...

DIN

சர்க்கரைப் பொங்கல்

தேவையான பொருட்கள்:
பச்சரிசி -  1 கிண்ணம்
பாசிப் பருப்பு  - 50கிராம்
முந்திரிப் பருப்பு - 20கிராம்
காய்ந்த திராட்சை  - 20 கிராம்
சுக்கு பொடி -  1தேக்கரண்டி
ஏலக்காய் -  8 
தேங்காய் சிறியது -  1
நெய் -  150 கிராம்
மண்டை வெல்லம்  - 600 கிராம்
தண்ணீர் - தேவைக்கேற்ப
செய்முறை:   வெல்லத்தைத் தூளாக்கிக் கொள்ள வேண்டும்.  குக்கரில் ஒரு கிண்ணம் அரிசிக்கு 3 மூன்று பங்கு தண்ணீர் விட்டு பச்சரிசி (1 பங்கு), பாசிப்பருப்பு ஆகியவற்றை போட்டு சாதமாக குழையவிடவேண்டும்.  குக்கரில் பிரஷர் போனதும் குக்கரை திறந்து அதில் தூளாக்கி வைத்துள்ள வெல்லத்தைப் போட்டு கொதிக்கவிடவும். நன்கு கொதித்து ஒன்றாக திரண்டதும்,  வாணலியில் சிறிது நெய்யைவிட்டு  அதில் முந்திரிப் பருப்பு, திராட்சைப் பழம், துருவிய தேங்காயைப் போட்டு வறுக்க வேண்டும்.  தேங்காய் பொன்னிறமாக வதங்கிய பின் கலவையை குக்கரில் போட்டு ஏலக்காய் பொடி, சுக்குப் பொடி, மீதமுள்ள நெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி இறக்க வேண்டும். சுவையான சர்க்கரைப் பொங்கல் தயார். 

கொண்டைக்கடலை மசாலா சுண்டல்

தேவையான பொருட்கள்:
கொண்டைக் கடலை  -  2 கிண்ணம்
தேங்காய்த் துருவல்   -   2 மேசைக்கரண்டி
வறுத்து பொடிக்க: 
கடலைப் பருப்பு  -  2 மேசைக்கரண்டி
மல்லித் தூள்  -  1 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய்   -  3
உப்பு  -  தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய்   -   1 மேசைக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு   -   1 தேக்கரண்டி
கறி வேப்பிலை  -  சிறிது
பெருங்காயம்   -  2 சிட்டிகை அளவு
செய்முறை:  கொண்டைக்கடலையைத் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.  பின்பு அதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தனித்தனியாக வறுத்து கொள்ளவும்.  பின்பு அவற்றை ஒன்றாகச் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.  வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து அதனுடன் கறிவேப்பிலை, பெருங்காயம், வேகவைத்த கொண்டைக்கடலையைச்  சேர்த்து கலந்து கொள்ளவும்.  அதனுடன் பொடித்த மசாலா மற்றும்  தேங்காய் துருவல் சேர்த்து 2-3 நிமிடங்கள் கிளறி இறக்கிவிடவும்.  சுவையான கொண்டைக்கடலை சுண்டல் ரெடி.

பூர்ணம் கொழுக்கட்டை 

தேவையான பொருட்கள்: 
பச்சரிசி மாவு - 2  கிண்ணம் 
 (வறுத்தது) எள் - 2 கிண்ணம் 
வேர்க்கடலை - 2 கிண்ணம்
பொட்டுக்கடலை - 2 கிண்ணம் 
தேங்காய் - 1/2 மூடி (துருவியது) 
ஏலக்காய் பொடி - 1  தேக்கரண்டி 
 வெல்லம் - 100 கிராம்
 உப்பு - சிறிது 
செய்முறை:  வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலை, பொட்டுக்கடலை, எள் ஆகியவற்றை வறுத்து, பொடியாக அரைத்துக் கொள்ளவும்.   வெல்லத்தைப் பொடித்து, அதையும் மிக்ஸியில் போட்டு ஒரு முறை அடித்துக் கொள்ளவும். பின்னர் தேங்காயை எண்ணெய் விட்டு, பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த பொடி கலவை, வதக்கிய தேங்காய், ஏலக்காய் பொடி மற்றும்  வெல்லத்தை போட்டு நன்கு கலந்து கொள்ளவும். பூர்ணம் தயார்.
கொழுக்கட்டை செய்ய:  ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவைப் போட்டு, அதில்  சிறிது  உப்பு சேர்த்த சுடு தண்ணீர் விட்டு, சற்று மென்மையாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.  பிறகு பிசைந்து வைத்துள்ள மாவில் சிறு உருண்டையை எடுத்து, உருட்டி, வாழை இலையின் மேல் சிறிது எண்ணெய் தடவி, அந்த உருண்டையை வைத்து தட்டையாக தட்டி, அதில் சிறிது பூர்ணத்தை வைத்து மடித்து, முனையை நன்கு மூடி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இட்லிப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இட்லித் தட்டில் அந்த பூர்ணம் வைத்து மடித்துள்ள மாவை வைத்து, மூடி, வேக வைத்து எடுக்கவும். இப்போது பூர்ணம் கொழுக்கட்டை ரெடி.

பொரித்த  மோதகம்  

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கிண்ணம்
மைதா மாவு - 1/2 கிண்ணம்
நாட்டுச்சர்க்கரை - 1 கிண்ணம்
தேங்காய் - 1 கிண்ணம் (துருவியது)
ஏலக்காய்ப் பொடி - 1 தேக்கரண்டி
நெய் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)
செய்முறை:  முதலில் கோதுமை மாவு மற்றும் மைதா மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, வெதுவெதுப்பான நீர் மற்றும் நெய் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து. 15-20 நிமிடம் ஊற விடவும்.
பின்னர்,  வாணலியில் சிறிது நெய்விட்டு காய்ந்ததும்,  தேங்காயைப் போட்டு பொன்னிறமாக வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.  பின்பு ஒரு கிண்ணத்தில் நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய்  மற்றும் வதக்கி வைத்துள்ள தேங்காயைப் போட்டு, கிளறி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.  அடுத்த படியாகப் பிசைந்து வைத்துள்ள மாவைச் சிறு சிறு உருண்டைகளாக்கி, கையால் தட்டையாக தட்டி,  அதன் நடுவே தேங்காய் கலவையை சிறிது வைத்து  உருட்டி மேலே குமிழ்ப் போன்று வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு,  வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.  சுவையான பொரித்த  மோதகம் தயார்.

கடலைப் பருப்பு சுழியன்
தேவையான பொருட்கள்:
கடலைப் பருப்பு - 1/4 கிலோ
தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம்
வெல்லம் -  200 கிராம்
மைதா மாவு - கால் கிலோ 
ஏலப்பொடி - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:   முதலில் கடலைப் பருப்பை நீர் சேர்த்து பதமாக வேக வைக்கவும்.  பிறகு நீரை வடித்து  மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்து எடுக்கவும்.  பின்னர் அதில் தேங்காய் துறுவல்,  வெல்லம்,  ஏலப்பொடி,  உப்பு முதலியவற்றைக் கலந்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.  அதன்பின்னர்,  இக்கலவையை   சிறு சிறு உருண்டடைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும்.    பி றகு ஒரு பாத்திரத்தில் மைதாவை தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.  பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும்,  அதில் பிடித்து வைத்துள்ள கடலைப்பருப்பு உருண்டைகளை கரைத்து வைத்துள்ள மைதா மாவில் தோய்த்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான சுழியன் ரெடி. 

எள் உருண்டை

தேவையான பொருட்கள்:
கருப்பு/வெள்ளை எள் - 2 கிண்ணம்
வேர்க் கடலை - 2 கிண்ணம்
வெல்லம் - 100 கிராம்
ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி
செய்முறை:   வாணலியில்,  எள் மற்றும் வேர்க்கடலையை தனித்தனியாக வறுத்து வைத்துக் கொள்ளவும். பின் வெல்லத்தை நன்கு தட்டிக் கொள்ளவும். பின்பு  வறுத்து வைத்துள்ள எள் மற்றும் வேர்க்கடலையை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.  பின்பு அதில் தட்டி வைத்துள்ள வெல்லத்தை போட்டு, அரைத்துக் கொள்ளவும்.  (வேண்டுமென்பவர்கள் எள்ளை அரைத்தும் செய்யலாம், அரைக்காமலும் செய்யலாம்.)  பின் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, ஏலக்காய் சேர்த்து, உருண்டைகளாகப் பிடித்து வைக்க வேண்டும்.  சுவையான எள்ளுருண்டை ரெடி.
- தவநிதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டெஸ்லாவில் இரு உயர் அலுவலர்கள் டிஸ்மிஸ்! நூற்றுக்கணக்கானோர் நீக்கம்?

SCROLL FOR NEXT