மகளிர்மணி

காது கேளாத மகனை பேச வைத்தவர்!

DIN

பிறவியிலேயே காது கேளாத தன் மகனை தன் மன உறுதி மற்றும் விடா முயற்சியால் பேச வைத்திருக்கிறார் மைசூரைச் சேர்ந்த ரத்னா பாஸ்கர் ஷெட்டி. பொதுவாகவே காது கேளாதவர்களால் பேச முடியாது. பல ஆண்டுகள் பேச்சு பயிற்சி பெறாமல் பேசுவது சிரமம். சைகை மூலமாக வார்த்தைகளை பரிமாறிக் கொள்வதுண்டு.

தன்னுடைய மகன் பரத்துக்கு காது கேட்கும் சக்தியில்லை என்றறிந்த ரத்னா பாஸ்கர், அவனுக்கு 2 வயது ஆகும்போதே, மைசூரில் உள்ள சந்திரசேகர் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்பெஷல் அண்ட் ஹியரிங் பள்ளியில் சேர்ந்து சிறப்பு கல்வியில் பட்டம் பெற்றார். பரத்துக்கு 3 வயதானபோது உதடு அசைவுகள் மூலம் வார்த்தைகளை உச்சரிக்க கற்று கொடுக்க தொடங்கினார். மிக விரைவில் உதடு அசைவுகள் மூலமாக வார்த்தைகளை கற்றுணர்ந்த பரத் 5 வயதில் கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் படிக்கவும் எழுதவும் தொடங்கினான்.

ரத்னா மிகவும் பொறுமையுடன் ஒவ்வொரு பொருளையும் காண்பித்து திரும்ப சொல்ல கற்றுக் கொடுத்தார். வார்த்தைகளை கற்றுக் கொண்ட பரத் , பின்னர் வாக்கியங்களாக பேசத் தொடங்கினார். பார்க்கும் - நடந்த சம்பவங்களை விவரித்து கூறுமளவுக்கு தேர்ச்சி பெற்றார்.

முதலில் காது கேளாதோர் பள்ளியில் பரத்தை சேர்த்த ரத்னா, அவனது 10-வது வயதில் மைசூரில் உள்ள விஜய வித்வா வித்யா சாலாவில் ஆங்கில மீடியத்தில் சேர்த்துவிட்டார். சக மாணவர்கள், ஆசிரியர் சொல்வதை சுலபமாக கிரகித்து கொள்வதுபோல், காது கேளாத காரணத்தால் பரத்தால் பாடங்களைக் கிரகிக்க முடியவில்லை. இதையறிந்த பரத்தின் தாயார், ஆசிரியர்களை அணுகி சற்று நிறுத்தி நிதானமாக பாடங்களை விளக்கும்படி கேட்டுக் கொண்டதால், ஆசிரியர்களின் உதடு அசைவுகளை வைத்து பரத்தால் சுலபமாக படிக்கவும் எழுதவும் முடிந்தது. பயிற்சியின்போதே சரளமாக பேசவும், பழகிக் கொண்ட பரத், கன்னடத்தை விட ஆங்கிலத்தில் சுலபமாகவும், சரளமாகவும் எழுதவும் படிக்கவும் செய்கிறார். கம்ப்யூட்டர் சயின்ஸிலும் டிகிரி பெற்ற இவர் தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்க்கிறார்.

தன் மகனுக்கு பயிற்சியளிப்பதற்காக சிறப்பு கல்வியில் பட்டம் பெற்ற ரத்னா பாஸ்கர், தற்போது காது கேளாத குழந்தைகளுக்காக பயிற்சியளிப்பதையே தொழிலாக கொண்டுள்ளார். 

"காது கேளாத குழந்தைகளின் பெற்றோர் எவ்வளவு வேதனைப்படுவார்கள் என்பதை உணர்ந்த நான், வீட்டு வேலைகளுக்கு இடையே நான் கற்ற பயிற்சியை அந்த குழந்தைகளும் சிறப்பான வாழ்வை அடைய வேண்டுமென்பதற்காக ஒரு சேவையாகச் செய்து வருகிறேன்'' என்கிறார் ரத்னா பாஸ்கர்.
- பூர்ணிமா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

SCROLL FOR NEXT