மகளிர்மணி

திருமணமாகி 82 ஆண்டுகள் காணும் அதிசய தம்பதி...!

தினமணி

திருமணம் முடிந்து இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவாகியதும் தம்பதியர் வெள்ளி விழா கொண்டாடுவார்கள். திருமணமாகி ஐம்பது ஆண்டுகள் நிறைவானால் பொன்விழா கொண்டாடுவார்கள். அறுபது ஆண்டுகள் நிறைவானால் வைரவிழா. அறுபத்தைந்து ஆண்டுகள் நிறைவானால் பவள விழா. பிளாட்டினம் விழா கொண்டாடுவது எழுபது ஆண்டுகள் நிறைவானதும்.
 ஆணுக்கு எண்பது வயதானால் சதாபிஷேகம் கொண்டாடுவார்கள். திருமணமாகி எண்பது ஆண்டுகள் நிறைவானதும் அதை விழாவாக தம்பதிகள் கொண்டாடுவது மிக மிக அபூர்வம். தம்பதியரில் பலரும் முதுமை காரணமாக காலமாகியிருப்பார்கள். அப்படி திருமணமாகி எண்பது ஆண்டுகள் நிறைவாகியிருந்தால் அந்த விழாவைத் தம்பதியர் என்ன பெயர் சொல்லி கொண்டாடுவதென்று தெரியவில்லை.
 கோட்டயத்தைச் சேர்ந்த மாதவன் நாயர் - மீனாட்சி தம்பதியருக்கும் இந்த பிரச்னைதான். மாதவன் நாயர் மீனாட்சி அம்மாவுக்கு தாலி கட்டியது 1936-இல். திருமணம், மணமகள் வீட்டில் நடந்தது. இந்தத் தம்பதியருக்குத் திருமணமாகி எண்பத்திரண்டு ஆண்டுகள் ஆகின்றன. மாதவன் நாயருக்கு வயது நூறு. மீனாட்சி அம்மாவுக்கோ வயது தொன்னூற்று ஒன்பது. சமீபத்தில் தங்கள் திருமணத்தின் எண்பத்திரண்டாவது ஆண்டு விழாவை "எந்தப் பெயரும்' வைக்காமல் தங்கள் வாரிசுகள், பேரன் பேத்திகள், கொள்ளுப் பேரன்கள் பேத்திகள் முன்னிலையில் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள்.
 ""நாங்கள் சிறிய வயதில் ஒன்றாக ஒரே பள்ளியில் படித்தோம். அப்போது எனக்கு வயது எட்டு. பேசிக் கொள்வோம். இரண்டு ஆண்டுகள் ஒரே வகுப்பில் படித்தோம். பிறகு வேறு வேறு பள்ளிகளில் படிப்பைத் தொடர வேண்டிவந்தது. அதனால் பரிச்சயம் தொடரவில்லை. வளர்ந்ததும், இரண்டு வீடுகளின் பெரியவர்கள் பேசி நிச்சயித்து திருமணம் செய்து வைத்தார்கள். எளிமையான திருமணம். முக்கியமான தகவல்... இது காதல் திருமணம் இல்லை.
 நாயர் தேசிய கட்சி ஒன்றின் தீவிர தொண்டராக இருந்தார். முழுநேர வேலையும் அதுதான். அழைப்பு வந்து கொண்டே இருக்கும். வீட்டில் இருக்கும் நேரம் குறைவு. எங்களுக்கு ஐந்து வாரிசுகள். மூன்று மகள்கள்.. இரண்டு மகன்கள். மூத்த பெண்ணுக்கு எண்பது வயது. கடைக்குட்டி மகளுக்கு அறுபத்திநான்கு வயதாகிறது. நாயர் இப்போது முழு நேரமும் வீட்டில்தான். நாயர் கைத்தடி உதவியுடன் முற்றத்தில் நடப்பார். கூட நானும் நடப்பேன்.... நாயர் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்துவிடுவார். நானும் எழுந்துவிடுவேன். நாயர் சாயா குடிப்பார். காலை உணவு எட்டு மணிக்கு. மதியம் சாப்பாடு. மாலையில் பால் சேர்க்காத தேநீர். இரவு கஞ்சி. இரவு ஒன்பதரைக்கு உறங்கிவிடுவோம். எந்தப் பிரச்னைகளையும் பெரிதாக எடுத்துக் கொண்டு மனதை வருத்திக் கொள்வதில்லை. நாயருக்கு மூன்று முறை மாரடைப்பு வந்து போயிருக்கிறது. சீரகம் அல்லது மல்லி விதை போட்டு காய்ச்சிய நீரை தினமும் குடித்து வருகிறோம்... இதுதான் எங்கள் ஆயுளின் ரகசியம். நாயருக்குப் பற்கள் விழுந்துவிட்டன. எனக்குப் பற்கள் இருக்கின்றன..'' என்று சொல்லி சிரித்துக் காட்டுகிறார் மீனாட்சியம்மா .
 மாதவன் நாயர் அதைக் கேட்டு பொக்கை வாய் திறந்து சிரிக்கிறார்.. வணங்கி ஆசி பெற வேண்டிய தம்பதிகள்..!
 - பனுஜா
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT