மகளிர்மணி

தோட்டம் அமைக்கலாம் வாங்க...நா.நாச்சாள்

DIN

வீடு என்பது வெறுமனே கட்டடம் மட்டுமல்ல. ஆரோக்கியமான சூழலும் மனிதர்கள் ஒன்றுகூடி வசிக்குமிடமுமாகும். ஆரோக்கியம் என்றாலே அதற்கு செடி கொடிகள் மரங்கள் போன்றவை அவசியம் தானே. நமக்கு முந்தைய தலைமுறையினர் வரை வீடு என்பது மனிதர்கள், ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகள் அதனுடன் வீட்டைச்சுற்றி வீட்டிலுள்ளவர்களுக்கு தேவையான செடி, கொடிகளும் கட்டாயம் இருந்தது. 
இன்றோ இந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது. மண் தரைகளே இல்லாது அடுக்கிவைத்த வத்திப்பெட்டி போன்ற நவ நாகரீக வீடுகள்.. செருப்பைக்கூட சுதந்திரமாக கழட்ட முடியாத நிலைக்கு வாசல்.. போன் செய்தால் வீட்டிற்கே வரும் உணவு.. பின் ஆரோக்கியம் எங்கிருக்கும். 
இந்நிலையில் செடி வளர்ப்பதும், அதற்கு தண்ணீர் ஊற்றி பராமரித்து சில மாதத்திற்குப் பின் கிடைக்கும் சொற்ப விஷயங்களுக்காக வீணாக நேரத்தையும், நிலத்தையும் விரையம் செய்ய முடியுமா? இதெல்லாம் இன்று சாத்தியமா? கைபேசியும் கையும் இணைந்தே இருக்கும் இந்த காலத்தில் மண்ணும் செடியும் நினைக்கவே வேடிக்கையாகவும், புதிதாகவும் தான் இருக்கும். 
ஆனால், ஆரோக்கியமும் உணவும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது. உணவிற்கு ஆதாரமே செடி கொடிகளும் மரங்களும் தானே. இவைகள் இல்லாத வீடு உயிரோட்டமில்லாத வாழ்க்கைக்கு சமமே.
ஆம்! ஆத்திர அவசரத்திற்கு நமக்கு தேவையான வீட்டு வைத்தியம் செய்வதற்கு சிலவகை செடிகள் அவசியமல்லவா.. உதாரணத்திற்கு இருமல், சளி, காய்ச்சலுக்கு உடனடி தீர்வைத் தரும் துளசி, தூதுவளை, கற்பூரவள்ளி போன்றவைகளும், உடலை குளிர்விக்க வெந்தயக்கீரை, சோற்றுக் கற்றாழை போன்றவைகளும், ரத்தசோகையிலிருந்து நம்மைக் காக்க சிலவகை கீரைகளும் அன்றாடம் அவசியமாகிறதே.. இவைகூட இல்லாத வீடு எவ்வாறு வீட்டிற்கு சமமாகும். 
ஆபத்துகள் இன்று நம்மைச் சுற்றி நெருங்கி உள்ளது. எங்கு திரும்பினாலும் உடல் பருமன், குழந்தையின்மை, நீரிழிவு, தைராயிட் இப்படி தொந்தரவுகள் மண் தரையும், செடிகளும் இல்லாத வீடுகளை எளிதாக உணவு என்ற பெயரில் தாக்கிக் கொண்டிருக்கிறது.
சந்தையில் கிடைக்கும் உணவுகளும், அதன் மூலப் பொருட்களான காய்கள், கீரைகள், பழங்கள் மற்ற பொருட்கள் எல்லாமே இன்று அதிகப்படியான ரசாயனங்கள், பூச்சிக் கொல்லிகள், மாறுபட்ட விதைகளால் உருவானவைகளாக வலம் வருகிறது. இவற்றை அன்றாடம் உட்கொள்வதால் மனதாலும், உடலாலும் ஆரோக்கியக்கேடு ஏற்படுகிறது. இவற்றிலிருந்து நம்மையும் நமது குழந்தைகளையும் தற்காத்துக் கொள்ள அவசியமாகிறது வீட்டுதோட்டம். 
இந்தியாவில் மழை பொய்த்தது, நிலம் நஞ்சானது, விவசாயிகள் தற்கொலை என பல காரணங்களால் விவசாயம் பொய்க்க, பல நாடுகளில் இருந்து நமக்கு உணவுப் பொருட்கள் இறக்குமதியாகிறது. உதாரணத்திற்கு தக்காளி பல நாடுகளில் இருந்து இறக்குமதியானாலும் அவை எந்தவித பாதிப்பும் இல்லாமல் உடையாமல், அதிக நாட்கள் கெட்டுப்போகாமல் பளபளப்பாக நுகர்வோரை சென்றடைய வேண்டும் என்பதற்காக அதில் ஏற்றப்படும் நச்சுக்கள் ஒன்றிரண்டல்ல.. 
தக்காளிகள் மட்டுமல்ல பழங்கள், காய்கறிகள், கீரைகள், பயறுகள் என்ற பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.. இனி பளபளப்பாக இருக்கும் பழங்களையும் பளிச்சென்று இருக்கும் கீரைகளையும் பார்த்தாலே விழித்துக் கொள்ளவேண்டும்.
மண்தரையே இல்லாமல் மொட்டை மாடியிலும் எவ்வாறு தேவையான சத்தான நஞ்சற்ற உணவைப்பெறுவது என்றும் தெரிந்து கொள்ளப் போகிறோம். 
ஆம், நவநாகரீக உலகிலும் நமக்கான நமது குடும்பத்திற்கான சத்தான ஆர்கானிக் உணவுகளை எவ்வாறு நாமே நமது வீட்டில் எளிமையாக பெறுவது என்பதை தெரிந்து கொள்ளப் போகிறோம். செலவின்றி வீட்டு தோட்டத்தினை எவ்வாறு வடிவமைப்பது, எதனைக்கொண்டு தோட்டமமைக்கலாம், நாமே நமக்கான காய்கறிக் கழிவுகளில் இருந்து உரம் தயாரிப்பது அதுவும் அடுக்குமாடி குடியிருப்புகளில், விதைகள், மண் கலவை, தண்ணீர் பற்றாக்குறையில் எவ்வாறு குறைந்த அளவு நீரைக் கொண்டு செடிகளை வளர்க்கலாம், பூச்சி, நோய்த்தாக்குதல் என பலவற்றை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ள உள்ளோம். 
இதன்மூலம் தேவைக்கேற்ப பசுமைக் காய்களை பறித்து பயன்படுத்தலாம். வீட்டில் வெயிலால் இறங்கும் சூட்டினை ஆறு முதல் எட்டு டிகிரி வரை இது குறைக்கலாம். உலக வெப்பமயமாக்கலை தடுக்க நம்மால் இயன்ற முயற்சியும் இந்த வீட்டுத் தோட்டமாக அமையும். சுற்றுசூழலையும் பாதுகாக்கலாம். 
lifestyle diseases எனப்படும் உடல்பருமன், ரத்தக்கொதிப்பு, நீரழிவு நோய், மூட்டு வலி, இருதய நோய், பக்கவாதம், சிலவகை புற்றுநோய் போன்றவற்றிலிருந்து நம்மை காக்கலாம். 
ஒவ்வொரு நாளும் தனியாக உடற்பயிற்சி என்று கூட செய்யாமல் தோட்ட வேலைகளை பத்து நிமிடம் பார்த்தால் உடலும் மனதும் அமைதியாகும். இதுவே சிறந்த உடற்பயிற்சியாகவும் அமையும். குழந்தைகளையும் இதில் ஈடுபடுத்த வாழ்வியல் பாடத்தையும், அனைத்து சூழலையும் சமாளிக்கும் கலையை எளிதில் கற்றுக்கொடுக்கலாம். குழந்தைகள் மண்ணை தொடுவதால் உடலின் நோய்எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது. மேலும், குழந்தைகளுக்கு தோட்டம் அமைப்பதனையும், அதன் முக்கியத்துவத்தையும் பற்றி கற்றுக்கொடுப்பது அவசியம் மட்டுமல்ல அது நமது கடமையுமாகும். 
ஏனென்றால், வருங்காலத்தில் புவி வெப்பமயம், மழையின்மை போன்றவை அதிகரிக்கலாம். அதனை சமாளிக்கவும், எதிர் கொள்ளவும் வருங்காலத்தினருக்கு ஏற்றவகையில் இயற்கை தோட்டத்தினை அமைக்கும் கலையை அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
இதுமட்டுமல்ல, மேலும் பலப்பல நன்மைகளை உடலாலும் மனதாலும் நமது சின்னஞ்சிறு வீட்டு தோட்டத்தின் மூலம் பெறலாம். இருக்கும் இடங்களிலும் செலவின்றி வீட்டிலிருக்கும் பழைய பொருட்களையும், பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் வகையிலும் எளிதாக அடுத்தடுத்த இதழ்களில் தோட்டத்தை அமைக்கும் முறை தொடங்கி செடிகளை வளர்ப்பது, பராமரிப்பது மட்டுமல்லாமல் தரமான, செழிப்பான காய்களையும் கீரைகளை பூச்சி நோய் தாக்குதல் இல்லாமல் எவ்வாறு பெறுவது வரை அனைத்தையும் தெரிந்து கொள்ள இருக்கிறோம். அதனோடு இயற்கை பூச்சிவிரட்டி, செடிவளர்ச்சிக்கு தேவையான பஞ்சகவ்யா, மண்புழு உரம் ஆகியவற்றை தயாரிக்கும் முறைகளையும் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
(அடுத்த இதழில்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

SCROLL FOR NEXT