தேவையானவை:
வேர்க்கடலை - 1/2 கிண்ணம்
சீரக சம்பா அரிசி - 1 கிண்ணம்
இஞ்சி, பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
புதினா - 1 கைப்பிடி
தயிர் - 1 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கொத்துமல்லி தழை - 1
கைப்பிடி மிளகாய்த் தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா - தலா கால் தேக்கரண்டி
பட்டை - 1 துண்டு
கிராம்பு, ஏலக்காய் - தலை 1
பிரிஞ்சி இலை - ஒன்று
நெய் - ஒகு தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைகேற்ப
செய்முறை: வேர்க்கடலையை குக்கரில் போட்டு, சிறிதளவு உப்பு சேர்த்து, 3 விசில் வரும் வரை வேக வைத்து வடிக்கவும். அரிசியைக் கழுவி, 15 நிமிடம் ஊறவிடவும், குக்கரில் எண்ணெய் ஊற்றி, சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, புதினா சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர், தயிரைச் சேர்த்து, நன்றாக வதக்கி வேக வைத்த வேர்க்கடலையைச் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கி, 2 கிண்ணம் தண்ணீர் ஊற்றி, சிறிதளவு உப்பு சேர்க்கவும். கொதி வந்ததும், கழுவிய அரிசியைப் போட்டு, கலந்து விட்டு, அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்துமல்லித் தழை, சிறிதளவு நெய் சேர்த்துக் கலந்து, குக்கரை மூடவும், 3 விசில் விட்டு இறக்கி, தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.
தேவையானவை:
ரவை - 1 கிண்ணம்
சர்க்கரை - 2 கிண்ணம்
கேரட் துருவல்,
வேர்க்கடலை - தலா கால் கிண்ணம்
உலர் திராட்சை - தலா 1 தேக்கரண்டி
ஏலக்காய்த் தூள் - கால் தேக்கரண்டி
செய்முறை: வேர்க்கடலையை ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை ஊற வைத்து, தோல் நீக்கி விழுதாக அரைக்கவும்.
ரவையை சிறிது நெய்யில் வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும். வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்விட்டு, உலர் திராட்சை, வேர்க்கடலையை வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.
அதே வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்விட்டு, 2 கிண்ணம் தண்ணீருடன் அரைத்த வேர்க்கடலை விழுது, கேரட் விழுதைச் சேர்த்து கலந்து கொதிக்க விடவும். பின்னர், வறுத்த ரவையைச் சேர்த்து கலந்து வேக வைக்கவும். ரவை வெந்ததும், அத்துடன் சர்க்கரையைச் சேர்த்து கலந்து வேக விடவும். கெட்டியானதும், நெய் சேர்த்துக் கிளறி, ஏலக்காய், வறுத்த வேர்க்கடலை, உலர் திராட்சை சேர்த்து நன்றாகக் கலந்து இறக்கி, பரிமாறவும்.
தேவையானவை:
வேர்க்கடலை - 1 கிண்ணம்
கடலைப் பருப்பு - அரை கிண்ணம்
உளுந்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 10
சீரகம், மிளகு - தலா 1 தேக்கரண்டி
தனியா - 2 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை: வேர்க்கடலையை நன்றாக வறுத்துக் கொள்ளவும். கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகு, சீரகம், ஆகியவற்றை வெறும் வாணலியில் தனித்தனியாக, வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பின்னர், எல்லாவற்றையும் ஆறவிட்டு, மிஸ்ஸியிலிட்டு, மேலே கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்துப் பொருட்களையும், சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்து காற்றுப் புகாத பாட்டிலில் அடைக்கவும். தேவைப்படும் போது இந்தப் பொடியை இட்லி, (அல்லது) தோசையுடன் பரிமாறவும். சுவை அருமையாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.