மகளிர்மணி

வெற்றியின் அடித்தளம் சென்னை வாழ்க்கை!

சந்திரமெளலி

இந்திரா நூயி. உலகறிந்த இந்தியப் பெண்மணி. அமெரிக்காவில் பெப்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து சாதனை புரிந்தவர். பல்லாண்டுகளாக உலகின் சக்திவாய்ந்த 100 பெண்மணிகளின் பட்டியலில் நிரந்தரமான இடம் பிடித்தவர். இந்திய அரசின் பத்மபூஷண் உள்ளிட்ட சர்வதேச விருதுகள் பல பெற்றவர். தற்போது அமேசான், பிலிப்ஸ், அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அமைப்பு உள்ளிட்ட பல்வேறுநிறுவனங்கள், அமைப்புகளின் நிர்வாகக் குழுக்களில் இடம்பெற்றிருக்கிறார்.

இவரது வேர் சென்னை என்பதில் இவருக்கும், தமிழ்நாட்டுக்கும் தனிப்பெருமை. அண்மையில் இந்திரா நூயி தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை புத்தகமாக எழுதி இருக்கிறார். புத்தகத்தின் தலைப்பு : "முழுமையான எனது வாழ்க்கை: பணி; குடும்பம், நம் எதிர்காலம்" சர்வதேச அளவில் இந்தப் புத்தகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தப் புத்தகத்தை இந்திரா நூயி எழுதியதற்கு ஒரு சுவாரசியமான பின்னணி உண்டு. அவர் தன் சொந்தக் கதையை புத்தகமாக எழுதுவதில் ஆர்வம் இல்லாமல்தான் இருந்தார். அதே சமயம், அவர் பெப்சி நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த சமயத்திலும் சரி, அதன் பின்னரும் சரி, பெண்களின் குறிப்பாக வேலைக்குப் போகிற பெண்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றை சமாளிப்பது எப்படி? குடும்பப் பொறுப்புக்களையும் கவனித்துக் கொண்டு, அலுவலகத்திலும் சிறப்பாக வேலை செய்து பெயர் எடுப்பது எப்படி? போன்றவை குறித்து பலரும் அவரிடம் கேள்விகள் கேட்டார்களாம். எனவே, அது பற்றி எல்லாம் விரிவாக பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி, சர்வதேச அளவில் கொள்கைகள் உருவாக்கப்படவேண்டும் என அவர் விரும்பினார்.

ஆனால், அவருக்கு நெருக்கமானவர்களும், பதிப்பாளர்களும், "அது நல்ல விஷயம்தான். ஆனால், உங்கள் வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது. சென்னையில் சாதாரணப் பின்னணியில் தொடங்கி, வாழ்க்கையில் நீங்கள் சிகரம் தொட்டது அசாதாரணமான சாதனை. எனவே, நீங்கள் சொல்ல விரும்பும் கருத்துகளை, உங்கள் வாழ்க்கை அனுபவங்களையே அடிப்படையாக வைத்து பகிர்ந்து கொண்டால், படிப்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்; உங்கள் விருப்பமும் நிறைவேறும்' என்று வலியுறுத்தியதன் காரணமாகவே, இந்தப் புத்தகத்தை எழுத முடிவு செய்தார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த இந்திரா நூயி சென்னை தியாகராய நகர் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் படித்து முடித்து, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் சேர்ந்தார். அதன் பின் கொல்கத்தாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டுக்குப் போனார். அடுத்து அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்காகப் போக விரும்புவதாக சொன்னதும், அவரது குடும்பத்தினர் பச்சைக் கொடிகாட்டி அனுப்பி வைத்தனர். அமெரிக்காவில் யேல் பல்கலைக் கழகத்துக்குச் சென்று படித் தார்.

இந்திரா நூயியின் சூப்பர் டூப்பர் வெற்றிக்கு அடித்தளமிட்டது அவரது ஆரம்ப கால சென்னை வாழ்க்கைதான் என்பது இந்தப் புத்தகத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அவருடைய வாழ்க்கையில், அவரது தாத்தா நாராயண சர்மா ஏற்படுத்திய தாக்கம் குறிப்பிடத்தக்கது. இந்திரா நூயியின் கூடப் பிறந்தவர்கள் இரண்டு பேர். ஒரு தம்பி, ஒரு தங்கை. மூவருமே தாத்தாவின் செல்லக் குழந்தைகள். கண்டிப்புக்கு பெயர் போன அவர், பாச மழை பொழிபவராகவும் இருந்திருக்கிறார்.

அந்தக் காலத்திலேயே பெண்களுக்கு படிப்பு முக்கியம் என்று வலியுறுத்தியவர் அவர். தன் பேரன், பேத்திகளுக்குடன் நேரம் செலவிடுவது அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது தொடங்கி, அறநெறிக் கதைகள் சொல்லி, நற்பண்புகளை வளர்ப்பது வரை அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. பேரன் பேத்திகளோடு நேரம் செலவிடுவது தாத்தாவுக்குப் பிடித்திருந்தது. அதுபோலவே, தன் தாத்தாவோடு இருப்பதையும், உரையாடுவதையும் குழந்தைகளும் மிகவும் விரும்பினார்கள்.பல்வேறு பொது விஷயங்கள் குறித்தும் வீட்டில் விவாதங்கள் நடக்கும், அப்போது தாத்தா விவரம் தெரிந்தவர்களான குழந்தைகளும் அவற்றில் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை தைரியமாக வெளிப்படுத்த ஊக்குவிப்பார்.

தினமும் அவருக்கு நியூஸ் பேப்பர் படிக்க வேண்டும். அவரால் படிக்கமுடியாது என்று இல்லை. பேத்தி இந்திரா தினமும் அவருக்காக பேப்பர் படித்துக் காட்டும்போது, அன்றைய நாட்டு நடப்பு பற்றி அவர் விளக்கி சொல்லுவார். பேரன் பேத்திகள் பாட புத்தகங்களை மட்டும் படித்தால் போதாது. நாட்டில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய விழிப்புணர்வும் அவசியம் என்பது அவரது அழுத்தமான கருத்து. ஆகவேதான் அவர் தன் பேத்தியை நியூஸ் பேப்பர் படிக்கச் சொல்லுவார். "மொத்தத்தில் என் தாத்தா வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த பெரிய லாட்டரி!" என்றால் அது மிகை இல்லை என்று பூரித்துப் போகிறார் இந்திரா நூயி.

தன் அம்மாவைப் பற்றிக் குறிப்பிடுகையில், "அவர் ஒரு கடினமான பாஸ்! வேலைகளை கச்சிதமாகத் திட்டமிடுவதிலும் சரி, வேலைகளை சரியானவர்களிடம் ஒப்படைத்து, அதனை செய்து முடிப்பதிலும் சரி அவரது திறமை எனக்கு எப்போதுமே இன்ஸ்பிரேஷன். மற்றவர்களிடமிருந்து வேலை வாங்குவது எப்படி என்பதன் அடிப்படைப் பாடங்களை எனக்குக் கற்றுக் கொடுத்தவர் அவர்தான்' என்று குறிப்பிடுகிறார்."வேலை என்று வந்துவிட்டால், அதில் மூழ்கிவிடுவேன் நான். என் குழந்தைகள், "அம்மா.. ரிலாக்ஸ்' எதற்காக உன்னை இத்தனை கஷ்டப்படுத்திக் கொள்கிறாய்?" என்று கேட்பார்கள் என்கிறார் நூயி.

வாழ்க்கையில் முன்னேறியது எப்படி என்பதை சொல்லும்போது, " எனது குடும்பம்தான் என்னுடைய வெற்றியின், மகிழ்ச்சியின் அடித்தளம். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் என்னை ஊக்குவித்து, அடுத்த கட்டத்திற்கு முன்னேற உந்துசக்தியாக இருந்தது என் குடும்பமே" என்று கூறுவதுடன் தன் தாத்தா, பாட்டி, பெற்றோர், உடன் பிறந்தவர்கள், கணவர், குழந்தைகள் தொடர்பான ஏராளமான சம்பவங்களை உதாரணமாகக் காட்டி இருக்கிறார்.

இன்று பெண்கள் பல்வேறு துறைகளிலும் முன்னேறி இருக்கிறார்கள். ஆனாலும், உலகமெங்கும் 13 கோடி இளம் பெண்கள் கல்வி கற்க அனுப்பப் படவில்லை; காரணம் என்ன தெரியுமா? அவர்கள் சிலவகையான வேலைகளை செய்தால் போதும்; அதற்கு படிப்பு அவசியமில்லை" என அவர்களது சமூகம் நினைப்பதுதான். ஆனால் அது முற்றிலும் தவறான கருத்து; பெண்களுக்கு படிப்பு மிக மிக அவசியம்" என்பதுதான் தன் புத்தகத்தின் மூலமாக இந்திரா நூயி இந்த உலகத்துக்கு அளிக்கும் செய்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT