முகப்பு
மகளிர்மணி

கருணையினால் அல்ல...

பெண்ணுக்கு உடல்ரீதியான குறைபாடுகள் ஏற்பட்டால்  அது அவர்களது எதிர்காலத்தை, வாழ்க்கையைப் பாதிக்கும்.

Updated On : 3 நவம்பர், 2021 at 6:00 AM
பகிர்:

பெண்ணுக்கு உடல்ரீதியான குறைபாடுகள் ஏற்பட்டால் அது அவர்களது எதிர்காலத்தை, வாழ்க்கையைப் பாதிக்கும். இது ஆண்களுக்கும் பொருந்தும் என்றாலும், பெண்களுக்கு உடல் குறைபாடுகள் கொஞ்சம் அதிக பாதிப்புகளை வாழ்க்கையில் ஏற்படுத்தும்.

ஃபாத்திமா அஸ்லாவுக்கு பிறந்த மூன்று நாளிலேயே எலும்பு முறிவு ஏற்பட்டது. அப்பாவுக்கு இருந்தது போலவே அஸ்லாவுக்கும் "எளிதில் உடைந்து போகும் எலும்புகள்' உடலில் அமைந்திருந்தன. இந்த நோய் காரணமாக எலும்புகள் அடிக்கடி உடைந்து கொண்டே இருக்கும். அதற்கு வைத்தியம் பார்க்க வேண்டும்.

அஸ்லாவின் அப்பாவுக்கு இந்த நோய் அவரது பிள்ளைப் பருவத்தில் வந்திருந்ததால், குடும்பத்தினர் பயந்துவிடவில்லை. சிகிச்சை அவ்வப்போது செய்து கொண்டு பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து, ஹோமியோபதியில் மருத்துவராக நான்கு ஆண்டுகள் கல்லூரியில் படித்து முடித்தார். அஸ்லா "யூ டியூப்' சானல் ஒன்றையும் நடத்திவருவதுடன் தன்னம்பிக்கை ஊட்டும் சொற்பொழிவுகளை, நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார்.

Advertisement

அஸ்லா தொடர்கிறார்:

"அப்பாவுக்கு எளிதாக எலும்புகள் உடையும் நோய் இருந்ததால், பிறந்த மூன்றாம் நாளில் எனது எலும்பு உடைந்ததற்கு என்ன காரணம் என்று உடனே டாக்டர்களுக்குப் புரிந்துவிட்டது. இன்றுவரை சுமார் 50 முறை எலும்பு முறிந்திருக்கிறது. பல சமயங்களில் பள்ளியில் வகுப்பில் இருக்கும் போது எலும்பு உடைந்திருக்கிறது. அதனால் பல சிரமங்களை அனுபவித்திருக்கிறேன். கல்வியைத் தொடருவதிலும் இந்த அசெளகரியங்கள் தடையாக இருந்தன.

வீட்டிலும் பள்ளியிலும் என்னை "பாத்து' என்று அழைப்பார்கள். நான் 11 -ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது கேரள அரசு எனக்கு மூன்று சக்கர நாற்காலியை வழங்கியது. அந்த நாற்காலியில் பள்ளி சென்று வந்தேன். எலும்பு உடைந்து சிகிச்சை பெறும் நாள்களில் பள்ளி செல்ல முடியாது. எலும்பு உடைந்தாலும், இல்லையென்றாலும் சக்கர நாற்காலியில் பெரும்பாலும் அமர வேண்டிய சூழ்நிலை ஏற்படும். "வாக்கர்' உதவியுடன் மெதுவாகக் கொஞ்ச தூரம் நடக்கலாம்.

அவ்வளவுதான்.

எனது குடும்பம் சாதாரணமானது. அப்பா அம்மா உடன் பிறந்தவர்கள், பள்ளியில் ஆசிரியர்கள், சக தோழிகள் எனக்கு உதவுவார்கள். பள்ளியில், வீட்டில் என்னால் இதர குழந்தைகள் போல ஓடி ஆடி விளையாட முடியாது. அவர்கள் விளையாடுவதை ஏக்கத்தோடு பார்த்து ரசிப்பேன். எனது கவனத்தை திருப்ப எனது எண்ண அலைகளை எழுத்தில் வடிக்க ஆரம்பித்தேன். நூல்கள் பல வாசித்தேன். பல சிறுகதைகள், கவிதைகள் எழுதியுள்ளேன். விரைவில் அவைகளை நூல்களாக வெளியிட உள்ளேன். எனது சுயசரிதையை "நிலா போல சிரிக்கும் பெண்பிள்ளை' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளேன்.

தொடர்ந்து "முடிவிலியத் தாண்டி கனவு' என்ற பெயரில் "யூ டியூப்' சானலைத் தொடங்கினேன். சுய முன்னேற்றம், தன்னம்பிக்கை தொடர்பான சொற்பொழிவுகளை பதிவேற்றம் செய்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. உடல்ரீதியான வலிகள் உண்டு. அவற்றை சகித்துக் கொண்டு எழுத்து, சொற்பொழிவு என்று காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். தற்சமயம் கோட்டயத்தில் ஹோமியோ டாக்டராகப் பணி புரிந்து வருகிறேன்.

எனக்கு சமீபத்தில் திருமணம் ஆனது. கணவர் ஃபிரோஸ் புதிய சக்கர நாற்காலியை திருமணப் பரிசாக வழங்கினார். திருமணம் என்றால் வரதட்சணை ஏதாவது விதத்தில் இருக்கும். என்னைப் போல மாற்றுத் திறனாளியாக இருந்தால் அதிகமாக வரதட்சணை கொடுக்க வேண்டிவரும். எனக்கு 65 சதவீதம் உடல் பாதிப்பு உள்ளது.

நுண்கலை படித்து முடித்து டிஜிட்டல் கலைஞராக இருக்கும் ஃபிரோஸ் தோழி மூலமாக அறிமுகம் ஆனார். அவர் லட்சத்தீவைச் சேர்ந்தவர். பரஸ்பரம் விரும்பினோம். இது ஒரு கருணை, பச்சாதாபம், பரிதாபம் காரணமாக செய்யப்பட்ட திருமணமல்ல. என்னை அவர் மாற்றுத்திறனாளியாகப் பார்க்கவில்லை. எனது செயல்பாடுகளுக்கு ஊக்கம் தந்து வருகிறார்.

ஃபிரோஸ் வாங்கித் தந்திருக்கும் தானியங்கி சக்கர நாற்காலியில் இந்திய முழுவதும் சுற்றி பார்க்க வேண்டும். நாங்கள் எங்கள் சுற்றுலா பயணத்தை கேரளத்தில் தொடங்கியுள்ளோம். பஸ்ஸில் பயணிக்கும் போது ஃபிரோஸ் என்னைத் தூக்கிச் சென்று பஸ்ஸினுள் அமர்த்துவார். அதுபோல இறக்குவார். எங்களது பயணங்களை பதிவேற்றம் செய்ய "கடலும் நிலவும்' என்ற யூ டியூப் சானலைத் தொடங்கியுள்ளோம்' என்கிறார் ஃபாத்திமா அஸ்லா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.