புதிய தொழில் நுட்பத்தில் கேக் தயாரிப்பு!
பிரிட்டிஷ் இளவரசி டயானா திருமணத்தின்போது 5அடி உயரத்தில் அடுக்குகளுடன் கூடிய கேக் தனித்துவமாக தயாரிக் கப்பட்டதாம்.
பிரிட்டிஷ் இளவரசி டயானா திருமணத்தின்போது 5அடி உயரத்தில் அடுக்குகளுடன் கூடிய கேக் தனித்துவமாக தயாரிக் கப்பட்டதாம். அதன் மதிப்பு ரூ 2.99 கோடி என கூறப்படுகிறது. அரபு நாட்டில் ஒருமுறை ஆறு அடி உயரமுள்ள 460 கிலோ எடை கொண்ட கேக் ஆயிரம் வைரகற்கள் பதித்து தயாரிக்கப்பட்டதாம். இதன் மதிப்பு ரூ. 7 கோடி என கூறுகிறார்கள். கேக் குறித்த இந்த வரலாறு ஒரு புறம் இருந்தாலும், தற்போது திருமணநாள், பிறந்தநாள் உள்ளிட்டவைகளுக்கு கேக் வெட்டும் பழக்கம் பொதுமக்களிடம் அதிகரித்து வருகிறது.
இதற்காக, பட்டர் கிரீம் கேக், வெல்வெட் பர்த்டே கேக், சாக்லேட் கேக், ஹனி கேக், ரெயின்போ கேக் என பவலகையான கேக்குகள் சந்தையில் உள்ளது. அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ஏ.ராஜயோகம் என்ற பெண்மணி புதிய தொழில் நுட்பத்தில் பலவகையான கேக் வகைகளை தயாரித்து சந்தைப்படுத்தி, பலரையும் கவர்ந்து வருகிறார்.
இது குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை:
""நான் கடந்த இரு ஆண்டுகளாகத்தான் கேக் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறேன். நாளுக்கு நாள் என் ஆர்வம் அதிகரித்து, கேக் தயாரிப்பில் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதற்கான தேடலில் இறங்கியபோது, தற்போது கேக் தயாரிப்பில் பல புதிய தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது என்று அறிந்தேன். இதுகுறித்து தெரிந்து கொள்ள கடந்த ஏப்ரல் மாதம் சென்னைக்குச் சென்று கேக் தயாரிப்பில் பயிற்சி பெற்று வந்தேன்.
இதையடுத்து தற்போது வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கேக்குகளை வித்தியாசமான வடிவங்களில் வடிவமைத்து தருகிறேன்.
எனது கேக் தயாரிப்பில் முட்டையைப் பயன்படுத்துவதில்லை. அதற்கு மாற்றாக தயிர் மற்றும் வெண்ணெய் உள்ளிட்டவைகளை சேர்க்கிறேன். இதைத் தவிர, வேறு எந்த ஒரு ரசாயனமும் சேர்ப்பதில்லை.
உதாரணமாக, ரஸமலாய் கேக்கை பாலில் தயாரித்து வடிவமைப்பேன். மலாய் குல்பி கேக் என்பது குல்பி ஐஸ் சாப்பிடுவது போல இருக்கும். குலோப்ஜாமுன்கேக்,ஜெம்ஸ்கேக், பிரியாணி கேக், பியோனா கேக் உள்பட பல விதமான கேக்குகளை தயாரிக்கிறேன்.
திருமணவிழாவிற்காக தயாரிக்கும் கேக்குகளில் சாக்லேட் கலவையில் இரு சிரட்டை போல தயாரித்து அதனுள் மோதிரம் வைத்து விடுவேன். மணமக்கள் அதனை வெட்டும்போது, சர்ப்பரைசாக கேக்கில் இருந்து மோதிரம் வரும். அந்த மோதிரத்தை மணமகன் மணமகளுக்கு அணிவிப்பார்.
அதுபோன்று, மணமக்கள் உருவம் பொறித்த கேக்கிற்கும் மக்களிடையே பெரிதும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதன் சிறப்பு என்னவென்றால், மணமக்களின் புகைப்படத்தை, சுகர் சீட் என்ற பொருளில் அச்சிட்டு அதனை கேக்கில் வைத்துவிடுவேன். புதிய தொழில் நுட்பத்தில் சுகர் சீட்டில் இந்தப் புகைப்படம் அச்சிடப்பட்டிருப்பதால் அதையும் சார்பிட்டு விடலாம். இதுபோல பல சிறிய பரிசு பொருள்களை வைத்து கேக் தயாரிக்க, பலரும் ஆர்வத்துடன் ஆர்டர் கொடுக்கிறார்கள்.
அதுபோன்று, ரெடிமேடாக கிடைக்கும் சிறிய வகையினால பிளாஸ்டிக் பொம்மைகள் உள்ளது. அவற்றை வாங்கி வந்து கேக்கின் ஒருபுறத்தில் வைத்துவிடுவேன் இதனை குழந்தைகள் மிகவும் விரும்புகிறார்கள். மேலும் குழந்தைகளை கவரும் வகையில், கார், ஜீப் போன்ற வடிவங்களிலும் கேக் தயாரிக்கிறேன்.
மேலும், கேக்கில் பியோனா வடிவம், கடற்கரை வடிவம் உள்பட பல வடிவங்களையும் வடிவமைத்து வருகிறேன். வாடிக்கையாளர்கள் விரும்பும் வடிவத்தில் கேக் தயாரித்து தருகிறேன். உதாரணமாக, ஒருவருக்கு சென்னை ரிப்பன் பில்டிங் வடிவில் கேக் வேண்டும் அந்த வடிவிலும் தயாரித்து தருகிறேன்.
கேக் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பெண்களுக்கு ஆர்வம் , வித்தியாசமான சிந்தனை இருந்தால் புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, இந்த தொழிலில் நிச்சயம் வெற்றி பெறலாம்.