தங்கள் முன்னேற்றத்தில் கவனமாக இருந்து சாதனை படைக்கும் பெண்கள் இன்றைக்கு ஏராளம் பேர் இருக்கிறார்கள். தன்னுடைய கிராமத்திற்கு, அங்கிருக்கும் பெண்கள் குழந்தைகளுக்கு தன்னுடைய கல்வியும் ஆற்றலும் பயன்படுவதே சிறப்பென வாழும் பெண் ஸ்ரீப்ரியா சேஷாத்திரி. குடும்பம் கோயில் படிப்பு என்று தொடர்ந்து இயங்குபவர், குழந்தைகள் சூழ அன்றாடம் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதும் கற்றுக் கொடுப்பதும் என்று பரபரப்பாக இருப்பவர். தன் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
திருவண்ணாமலையில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன் பள்ளிப்படிப்பு முடித்தேன். அம்மா ஹிந்தி பண்டிட். நான் எம் ஏ ஆங்கிலமும், எம் ஏ ஹிந்தி இரண்டும் படித்திருந்தேன். திருவண்ணாமலையில் யோகி ராம்சுரத் குமார், கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் என்று பெரியோர்கள் பார்வையில் அவர்கள் ஆசியோடு வளர்ந்தேன். திருமணமாகி காவேரிப்பாக்கம் வந்தேன். பெரிய கூட்டுக்குடும்பம். ஆச்சாரம் அதிகமுள்ள கோயில் கைங்கரியம் செய்யும் பட்டாச்சார்யா குடும்பத்தின் நியதிகள் எல்லாவற்றையும் கடைபிடித்து வாழ வேண்டிய சூழல். என்றாலும் அன்பான குடும்பம். திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அதன்பின் அக்குபஞ்சர் சிகிச்சை முறையைக் கற்றுக் கொள்ள விரும்பினேன். குடும்பத்தார் ஒத்துழைத்தார்கள். அதில் எம்டி மற்றும் முனைவர் ஆய்வுப் பட்டமும் பெற்றேன்.
இவ்வளவு படித்துவிட்டு கிராமத்தில் என்ன செய்கிறீர்கள்?
கிராமத்தில் செய்வதற்கு எவ்வளவோ வேலைகள் இருக்கின்றன. அங்கே இருக்கும் குழந்தைகளுக்கான கல்வி அவசியமானது அல்லவா? ஏய்டு இந்தியா அமைப்பின் மூலம் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்க உழைக்கிறோம்.சர்வதேச தரத்தில் மாநகரத்தில் சிறந்த பள்ளிகள் வழங்குவதற்கு இணையான அறிவியல் பரிசோதனைகள் செய்வதற்கான உபகரணங்களை வழங்கி அறிவியலை செய்முறையில் கற்றுக் கொடுப்பதுடன் ஆங்கிலம் மற்றும் கணிதம் இலவசமாக கற்பிக்கிறோம்.
ஆங்கிலம் பேசுவதற்கான பயிற்சியும் கொடுக்கிறோம். அவர்களை பக்கத்தில் இருக்கும் கடைகள் போல எங்கேனும் அனுப்பி அங்கே ஆங்கிலத்தில் பேசிவிட்டு வா என்று அனுப்புவோம். குருகுலம் போல என்னைச் சுற்றி இந்த கிராமத்தின் குழந்தைகள் எந்த நேரமும் இருந்து கற்றுக் கொள்கிறார்கள்.
தனிப்பட்ட முறையில் ஹிந்தி கற்றுக் கொடுக்கிறேன். வசதியான வீட்டுப் பிள்ளைகள் பணம் கொடுத்துப் படிக்கிறார்கள். ஆர்வமுள்ள ஏழைக் குழந்தைகள் இலவசமாக கற்றுக் கொள்கிறார்கள். கற்பித்தலில் இரு குழந்தைகளுக்கும் வேறுபாடு காட்டுவதில்லை. எங்கள் கிராமத்துக் குழந்தைகள் நாளை சாதனையாளர்களாக உயர்ந்தால் அது எனக்கும் பெருமை தானே.
கிராமப் பெண்களுக்கு நீங்கள்முன்னெடுத்த செயல்பாடுகள் பற்றி...
கிராமப் பெண்களும் கணினி அறிவியல் அறிவதற்காக மத்திய அரசு ஒரு திட்டத்தை மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் வழியாக மேற்கொண்டது. அதிலே எங்கள் கிராமத்துப் பெண்கள் ஐம்பது பேருக்கு கணினி அறிவியல் கற்றுக் கொடுத்தோம். அதற்கான முயற்சி என்னுடையது. கிராமத்துப் பெண்கள் விவசாயக் கூலிகளாக வேலைபார்ப்பார்கள் அல்லது பீடி சுற்றும் வேலை செய்வார்கள். புகைபிடிப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு இணையாக இவர்களுக்கும் உடல்நலம் பாதிக்கப்படுவதை எடுத்துச் சொல்லி கணினி கற்றுக் கொண்டால் கிடைக்கும் வாய்ப்புகளைப் புரியவைத்து இந்த முகாமுக்குப் பெண்களை அழைத்து வந்து சொல்லிக் கொடுத்தேன். ஐம்பது பெண்களில் ஏறத்தாழ நாற்பது பேர் அரசு வழங்கிய உதவித் தொகையைப் பெற்று கணினி வாங்கவும் செய்தார்கள். அதற்கும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறேன்.
அதிலே ஒரு பெண் தையல் கலை பயின்றவள். தற்போது கணினி உதவியோடு புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டு ஃபேஷன் டிசைனராக இருக்கிறாள். இதனாலெல்லாம் திருப்தி இருக்கிறது.
அக்குபஞ்சர் மருத்துவராக என்ன செய்கிறீர்கள்?
கற்ற கல்வி பலருக்கும் பயன்பட வேண்டும் என்பதற்காக அக்குபஞ்சர் சிகிச்சை வழங்குகிறேன். அதிலே பயன்படுத்தும் ஊசிகளை வாங்கி கொடுத்தால் நான் எனக்கென எதுவும் பெற்றுக்கொள்ளாமல் சிகிச்சை வழங்குவேன். அதற்கும் வசதி இல்லாதவர்கள் தங்கள் உடல் உபாதைகளை வந்து சொல்லும் பொழுது என்னுடைய ஊசிகளைப் பயன்படுத்தி சிகிச்சை கொடுப்பேன். வெளியூர்களில் இருந்தெல்லாம் சிகிச்சை பெற்றுக் கொள்ள தேடி வருகிறார்கள். இலவசமாக சொல்லிக் கொடுக்கவும் செய்தேன். இப்பொழுது கரோனா காலம் அதோடு குழந்தைகளை நாளெல்லாம் கவனித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருப்பதால் சிகிச்சை மட்டுமே வழங்குகிறேன். விவசாயக் கூலி வேலை செய்யும் மக்களால் செலவு செய்து சிகிச்சை பெற்றுக் கொள்ள இயலாத நிலையையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
கிராமத்தில் திடீரென மருத்துவ அவசரம் என்றால் அம்மா என்று ஓடி வருவார்கள். இப்படி பிரச்னை என்று நிற்பார்கள். உடனே சிகிச்சை செய்வோம். அதோடு என் மாமியாரும் கைவைத்தியம் அறிந்தவர். அவரும் உடனிருந்து பார்ப்பார். குணமடைந்தவர்கள் விசுவாசத்தோடு நம்மிடம் நடந்து கொள்ளும் பொழுது மனதிருப்தி ஏற்படும். அது, பணத்தால் கிடைக்குமா? சொல்லுங்கள்.
அமெரிக்காவில் இயங்கும் "தமிழ் அமெரிக்கா' சேனலுக்கு எப்படி வந்தீர்கள்?
நிறைய கவிதைகள் எழுதுவேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக சங்கத் தமிழ் இலக்கிய பூங்கா என்ற ஒரு குழுவை ஏற்படுத்தி அதிலே அன்றாடம் கவிதை எழுதுவது, ஓவியம் தந்தால் அதைப் பார்த்துக் கவிதை எழுதுவது என்று தொடர்ந்து கொண்டிருந்தோம். இந்தக் குழு வழியாக தமிழ்அமெரிக்கா டீவியில் தொடர்ந்து நிகழ்ச்சிகளை வழங்குகிறோம். கவிதைகள் கட்டுரைகள் என்று உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் நாள்கள் நகர்கின்றன.
எல்லாமே இலவச சேவையாக இருக்கிறதே உங்கள் வாழ்வாதாரம் எப்படி?
பெருமாள் கோயில் கைங்கரியம் இருக்கிறது. மாமனார் அரசுப் பணியில் இருந்தவர், கணவர் தனியார் நிறுவனத்தில் இருந்தாலும் கை நிறைய சம்பாதிக்கிறார். பகவான் குறை ஒன்றும் இல்லாமல் வைத்திருக்கிறார். ஊருக்குள் எங்கள் குடும்பத்திற்கென்று பல தலைமுறைகளாக மரியாதை இருக்கிறது. எங்களை நம்பி வருகிறார்கள். நானும் இயன்றதை செய்கிறேன். ஆத்ம திருப்தியோடு எளிமையாக வாழ்கிறோம்.
இன்னும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறீர்கள்?
தற்போது ஜோதிடம் கற்றுக் கொண்டிருக்கிறேன். அதன் நுட்பங்களை ஆராய்வதில் ஆர்வம் அதிகம் இருக்கிறது. மலர்களுக்கும் கிரகங்களுக்குமான தொடர்பு பற்றி தொடர்ந்து சிந்திக்கிறேன்.
நம்மை நம்பும் கிராமத்தவர்களுக்கு இயன்ற உதவியை செய்கிறேன். மற்றபடி திட்டம் எதுவும் இல்லை. கண்முன் இருக்கும் குழந்தைகள் நன்றாயிருக்க வழிகாட்டுகிறேன். தொடர்ந்து இப்படியே இயங்கிக் கொண்டு இருக்க வேண்டும். இந்த வாழ்க்கைக்கு இது போதும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.