சென்னை அருகேயுள்ள ஜமீன் பல்லாவரம் கீர்த்தி மஹாலில் அண்மையில் நடைபெற்ற ஒரு திருமணத்தில், சுமார் 15 பெண்கள் ஒரே டிசைனில் மடிசார் அணிந்து கொண்டு, கல்யாண விருந்தை நன்முறையில் பரிமாறியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பாலசந்தர், அவரது மனைவி உமா ஆகிய இருவரும் இணைந்து நடத்திவரும் "வரகூர் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கேட்டரிங் " என்ற அமைப்புதான் இந்தப் புதுமையை செய்துவருகிறது.
இதுகுறித்து பாலசந்தரிடம் பேசியபோது:
'சென்னை, திருச்சி, கோவை, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் பிராமணர் திருமணங்களில் எங்கள் கேட்டரிங்குக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. சுமார் 23 ஆண்டுகளாக மடிசார் பெண்களை வைத்து விருந்து பரிமாறிவருகிறோம். எங்கள் சமூகத்தில் பொருளாதாரத்தில் நலிந்த குடும்பங்களும் உண்டு. அவர்கள் கைவினை, சமையலைச் செய்து வருமானம் ஈட்டுகின்றனர்.
தொடக்கத்தில் விருந்து பரிமாறலை வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால் எங்கள் சமூகப் பெண்களிடம் ஆதரவு கிடைக்குமா? என்ற சந்தேகம் இருந்தது. பலரும் முன்வந்தனர். அவர்களிடம் மடிசார் சேலை கட்ட வருமா? என்று மட்டும் கேட்டு உறுதி செய்து கொண்டோம். மடிசார் சேலையை பாரம்பரிய முறையில் கட்டத் தெரியாதவர்களைக் கற்றுக் கொள்ளச் சொன்னோம். பெண்கள் இந்த விருந்து பரிமாறலுக்கு வந்து போவதில் எந்த பிரச்னையும் இருக்காது என்பதற்கும் உறுதி கொடுத்தோம். இந்த வித்தியாச அணுகு முறையால் எங்கள் கேட்டரிங்கை உன்னிப்பாகக் கவனித்தனர். வரவேற்பும் கிடைத்தது.
இப்போதைக்கு ஒரு பெண்மணிக்கு விருந்து பரிமாறலுக்கு ரூ,1,500 சம்பளமாகத் தருகிறோம். எங்கு போக வேண்டுமோ அங்கு சென்றுவிட்டு, பாதுகாப்பாக மீண்டும் வீட்டில் கொண்டு வந்து சேர்க்கிறோம். பலர் கல்யாண விருந்து முடியும் வரை காத்திருந்து எங்கள் குழுவுடன் செல்ஃபி எடுத்துக் கொள்கின்றனர். திருமணத்தில் கலந்து கொள்ளும் பிரபலங்களும் எங்கள் புதுமையான முயற்சியைப் பாராட்டுகிறார்கள். பெண்கள் அணிய வெவ்வேறு டிசைன்களில் மடிசார் புடவைகளை நாங்கள் வாங்கிக் கொடுத்துவிடுகிறோம்.
எங்கள் குழுவில் படித்த பெண்களும், குறைந்த வயது பெண்களும் உண்டு. அனைவரும் அவர்கள் வீட்டு சம்மதத்துடன் எங்களுக்கு ஒத்துழைப்பு தந்து வருகிறார்கள். மடிசார் கட்டிக்க கொண்டு பந்தியில் ஓடியாடி பரிமாறுவது சிரமம்தான். அனைவருக்கும் இப்போது பழகிப் போய்விட்டது'' என்றார் பாலசந்தர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.