ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நாடு - போட்ஸ்வானா. இது தென்ஆப்பிரிக்கா, ஜாம்பியா, நமீபியா ஆகிய மூன்று நாடுகளுக்கு அருகே உள்ளது. இந்த நாட்டில் பெண்களுக்கு அதிக அளவு முக்கியத்துவம் தரப்படுகிறது.
பெரும்பாலான குடும்பங்களில் பெண்களே குடும்பத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கின்றனர். கணவன் இன்றியும் பலர் தங்களது குழந்தைகளைத் தைரியமாக வழிநடத்துகின்றனர்.
திருமணம் செய்யும் ஆண்களே பெண் வீட்டாருக்கு வரதட்சிணை அளிக்கும் வழக்கமும் அங்குள்ளது. இந்த நாட்டில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான பல்லாங்குழியை "மொபாரா' என்று பெயரிட்டு விளையாடுகின்றனர்.
உலகில் அதிக ஆண்டுகள் வாழ்ந்த பெண் ஓவியர் லூங்கூனன். ஆஸ்திரேலியாவின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர், நிகினா என்ற பகுதியில் 1910-ஆம் ஆண்டில் பிறந்தார். ஆண்டர்சன்மலைக்கு அருகேயுள்ள நதிக்கரையில் வளர்ந்தார். இவருடைய பெற்றோர் கால்நடைப் பண்ணையை வைத்திருந்தனர்.
கால்நடைகளைப் பராமரிப்பதோடு, குதிரையேற்றத்தையும் இவர் கற்றார். 95 வயதுக்குப் பிறகு அவர் ஓவியராக மாறினார். இதற்கு உறுதுணையாக இருந்தது இவரது சகோதரியாவார். முதுமையால் லூங்கூனன் தனது ஆர்வத்தைக் குறைக்கவில்லை.
ஒரு குழந்தையைப் போலவே, ஆர்வத்துடன் ஓவியத்தைக் கற்றார். ஐந்து ஆண்டுகளில் 380 ஓவியங்களை வரைந்துவிட்டார்.
குறைந்த அளவே உள்ள நிகினா மொழி பேசும் பழங்குடியினத்தவர்களின் மொழி, கலாசாரங்களைப் பாதுகாக்கும் வகையில் இவரது ஓவியங்கள் இருந்தன. இவருடைய ஓவியங்கள் ஆஸ்திரேலியாவின் பழைய நாடாளுமன்றக் கட்டடத்திலும், பல்கலைக்கழங்களின் பாடத் திட்டங்களில் இடம்பெற்றுள்ளன. இதுதவிர, உலகம் முழுவதும் இந்த ஓவியங்களுக்கு வரவேற்பும் இருக்கிறது. 2018-ஆம் ஆண்டு இவர் தனது 108-ஆம் வயதில் மரணம் அடைந்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ""பழங்குடியினரின் வாழ்க்கை முறை முழுவதும் போராட்டங்கள்தான். இன்றும்கூட நிலையான ஓரிடத்தில் வாழ முடியவில்லை. என் ஓவியத்துக்குக் கிடைக்கும் பாராட்டை நான் மதிக்கிறேன். என் வயதைச் சொல்லும்போது, நான் அதிகம் மகிழ்வதில்லை. காரணம் எனக்கு வயதாகிவிட்டதாக நினைக்கவில்லை. வயதை நான் நினைத்திருந்தால், உலகம் முழுவதும் அறியப்பட்டவராக இருந்திருக்க மாட்டேன். கங்காரு நாட்டில் இருந்து கழுகு நாடு வரை எனது ஓவியங்கள் பறந்து சென்றுவிட்டன. என்னால்தான் அவ்வளவு தூரம் செல்ல முடியவில்லை'' என்று கூறியிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.