மஞ்சு அவள் அப்படித்தான்!
வெள்ளித்திரையை ஆண்ட மிகச்சிறந்த பெண் பாத்திரங்களின் வரிசையில் உச்சம் தொட்ட நாயகி பார்ப்போம்.
வெள்ளித்திரையை ஆண்ட மிகச்சிறந்த பெண் பாத்திரங்களின் வரிசையில் உச்சம் தொட்ட நாயகி பார்ப்போம்.
மஞ்சு!
எற்று நடித்தவர் நடிகை ஸ்ரீபிரியா, திரைப்படம் 'அவள் அப்படித்தான்'.
Advertisement
Advertisement
மஞ்சு, முற்போக்கு சிந்தனை கொண்டவள், எவரையும் சார்ந்து வாழ நினைக்காதவள்.
பதின் பருவத்திலேயே பாலியல் ரீதியான மோசமான அனுபவங்களை தனது வாழ்க்கையில் கண்டவள். அதனால் அப்பருவத்திலேயே மன முதிர்ச்சியும் அடைந்தவள்.
தன் தாய் கள்ளக் காதலுடன் தொடர்பு கொண்டு உறவாடுவதை பார்த்துப் பிறகு, மகளையும் அழைத்துக் கொண்டு அவனுடன் உறவாடுவதை தைரியமாகத் தொடங்குகிறாள் மஞ்சுவின் தாய்.
ஆளுமையில்லாத கணவன், அவனையும்விட்டெறிந்து பேசுகிறாள் அவள், தாயின் கள்ளக் காதலன் இவள் மீது ஆசை வைக்கிறாள்.இப்படி அந்தப் பருவத்திலேயே மஞ்சுவுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் ஏராளம்.அதனால், அவள் சிரித்து நாம்பார்க்க முடியாது. எப்பொழுதும் இறுக்கத்துடனேயே இருப்பவள். நண்பர்கள் குறைவு.
இவள் ஒருவனின் பியோனா இசையில் மயங்கி, அவனை காதலிக்கவும் செய்கிறாள். அவன் இவளுடைய உடலை மட்டும் காதலித்து விட்டு, ' இவ என் தங்கச்சி மாதிரி' என்று சொல்லி கை கழுவி விட்டுப் போகிறான். அவன் என்னை ஏமாத்தனதைக் காட்டிலும் ' என்னை தங்கச்சி மாதிரி சொன்னதைத்தான் தாங்க முடியலே' என்கிறாள். ஆதலால், காதலையும் ஆண்களையும் வெறுக்கத் தொடங்குகிறாள்.
இவளுடன் பழகும் ஆவணப்பட இயக்குநர் (கமல்ஹாசன்) இவர் மீது காதல் கொண்டாலும், முன்பு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் அந்தக் காதலையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் தடுமாறுகிறாள்.
'பெண் சுதந்திரம் என்றால் என்னவென்றே அறியாத பெண்கள் மட்டுமே இச்சமூகத்தில் சந்தோஷமாக வாழ முடியும்' என்று அவளுடைய அனுபவத்தை வைத்து முடிவு எடுக்கிறாள். பதின்ம பருவத்திலிருந்து இளமைப் பருவம் வரையில் ஏமாற்றங்களை மட்டுமே சுமந்து திரிந்த துர்பாக்கியசாலிதான் இந்த மஞ்சு.
இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ஸ்ரீபிரியாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவர் நடித்த கதாபாத்திரங்களிலேயே இந்தக் கதாபாத்திரம்தான் மிகச்சிறந்த கதாபாத்திரம்.
அலட்சியப் பார்வை, தத்துவார்த்தமான பேச்சு என ஒவ்வொரு காட்சியிலேயும் நம்மை வியப்பில் ஆழ்த்தி விடுகிறார்.
தமிழ் சினிமா இன்றளவும் ' அவள் அப்படித்தான்' திரைப்படத்தைக் கொண்டாடி கொண்டுதான் இருக்கிறது. அன்றைய காலகட்டத்தில் இத்திரைப்படம் சுமாரான வெற்றியத்தான் பெற்றது. மேல் தட்டு மக்கள் மட்டுமே வியந்து பார்த்த திரைப்படமிது.
படத்திற்கு பலமே வசனங்கள்தான். அந்தந்த கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு மிகப் பொருத்தமாக வசனங்களை எழுதியிருப்பார்கள். அனந்து கதைக்கு, திரைக்கதை வடிவம் கொடுத்தவர்கள் ருத்ரய்யா, சோமசுந்தேஸ்வரர், வண்ணநிலவன், அனந்து.
ஒளிப்பதிவு நல்லுசாமி, ஞானசேகரன். 'ஸ்ரீபிரியாவை அதிக க்ளோஸ் அப் ஷாட்களில் நிரப்பியிருப்பார்கள்.
'உறவுகள் தொடர்கதை' எனும அற்புதமான பாடலும் இப்படத்தில்தான். இந்தப் பாடலை இசைத்துதான் மஞ்சுவை வீழ்த்தி விடுவான் அந்தக் காதலன். இப்பாடலினால் வீழ்ந்தது மஞ்சு மட்டுமல்ல, நாமும்தான்.
இப்படத்தின் ஆக்கத்தை பார்த்து வியந்து போய் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் இயக்குநர் ருத்ரய்யாவை தனது அடுத்த படத்திற்கு இயக்குநராக பணியமர்த்த முடிவெடுக்கிறார். ஆனால், அவருடைய அடுத்த படமான கிராமத்து அத்தியாயம் படத்தைப் பார்த்த பிறகு தனது முடிவை மாற்றிக் கொள்கிறார்.
இவர்தானா 'அவள் அப்படித்தான்' படத்தை இயக்கியது என சந்தேகம் கொள்ளும் வகையில் 'கிராமத்து அத்தியாயம்' இருந்ததாக பஞ்சு அருணாசலம் அவர்கள் ஆனந்த விகடனில் திரைத் தொண்டர் தொடரிலும் எழுதியுள்ளார்.
இப்பொழுதெல்லாம் பெண்களை மையப்படுத்தும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் அரிதாகி விட்டது. மலையாளத்தில் இன்றைக்கும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் அளித்து படம் தயாரிக்கிறார்கள்.இங்கு ஏனோ தயங்குகிறார்கள். நாயக வழிபாட்டு படங்களே மேலோங்கி நிற்கிறது.
சே.மணிசேகரன்