திருமணமான பெண்களுக்கு சமூகக் கட்டுப்பாடுகள் இன்றளவும் தளர்த்தப்படவில்லை. இருப்பினும் உறவினர்கள், ஆசிரியர்கள் கொடுக்கும் ஊக்கத்தால் பலர் தங்களுக்குள் மறைந்திருக்கும் தனித்திறன்களை வெளிகொணர்கின்றனர். இந்த வரிசையில் சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட வாழப்பாடியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான இளம்பெண் பிரீத்தி ராம், மிஸர்ஸ் சௌத் இன்டியா' என்ற தென் இந்திய அழகி பட்டத்தை பெற்றுள்ளார்.
அவரிடம் பேசியபோது:
எனது கணவர் ராம் என்கிற ராமலிங்கம் இருபாலருக்கான உடற்பயிற்சிக் கூடத்தை நடத்தி வருகிறார். அவருக்கு உதவுவதற்காக, உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்றேன். பின்னர் பயிற்சியாளராகவும் மாறினேன். மிஸர்ஸ் தமிழ்நாடு' போட்டியில் பங்கேற்று, தமிழக அழகியாக தேர்வானேன்.
சேலம் நேரு கலையரங்கில் அண்மையில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று, மிஸர்ஸ் சௌத் இன்டியா' என்ற தென் இந்திய அழகி பட்டத்தை பெற்றுள்ளேன்.
திருமணத்துக்குப் பின்னர் எதையும் சாதிக்க முடியாது என வீட்டுக்குள்ளே இளம்பெண்கள் முடங்குகின்றனர். ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் நான், தென் இந்திய அழகி பட்டம் பெற்றேன். குழந்தைக்கு தாயான பிறகு கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டதும், கணவர் ராம் கொடுத்த ஊக்கமும் உந்துதலும் தான் மிக முக்கிய காரணமாகும்.
கிராமப்புறங்களில் வசித்து வரும் இளம்பெண்கள் திருமணத்துக்குப் பின்னர், இதுபோன்ற போட்டிகளில் பங்கு பெறுவதற்கு பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதை நானும் எதிர்கொண்டுள்ளேன். திறமையை வெளிக் கொணர்ந்து சாதிக்க ஆண், பெண் என வேறுபாடுகள் பார்க்கக் கூடாது. முழு மூச்சாக பயிற்சி எடுத்து முயற்சித்தால் பெண்கள் எந்த துறையிலும் வெற்றி பெற முடியும்'' என்கிறார் பிரீத்தி ராம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.