வெற்றி மீது வெற்றி வந்து..!
'அரசு நிர்வாகத்தில் கடைநிலை ஊழியர் வேலை கிடைத்தால் போதும்' என்று கூறும் இளைய தலைமுறையினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார் இருபத்து மூன்று வயதான சாரு பாண்டே.
'அரசு நிர்வாகத்தில் கடைநிலை ஊழியர் வேலை கிடைத்தால் போதும்' என்று கூறும் இளைய தலைமுறையினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார் இருபத்து மூன்று வயதான சாரு பாண்டே. இவர் குறிப்பிட்ட காலத்தில் எஸ்.எஸ்.சி., வங்கி, ரயில்வே, காவல் துறைகள் என 19 வெவ்வேறு அரசு துறைகளில் எழுதிய போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி அடைந்துள்ளார்.
'உறுதி, விடாமுயற்சி, திட்டமிட்ட அணுகுமுறை ஆகியன மட்டுமே சிறப்பான வெற்றிக்கு வழிவகுக்கும்' என்பதை வெளிப்படுத்தியுள்ள இவருடைய அசாதாரண சாதனையைப் பாராட்டும் விதமாக, புதுதில்லியில் எதிர்வரும் சுதந்திரத் தின விழாவின்போது குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தங்கப் பதக்கம் வழங்க உள்ளார். இந்தியாவின் தலைமைத் தணிக்கையாளர் & கணக்காய்வாளர் அலுவலகத்தின் சென்னை கிளையில் உதவி தணிக்கை அலுவலராகப் பணியாற்றி வரும் சாரு பாண்டே கூறியது:
'சத்தீஸ்கர் மாநிலத்துக்கு உள்பட்ட ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள தில்டா-நெவோராதான் எனது சொந்த ஊர். பள்ளிப் படிப்பை இங்கு முடித்தவுடன் ஹேம்சந்த் யாதவ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் பட்டம் பெற்றேன். அப்போதே நான் போட்டித் தேர்வுகளுக்குத் தயாரானேன்.
Advertisement
Advertisement
எனது வெற்றிப் பயணம் சவால்கள் நிறைந்தவை. பல தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியவில்லை. மனச்சோர்வு அடைவதற்குப் பதிலாக, எதனால் தோல்வி அடைந்தேன் என்று சிந்தித்தேன். அனுபவங்களை ஏணியாக்கிக் கொண்டேன். தோல்விகளைப் பயணத்தின் முடிவாகக் கருதாமல், கற்றல் மேம்படுவதற்குக் கிடைத்த வாய்ப்புகளாகப் பார்க்க வேண்டும். இத்தகைய அணுகு முறையானது இலக்குகளை நோக்கித் தொடர்ந்து முன்னேறவும், கவனத்தைச் சிதறவிடாமல் இருக்கவும் உதவியது.
பாடவாரியாகத் திட்டமிட்டு, வழக்கமான மாதிரித் தேர்வுகள், தொடர்ச்சியான சுய மதிப்பீடு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒழுங்குமுறை சார்ந்த உத்தியை வரையறுத்தேன். ஒவ்வொரு தேர்வுக்குப் பிறகும் எனது தவறுகளைக் கவனமாகப் பகுப்பாய்வு செய்து, அடுத்தத் தேர்வை எதிர்கொள்வதற்கு முன்பே அவற்றைச் சரிசெய்வதில் கவனம் செலுத்தத் தவறவில்லை. தெளிவான இலக்குகளை நிர்ணயித்து, நேரத்தை முறையாக நிர்வகித்து, விடாமுயற்சியுடன் செயல்பட்டால், ஒவ்வொருவரும் வெற்றி அடையலாம்.
எனது சாதனை நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் பல அரசு வேலை தேடும் ஆர்வலர்களுக்கு உத்வேகம் அளிக்கும் ஒரு சக்தியாகவும் மாறியுள்ளது என்பது எனக்கு நிறைவை அளிக்கிறது' என்கிறார் சாரு பாண்டே.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.