முகப்பு
சிறுவர்மணி

சிறுகதை: கனவுக்குளம்

உயரமான நாணல் புதர்களைக் கடந்து அம்மா யானை திரும்பிய திசையைப் பார்த்ததுமே, அது குளத்திற்குச் செல்லும் வழி என்று குட்டியானைக்குப் புரிந்துவிட்டது. எந்த இடத்தில் வேண்டுமானாலும் நின்று பழக்குலைகளைச் சாய்த

Updated On : 27 டிசம்பர், 2023 at 5:44 PM
பகிர்:

உயரமான நாணல் புதர்களைக் கடந்து அம்மா யானை திரும்பிய திசையைப் பார்த்ததுமே, அது குளத்திற்குச் செல்லும் வழி என்று குட்டியானைக்குப் புரிந்துவிட்டது. எந்த இடத்தில் வேண்டுமானாலும் நின்று பழக்குலைகளைச் சாய்த்துத் தின்னலாம். பச்சைப் பசேலென்ற நிறத்தில் கண்களைக் கவர்கின்ற தளிர்களை எங்கு பார்த்தாலும் கிளையை வளைத்துத் தின்னலாம். அதையெல்லாம், அம்மா யானை ஒரு போதும் தடுத்ததே   கிடையாது.

÷பல சமயங்களில் அப்படிப்பட்ட இடங்கள் வரும்போதெல்லாம், குட்டியானை வயிறாரச் சாப்பிடும்வரை அம்மா யானை நின்று காத்திருக்கும். சில சமயங்களில், எங்காவது புது இடத்தில் பழக்குலைகளைப் பார்த்துவிட்டு இழுத்துத் தின்ன ஓடினால்கூட தடுப்பதில்லை. ஆனால், தண்ணீர் அருந்துவதற்கு மட்டும் அம்மா யானைக்கு எல்லா நேரமும் இந்தக் குளத்திற்குத்தான் வரவேண்டும். அம்மா யானைக்குப் பிடித்தமான குளம் இது. இந்தக் குளத்தைத் தவிர, வேறு எந்தக் குளத்தையும் அது ஏறிட்டுக்கூடப் பார்ப்பதில்லை.

÷கிழக்கில் இருக்கிற மலைச்சரிவுப் பக்கமாக ஒரு பெரிய குளம் உண்டு. ஒரு நாள் அந்தப் பக்கமாக நடந்து சென்றபோது, குட்டியானையின் பார்வையில் பட்டது அது. அம்மா யானைக்குப் பிடித்த குளத்தைவிடப் பெரிய குளம் அது. பெரிய அகலமான கரைகள் இருந்தன. ஒவ்வொருமுறையும் பார்த்தும் பார்க்காமல் நடந்து சென்றது அம்மா யானை. அப்போதெல்லாம் தும்பிக்கையால் தொட்டு இழுத்து நிறுத்தி குட்டியானை குளத்தைக் காட்டியது.

÷இப்போதும் அப்படித்தான். அகலமான தலையை அப்படியும் இப்படியுமாக மறுப்பதுபோல் அசைத்துவிட்டு, நடக்கத் தொடங்கிவிட்டது அம்மா யானை. அப்போது, குட்டியானைக்கு அம்மா யானை மீது கடுமையான கோபம் வந்தது. அம்மா கண்டுபிடித்த குளத்திற்கு குட்டி வர வேண்டும். ஆனால், குட்டி கண்டுபிடித்த குளத்திற்கு குட்டியும் போகக்கூடாது, அம்மாவும் வரக்கூடாது என்பது நியாயமே இல்லாத போக்கு என்று தோன்றியது. அம்மாவுக்கு தன் மீது அன்பே இல்லை என்று நினைத்து வருத்தப்பட்டது குட்டியானை.

÷முதல் முறை அம்மா தடுத்தபோது, அது தற்செயலாக இருக்கக்கூடும் என்று நினைத்து அமைதியாக இருந்தது குட்டியானை. ஆனால், அம்மா யானை அடுத்தடுத்துப் பலமுறை அந்தக் குளத்திற்குச் செல்வதைத் தடுத்தது. அதன் பிறகுதான், அம்மா யானையின் விருப்பமின்மையை குட்டியானையால் புரிந்துகொள்ள முடிந்தது.

÷குட்டியானையின் மனதில் ஏராளமானக் கனவுகள் இருந்தன. தான் கண்டுபிடித்த அந்தக் குளத்தில் இறங்கி வயிறு நிறையத் தண்ணீர் குடிக்கவேண்டும். தன்னந்தனியாக நீந்தி விளையாட வேண்டும். ஒரு கரையிலிருந்து மறு கரைவரை நடந்து சென்று திரும்பவேண்டும். தண்ணீரின் குளிர்ச்சியை அனுபவிக்க வேண்டும். தும்பிக்கையால் தண்ணீரை வாரி வாரி எல்லாத் திசைகளிலும் பீய்ச்சி விளையாட வேண்டும். இப்படி ஏராளமான ஆசைகள் அதன் மனதில் தோன்றித்தோன்றி மறையும்.

÷அம்மாவின் கண்டிப்பான  கண்ணசைவைப் பார்த்ததுமே, எல்லாவற்றையும் அடி மனதில் புதைத்துக் கொள்ளும். தன் அம்மாவிற்குத் தெரியாமல் எப்படியாவது ஒருமுறை அந்தக் குளத்திற்குச் சென்று தன் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். இந்தத் திட்டம் நீண்ட காலமாக அதன் நெஞ்சில் ஒரு சுமையாக இருந்தது.

÷வழக்கமான குளத்தை நெருங்கியதும் அம்மா யானை, முதலில் தன் குட்டி நீர் அருந்துவதற்கு வழி செய்து கொடுத்தது. குட்டியானை குனிந்து தண்ணீர் குடிக்கும்போது, அம்மா ஆசையுடன்  தன் தும்பிக்கையால் அதன் கரிய முதுகை மெதுவாகத் தடவிக்கொடுத்தது. அம்மாவுக்கு தன் மீது எவ்வளவு பாசம் என்று மகிழ்ந்தது குட்டியானை. ஆனால், இவ்வளவு பாசமுள்ள அம்மா தன் ஆசையை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டது. பதில் கிடைக்காமல் சோர்வடைந்தது. அந்த நேரத்தில்தான், என்றாவது ஒருநாள் தானே கண்டுபிடித்த குளத்திற்கு தனியாகவே சென்று வரவேண்டும் என்றொரு திட்டம் அதன் மனதில் பிறந்தது.

÷அன்று இரவு முதல் அந்தத் திட்டம், பெரியதொரு கனவாக அதன் மனதில் பற்றிப் படரத் தொடங்கியது. எல்லா நேரங்களிலும் அதே சிந்தனையாக இருந்தது. அதன் காரணமாக, வழக்கமான துள்ளலும், வேகமும்கூட சிறிதளவு குறைந்துவிட்டன. குட்டி யானைக்கு ஏதோ நேர்ந்துவிட்டது என்கிற அச்சத்தால் அம்மா யானை, அதை உச்சி முகர்ந்தும் தட்டிக்கொடுத்தும் உற்சாகப்படுத்தியது.

÷அடுத்த நாள் அம்மா யானை ஒரு பெரிய வேங்கை மரத்தின் அடியில் நின்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. தன் கனவை நிறைவேற்றிக்கொள்ள அதுதான் தக்க தருணம் என்று நினைத்தது குட்டியானை. அம்மாவின் கண்ணில் படாமல் மரங்களின் பின்னால் ஒளிந்து ஒளிந்து நடந்தது. கத்தாழைப்புதர்கள் மண்டிய ஒரு பெரிய திருப்பம்வரை திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்தது. அம்மாவின் பார்வைக் கெட்டாத தொலைவுக்கு வந்துவிட்டோம் என்று உறுதியான பிறகு, கிழக்குத் திசையில் காணப்பட்ட மலைச் சரிவை நோக்கி  வேகவேகமாக நடக்கத் தொடங்கியது. அப்போதே அந்தக் குளம் பார்வையில் பட்டுவிட்டது போன்ற ஆனந்த உணர்வில் அதன் மனம் மிதந்தது. அதன் நடையில் என்றுமே இல்லாத ஒரு வேகமும், உற்சாகமும் காணப்பட்டன. தும்பிக்கையைக் காற்றில் சுழற்றிச் சுழற்றி விளையாடியபடியே நடந்தது.

÷குளத்தை நெருங்கி நின்று பார்த்து ஒரு கணம் பரவசத்தில் திளைத்தது. குளிர்ச்சியான மலைக்காற்று சில்லென்று வீசியது. ஓடிச் சென்று குளத்தைத் தொடும் வேகத்தில்  சரிவில் வேகமாக இறங்கியது. எதிர்பாராமல் ஒரு கட்டை வேர் காலை இடறியது. உடனே, நிலை குலைந்து கீழே விழுந்து உருண்டு சென்று குளத்தில் குப்புற விழுந்தது. யாரோ பிடித்துத் தள்ளிவிட்டதுபோன்ற அச்சத்தில் அதன் உடல் நடுங்கியது.

÷சில நிமிடங்களுக்குப் பிறகுதான், ஒரு வழியாகக் குட்டியானையால் நடந்ததையெல்லாம்  உணர முடிந்தது. கரையிலிருந்து வெகு தொலைவு உருண்டு வந்து கழுத்து வரையிலான ஆழத்தில் கிடப்பதை அதனால் நம்பவே முடியவில்லை. அப்படியே நிமிர்ந்து வானத்தைப் பார்த்தது. இள நீல நிறமும், மேகங்களின் பால் வெண்மையும் கண்களைக் கூச வைத்தன. தும்பிக்கையால் தண்ணீரை அள்ளி வானத்தை நோக்கிப் பீய்ச்சியது. மேலே பீய்ச்சப்பட்ட தண்ணீர் மழைச்சாரல்போல அதன் உடல் மீதே விழுந்து தெறித்தது. அதன் மனதில் அச்சம் கரைந்து மெல்ல மெல்ல ஆனந்தம் நிரம்பியது. காதுகளை தண்ணீரில் நனைத்து அசைத்தது.

÷வயிறு நிறையத் தண்ணீர் குடித்த உற்சாகத்தில், சுற்றிலும் ததும்பி வழிந்த தண்ணீரை வியப்புடன் பார்த்தது. தும்பிக்கையை அப்படியும் இப்படியும் தண்ணீரில் துழாவியது.  நீர்ப்பரப்பு சூரிய வெளிச்சத்தில் வெள்ளித்தகடுபோல மின்னியது. தண்ணீருக்குள்ளேயே கால்களை இடம்மாற்றி ஒரு சுற்று சுற்றி வந்தது.

÷சற்றே அருகில் தண்ணீருக்குள்ளேயே புதிதாகப் பச்சை பிடித்த ஒரு மரக் கன்றின் கிளைகள் காற்றில் அசைந்தன. அதைக் குட்டியானை தற்செயலாகப் பார்த்தது. உடனே, அதன் தளிர்களைப் பிடித்துத் தின்ன வேண்டும் என்ற ஆசை வந்தது. யோசிக்காமல் தண்ணீருக்குள்ளேயே நகர்ந்து அந்தக் கன்றை எக்கிப் பற்ற முனைந்தது. தும்பிக்கையின் நுனி கிளையைப் பற்றிய சமயத்தில், அதன் கால்கள் தண்ணீருக்கடியில் இருந்த பள்ளத்திற்குள் தடுமாறி நழுவுவதைக் குட்டியானை உணர்ந்தது. என்ன நடக்கிறது என்று முற்றிலும் உணரும் முன்பே விழுந்து தண்ணீரில் மூழ்கியது.

÷அந்த நேரத்தில், அதற்கு உடனடியாகத் தன் அம்மாவின் முகம் நினைவிற்கு வந்தது. தன்னை மீறி ""அம்மா...'' என்று சத்தமாகப் பிளிறியது. பிளிறல் ஓசை காட்டைச் சுற்றி எதிரொலிப்பதை அதன் காதுகள் உணர்ந்தன. தன் பருத்த உடலைச் சமநிலைக்குக் கொண்டுவர அதற்கு அதிக நேரம் பிடித்தது. பள்ளத்திற்குள் ஊன்றி நிற்பதற்காக அதன் கால்கள் தள்ளாடின. கால் வைத்த இடமெல்லாம் வழுக்கியது. ஒரு இடத்திலும் பிடிமானம் கிடைக்கவில்லை. மூச்சு முட்டியது. இப்படியும் அப்படியும் பலமுறை உருண்டு முயற்சி செய்த பிறகு, எங்கோ ஒரு மேடான பரப்பில் காலை அழுத்தமாக ஊன்ற முடிந்தது. அதன் பிறகுதான் அதன் பிளிறல் நின்றது.

÷ஒரு நடுக்கம் தன் உடலில் பரவுவதை முதன்முறையாக உணர்ந்தது குட்டியானை. நின்ற நிலையிலேயே அது தன் உடலும், மனமும் தளர்வடையும் வரை நின்றது. பிறகு, துவண்ட நிலையில் மெதுவாகவும், கவனமாகவும் அடியெடுத்துவைத்து கரையை அடைந்தது. திரும்பி நின்று, குளத்திற்கிடையே காற்றில் தலையசைத்துக் கொண்டிருக்கும் மரக்கன்றின் கிளைகளை ஏமாற்றத்துடன் பார்த்தது.

÷குட்டியானை அச்சத்துடன் வந்த வழியிலேயே மெதுவாகத் திரும்பி நடக்கத் தொடங்கியது. மனம்போன போக்கில் நடந்து இப்படி ஒரு ஆபத்தில் சிக்கி தப்பி வந்திருப்பதை  உடனே அம்மாவிடம் சொல்லவேண்டும் என்ற நினைவுடன் சிறிது தூரம் நடந்தது. தன் பிளிறல் சத்தம் அம்மாவின் காதில் விழுந்திருக்குமா? என்று நினைத்தது. அம்மாவின் சொல்லைக் கேட்காமல், நடந்தது எவ்வளவு பெரிய தவறு என்று வருத்தத்தில் மூழ்கியது. நடந்ததை அம்மாவிடம் சொன்னால் எதிர்காலத்தில் தன்மீதான கண்காணிப்பு அதிகரிக்கக்கூடும் என்று நினைத்தது.

÷எனவே, எதையும் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பதே நல்லது என்ற முடிவிற்கு வந்தது. அது தன் இருப்பிடத்திற்கு அருகே வந்துவிட்டது. அப்போது, தற்செயலாக ஏற்பட்ட தடுமாற்றமே தன் தோல்விக்குக் காரணம் என்றும், அப்படிப்பட்ட தடுமாற்றம் எதுவும் இல்லாமல் இன்னொருமுறை முயற்சி செய்தால் தன் கனவுக் குளத்தில் நீந்திக் களிப்பது எளிதாக இருக்கும் என்றும் நினைத்தது. போய் வந்த சுவடே தெரியாதபடி காலையில் நின்றிருந்த இடத்திற்கே வந்து நின்றது. அங்கே நின்று தன் அம்மாவைப் பார்த்த சமயத்தில், அதன் மனதில் அந்தக் கனவுக் குளம் மீண்டும் விரிந்தது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.