சிறுவர்மணி

நம்மைச் சுற்றி நடப்பது என்ன? - 9 ஊராட்சி ஒன்றியம் - மக்களாட்சியின் இன்னொரு படிக்கட்டு

பல கிராம ஊராட்சிகள் ஒன்று சேர்ந்து ஊராட்சி ஒன்றியம் என்னும் அமைப்பின் கீழ் செயல்படுகின்றன என்பதை முன்பே நாம் அறிந்தோம். உதாரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தை எடுத்துக்கொள்வோம். அங்கு வெம்பாக்கம் என்னும் ஊ

கூத்தலிங்கம்

பல கிராம ஊராட்சிகள் ஒன்று சேர்ந்து ஊராட்சி ஒன்றியம் என்னும் அமைப்பின் கீழ் செயல்படுகின்றன என்பதை முன்பே நாம் அறிந்தோம்.

உதாரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தை எடுத்துக்கொள்வோம். அங்கு வெம்பாக்கம் என்னும் ஊராட்சி ஒன்றியம் இருக்கிறது. அதைச் சுற்றிலும் வடமணப்பாக்கம், காகனம், மங்கலம், வயலூர் என்று பல கிராம ஊராட்சிகள் உள்ளன. இதைப் போன்ற முப்பதுக்கும் மேற்பட்ட பல கிராம ஊராட்சி அமைப்புகள் எல்லாம் சேர்ந்து வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அமைப்பின் நிர்வாகத்தின் கீழ் வருகின்றன.

  ஒரு ஊராட்சி ஒன்றிய அமைப்பில் முப்பது கிராம ஊராட்சிகள் இருக்கலாம். அல்லது நாற்பது கிராம ஊராட்சிகள்கூட இருக்கலாம். அந்தந்தப் பகுதிகளைப் பொறுத்து கிராம ஊராட்சிகளின் எண்ணிக்கை மாறுபடும்.

மக்களாட்சியின் அடிப்படைச் செயல்பாடுகள் கிராமத்திலிருந்துதான் தொடங்குகின்றன என ஏற்கனவே அறிந்தீர்கள். 1994 - ஆம் ஆண்டு 73 - வது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன் அடிப்படையில் மூன்று நிலை ஊராட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. 1. கிராம ஊராட்சி, 2. ஊராட்சி ஒன்றியம், 3. மாவட்ட ஊராட்சி அமைப்பு. இதில் கிராம ஊராட்சி செயல்படுவது பற்றி விரிவாகப் பார்த்துவிட்டோம். அடுத்ததாக இப்போது ஊராட்சி ஒன்றியம் பற்றித்தான் விரிவாக ஆராய்ந்துகொண்டிருக்கிறோம்.

ஊராட்சி ஒன்றியம் என்பது மக்களாட்சியின் அடுத்த கட்டமாகும். அரசு அதிகாரங்கள் என்பவை, அமைச்சர்கள், எம். எல். ஏ. க்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடம் மட்டுமே குவிந்துவிடாமல் இருப்பதற்காகவே இந்தவிதமான ஊராட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதாவது, உங்கள் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் இருக்கிறார் அல்லவா? அவர்   அடிக்கடி டெல்லிக்குப் போய்விடுவார். நமது பாராளுமன்றம் அங்குதானே இருக்கிறது? அதைப்போல உங்களது பகுதியின் சட்ட மன்ற உறுப்பினரும் (எம். எல். ஏ) அவ்வப்போது சென்னைக்குச் சென்றுவிடுவார். தமிழக சட்டமன்றம் சென்னையில் அல்லவா இருக்கிறது. அதுபோல அமைச்சர்களும் சென்னையிலும் டெல்லியிலும்தான் இருந்து பணியாற்றுவார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்த விஷயம்தான்.

ஆனால், ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் உங்களது பகுதியிலேயே தொடர்ந்து இருந்து மக்கள் சேவையில் ஈடுபடுவார். கிராமங்கள் பொருளாதார அளவில் வளர்ச்சி அடையவே இதுபோன்ற ஊராட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும் அரசு அதிகாரங்களை கீழ்மட்டத்திலிருந்து பகிர்ந்து அளிப்பதற்காகவும் ஊராட்சி ஒன்றிய அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இத்தகைய ஊராட்சி ஒன்றிய அமைப்பிலிருந்து நிதியும் அதிகாரமும் கிராம ஊராட்சிக்குப் பரவலாக்கப்படுகின்றன.  அதாவது உங்களது கிராமத்தில் சாலை அமைக்கிறார்கள். குளம் வெட்டுகிறார்கள். தண்ணீர் தொட்டி அமைக்கிறார்கள். அதுபோன்ற திட்டங்களுக்கு அரசாங்கம் நிதி     தருகிறது. இந்த நிதி, ஊராட்சி ஒன்றியத்தின் வழியாகத்தான் கிராம ஊராட்சிகளுக்கு வந்து சேரும். ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அமைப்பிற்கும் அரசாங்கம் மொத்தமாக நிதி தந்துவிடும். ஊராட்சி ஒன்றிய அமைப்பில் பல கிராமங்கள் இருக்கும் அல்லவா? இந்த நிதி ஒவ்வொரு கிராமத்திற்கும் பகிர்ந்து தரப்படும். இந்தப் பணம் முறையான திட்டங்களுக்காக அந்தந்த கிராமத்தில் பயன்படுத்தப்படும்.

அதாவது, ஒவ்வொரு கிராமத்திலும் செயற்படுத்தப்படும் திட்டங்களுக்குத் தேவையான முறையான நிதியை ஊராட்சி ஒன்றியம் ஒதுக்கித் தரும்.

தொடரும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT