கிராமத்தில் என்னென்ன திட்டங்களை நடைமுறைப்படுத்தப்போகிறோம் என்பதைப் பற்றி கலந்து பேசுவதற்காக தலைவர், ஒவ்வொரு மாதமும் ஊராட்சி மன்றக் கூட்டத்தை நடத்துவது அவசியம்.
கூட்டம் நடத்தப்படும் நாள், கூட்டத்தில் எதைப் பற்றி விவாதிக்கப்போகிறோம் என்பன பற்றி மூன்று நாட்களுக்கு முன்னதாக உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கவேண்டும். சில சமயங்களில் அவசரமாக ஒரு விஷயத்தைப் பற்றி பேசி விவாதிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், இருபத்தி நான்கு மணி நேரத்திற்குக் குறைவான கால அவகாசத்தில்கூட தலைவர், அவசரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய முடியும்.
இந்தக் கூட்டத்தில் தலைவரும் உறுப்பினர்களும் எதைப் பற்றியெல்லாம் விவாதிப்பார்கள்?
நடந்து முடிந்த மாதத்திற்குரிய கிராம ஊராட்சியின் வரவு செலவுக் கணக்கு அறிக்கையைப் பற்றி விவாதிப்பார்கள்.
நடப்பு மாதத்தில் கிராம ஊராட்சியில் நடைபெற்று வரும் திட்டங்களைப் பற்றி - உதாரணமாக, சிறு பாலம் கட்டும் வேலை நடந்து கொண்டிருந்தாலோ, அல்லது சாலை அமைக்கும் வேலை நடந்து கொண்டிருந்தாலோ அவற்றைப் பற்றிப் - பேசுவார்கள். அந்தத் திட்டம் எந்தளவு நல்ல முறையில் நடந்திருக்கிறது என்பதைப் பற்றியும் பேசுவார்கள்.
கிராம ஊராட்சியில் புதியதாக நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டம் பற்றியும் பேசுவார்கள். அதாவது, மரம் நடுதல், குடி நீர் திட்டம், குளம் தூர்வாருதல், சாலை அமைத்தல்போன்று புதிய செயல்திட்டம் பற்றிப் பேசி முடிவு எடுப்பார்கள். இதுபோன்ற திட்டங்கள் வளர்ச்சித் திட்டங்கள் எனப்படும்.
அந்தந்த வருடத்திற்கான கிராம ஊராட்சியின் நிர்வாக அறிக்கை பற்றியும் பேசுவார்கள்.
கிராம ஊராட்சி அவ்வப்போது என்னென்ன மாதிரியாகச் செயல்பட வேண்டும் என்பதைப் பற்றி ஊரக வளர்ச்சி இயக்குநரும் மாவட்ட ஆட்சித் தலைவரும் தொடர்ந்து கடிதம் வாயிலாக அறிவுரைகளை வழங்குவார்கள். கிராம ஊராட்சி சிறப்பாக நடைபெற அந்த அறிவுரைகள் பெரிதும் உதவியாக இருக்கும் என்பதால் அதைப் பற்றியும் கூட்டத்தில் பேசுவார்கள்.
தலைவர் அறிவிப்பு செய்திருந்த குறிப்பிட்ட நாளில் கூட்டம் நடக்கவில்லை என்றால் என்ன செய்வது? மூன்று நாட்கள் பொறுத்திருந்து பார்ப்பார்கள். பிறகு துணைத் தலைவரே அந்தக் கூட்டத்தை நடத்துவார். துணைத் தலைவரும் வரவில்லை என்றால் உறுப்பினர்களேகூட அந்தக் கூட்டத்தைக் கூட்டிவிடுவார்கள். தலைவர் இல்லாமலும் கூட்டம் நடக்கும்.
கூட்டம் நடக்க இருக்கிறது என்பதற்கான அறிவிப்பை, ஊராட்சி மன்றத் தலைவர் உறுப்பினர்களிடம் நேரடியாகக் கொடுக்க வேண்டும். அப்படி நேரடியாகக் கொடுக்க முடியாவிட்டால், அந்தந்த உறுப்பினர்களின், வயது வந்த குடும்ப உறுப்பினர்களிடம் கூட்டம் பற்றிய அறிவிப்பைக் கொடுக்க வேண்டும்.
அப்படி வயது வந்த நபர்கள் யாரும் வீட்டில் இல்லாத பட்சத்தில் பதிவு அஞ்சலில் கூட்ட அறிவிப்பை, அந்தக் குறிப்பிட்ட உறுப்பினருக்குத் தெரிவிக்கலாம். அல்லது அந்த உறுப்பினர் குடியிருக்கும் வீட்டின் கதவில் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் (ய.அ.ஞ) கூட்ட அறிவிப்பு பற்றிய தகவலை ஒட்டி வைக்கலாம்.
இதற்கு ஏன் இவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்று உங்களுக்குத் தோன்றலாம்.
ஏனென்றால் கூட்ட அறிவிப்பு பற்றி ஏதாவது ஒரு உறுப்பினருக்கு முறையாகத் தகவல் தரவில்லை என்றால்கூட, அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட செயல்திட்டங்கள் அனைத்தும் செல்லாததாகிவிடும்.
ஊராட்சி மன்றக் கூட்டம் நடத்துவது பற்றி தலைவர் மட்டும்தான் முடிவெடுக்க வேண்டும் என்பதல்ல. கூட்டம் நடத்த வேண்டும் என்று உறுப்பினர்களும்கூட முடிவு செய்ய முடியும்.
வரவு செலவுக் கணக்கு விவரங்கள் பற்றியோ, அல்லது கிராமத்தில் நடைபெற்று வரும் திட்டங்கள் பற்றியோ தலைவரிடம் கேள்விகள் கேட்க வேண்டும் என்ற தேவை ஏற்பட்டால் உறுப்பினர்களே சேர்ந்து ஊராட்சி மன்றக் கூட்டத்தை ஏற்பாடு செய்வார்கள். அதற்கு மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஒன்று சேர வேண்டும்.
உதாரணமாக ஒரு ஊராட்சியில் ஒன்பது உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்களில் மூன்று உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்தால்போதும். தலைவரிடம் நிர்வாகம் பற்றிய கேள்விகள் கேட்க அந்த மூன்று உறுப்பினர்களே கூட்டம் நடத்துவதற்கு நாள் குறிக்கலாம். அதற்கான அறிவிப்பை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வேலை நேரத்தில் தலைவரிடம் கொடுப்பார்கள். இந்த அறிவிப்பைக் கூட்டம் நடத்துவதற்கு ஏழு நாட்களுக்கு முன்னதாகக் கொடுக்க வேண்டும்.
கிராம ஊராட்சி மன்றக் கூட்டம் நடைபெறுவதற்கு எத்தனை உறுப்பினர்கள் வர வேண்டும்? மொத்தத்தில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் அவசியம் கூட்டத்திற்கு வர வேண்டும். இல்லையென்றால் கூட்டத்தில் எதையும் பேசி முடிவு எடுக்கக் கூடாது. கணக்கு விவரங்களை முடிவு செய்து கையெழுத்திடக் கூடாது. புதிய திட்டங்கள் பற்றியும் முடிவு செய்யக் கூடாது.
கிராம ஊராட்சிக் கூட்டத்தில் குறிப்பிட்ட ஒரு திட்டத்தை செயல்படுத்துவது பற்றி பேசுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதை அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டால் பிரச்னை இல்லை. ஆனால் சில உறுப்பினர்கள் அந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டாம் என்று மறுப்புத் தெரிவிக்கலாம்.
அதுபோன்ற சமயங்களில் வாக்கெடுப்பு நடைபெறும். அந்தத் திட்டத்திற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் உறுப்பினர்கள் வாக்களிக்கலாம். ஒரு வேளை இரு பக்கமும் சமமான வாக்குகள் இருந்தால் என்ன செய்வது? தலைவர் தன் விருப்பப்படி ஒன்றை ஆதரித்தோ, அல்லது மற்றொன்றை எதிர்த்தோ வாக்களித்து தீர்மானத்தை இறுதி முடிவு செய்துவிடலாம்.
கூட்டத்தில் கலந்து பேசி ஒரு திட்டம் பற்றி தீர்மானம் செய்துவிட்டார்கள், பிறகு அந்தத் திட்டம் சரிப்பட்டு வராது என்று நினைக்கிறார்கள். அப்போது அந்தத் திட்டத்தை ரத்து செய்யவோ- அல்லது அதில் மாற்றங்கள் செய்யவோ விரும்பினால் என்ன செய்வது?
மூன்று மாத காலத்திற்குள் அப்படி எதுவும் எளிதாகச் செய்துவிட முடியாது. அப்படிச் செய்ய வேண்டும் என்றால் இதற்காக ஒரு தனிக் கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். மொத்த உறுப்பினர்களில் பாதிப் பேர் ஒத்துக்கொண்டால் மட்டுமே அந்தக் குறிப்பிட்ட திட்டத்தை ரத்து செய்ய முடியும். அல்லது அதில் ஏதாவது மாற்றங்கள் செய்ய முடியும். உதாரணமாக, கிராமத்தில் ஒரு இடத்தில் மண் சாலை அமைக்கலாம் என்று முடிவு செய்கிறார்கள்.
அல்லது குடி நீர்த் தொட்டி கட்டலாம் என்று முடிவு செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இதை அந்தக் கிராமத்தின் வேறு ஒரு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என்றால், இப்படிக் கூட்டம் நடத்தி உறுப்பினர்களின் ஒப்புதல் வாங்கிய பிறகுதான் மாற்றம் செய்ய முடியும்.
மக்களாட்சி அமைப்பின் மிகச் சிறிய பதவியான கிராம ஊராட்சி மன்ற உறுப்பினருக்கு, அவருக்கென தனிப்பட்ட அதிகாரம் இருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.