பறவையைத் தொடர்வோம்...
தலை மட்டும் சாம்பல் நிறத்தில் இருப்பதால் இதற்கு சாம்பல்தலை நாகனவாய் என்ற பெயர் வந்தது.
சாம்பல்தலை நாகனவாய்
தலை மட்டும் சாம்பல் நிறத்தில் இருப்பதால் இதற்கு சாம்பல்தலை நாகனவாய் என்ற பெயர் வந்தது. உடல் முழுவதும் பழுப்பு நிறத்தில் இருக்கும். உடலின் அடிப்பகுதியும் கால்களும் ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும். இதன் அலகு சற்று நீண்டு கூராக ஆரஞ்சு வண்ண முனையுடன் இருக்கும்.
பெரும்பாலும் மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் அழகிய சிறு பறவை. வயல்வெளிகளிலும் மரங்கள் அடர்ந்த பகுதிகளிலும் வசிக்கும். இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் அதிகம் காணப்படும் பறவை.
20 செ.மீ. நீளம் இருக்கும். சிறிய துளைகளைப் போட்டு அதனுள் வசிக்கும். ஒரு சமயத்தில் 3 முதல் 5 முட்டைகள் வரை இடும். சிறிய பழங்களையும் பூக்களின் தேனையும் பூச்சிகளையும் விரும்பிச் சாப்பிடும். எங்கு சென்றாலும் குழுக்களாகப் பறந்து செல்லும்.
கருங்கொண்டை நாகனவாய்
கருங்கொண்டை நாகனவாய் என்ற பெயர் வந்ததற்குக் காரணம் தலையில் உள்ள கருப்புக் கொண்டைதான். பெரும்பாலும் மெல்லிய ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும் இந்தப் பறவை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அலகு சற்றே நீண்டு வளைந்து காணப்படும். நீண்ட மெல்லிய மஞ்சள் நிறக் கால்களைக் கொண்டிருக்கும்.
எப்போதும் ஜோடியாகக் காணப்படும். இந்தியாவில் இதை அதிகம் பார்க்கலாம். இது மைனா இனத்தைச் சேர்ந்த பறவை என்கிறார்கள்.
நேபாளத்திலும் இலங்கையிலும் இந்தப் பறவையைக் காணலாம். இதன் குரல் மிகவும் இனிமையாக இருக்கும். பெரும்பாலும் மலைப் பகுதிகளில் வசிக்கும்.
சிறிய பழங்களையும் பூச்சிகளையும் விரும்பிச் சாப்பிடும். மரப் பொந்துகளில் வசிக்கும்.
3 முதல் 4 முட்டைகள் வரை ஒரு சமயத்தில் இடும். முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவர 14 நாட்கள் ஆகும்.
சோளக்குருவி
சோளக்குருவியும் மைனா இனப் பறவைதான். அளவில் சிறிய பறவை. உடல் பகுதி பெரும்பாலும் இளஞ்சிவப்பு வண்ணத்தில் இருக்கும். நீண்ட உறுதியான ஆரஞ்சு வண்ணக் கால்களைக் கொண்டிருக்கும். தலை மட்டும் கருப்பாக பளபளப்பாக இருக்கும். சிறகுகளும் கருப்பு நிறத்தில் இருக்கும். கழுத்துக்குக் கீழே சிறியதாக தாடி இருக்கும்.
ஐரோப்பா, ஆசியா மற்றும் இந்தியாவில் அதிகம் காணப்படும் பறவை.
அடிக்கடி இடம்பெயர்ந்து செல்லும் பறவை. பெரும்பாலும் குழுக்களாகவே வசிக்கும்.
வயல்வெளிகளில் தனது இரையைத் தேடிக் கொள்ளும். தானியங்களை விரும்பிச் சாப்பிடும்.
இதன் குரலும் மிகவும் இனிமையாக இருக்கும்.