ஒரு கல்!
ஒரு கவண்!!
யேசு கிறிஸ்து பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இஸ்ரவேல் நாட்டில், பெத்லகேம் என்ற ஊரில் நடந்த கதை இது.
இந்தக் கதையின் நாயகன் தாவீது, ஓர் இளைஞன். சிவந்த மிருதுவான மேனி. சுடர்விடும் கண்கள். அழகிய முகம்.
தாவீதின் தந்தை ஈசாய் ஊரிலேயே முதியவர். செல்வந்தர். அன்புள்ளம் கொண்ட பண்பாளர். ஊர் மக்களால் நேசிக்கப்பட்டவர். மதிக்கப்பட்டவர்.
ஈசாய்க்கு எட்டு மகன்கள். தாவீது எட்டாவது. ஈசாய்க்கு வயதாகிவிட்டதால் அவருடைய குமாரர்களே தந்தைக்குச் சொந்தமான ஒலிவமரத் தோப்புகளையும், திராட்சைத் தோட்டங்களையும் பராமரித்தனர். பார்லி வயல்களில் உழுதனர். பயிரிட்டனர். அறுவடை செய்தனர்.
போர்க்காலங்களில் தாவீதின் மூன்று அண்ணன்மார்கள் மன்னர் சவுலின் படையில் சேர்ந்து போர் முனை சென்றுவிடுவார்கள். எல்லோருக்கும் இளையவனான தாவீதுக்கு ஆடு மேய்ப்பதுதான் முக்கியமான வேலை.
ஆடு மேய்ப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமான வேலை அல்ல. ஆடுகளுக்குத் தேவையான பசும்புல்லையும் குடிநீரையும் தேடி, பெத்லகேமைச் சுற்றியுள்ள ஆபத்தான மலைச்சரிவுகளில் மைல் கணக்கில் அவன் சுற்றித் திரிவான்.
ஒரு கம்பு, ஒரு தோல் பை, சுரமண்டலம் எனப்படும் இசைக்கருவி இம்மூன்றுமே தாவீதின் ஆயுதங்கள். தைரியமும் பலமும் அவனுக்கு இறைவனால் அருளப்பட்ட அணிகலன்கள்.
ஒருநாள் ஒரு சிங்கம் இரத்தப் பசியுடன் ஆட்டு மந்தையைத் தேடி வந்தபோது, தாவீது துணிச்சலுடன் சிங்கத்துடன் மோதினான். அதன் தாடியைக் கெட்டியாகப் பிடித்து தலையைத் திருகியவாறு சுழற்றியடித்து அதைத் தீர்த்துக் கட்டினான். வெற்றியுடன் திரும்பிய போது கரடி ஒன்று வந்துவிடவே அவன் கொஞ்சமும் அஞ்சாமல் அதனுடனும் போரிட்டுக் கொன்று தன் மந்தையிலுள்ள ஆடுகளைக் காப்பாற்றினான்.
பச்சைப் பசேலென்ற மேய்ச்சல் சமவெளியில் ஆடுகள் அமைதியாகப் பசியாறிக் கொண்டிருக்கும்போது தாவீது சிந்தனையில் மூழ்கிவிடுவான். "நான் இந்த ஆடுகளுக்கு பாதுகாப்பு. எனக்கு யார் பாதுகாப்பு? யெகோவா எனப்படும் நான் வணங்கும் தெய்வம்தானே என்னைப் பாதுகாக்கிறார்!' என்றெல்லாம் எண்ணுவான்.
அந்தச் சமயங்களில் சுரமண்டலத்தை மீட்டி "கர்த்தர் என் மேய்ப்பவராக இருக்கிறார். எனக்கு எந்தக் குறையும் வராது' என்று இனிய குரலில் பாடத் தொடங்குவான்.
இஸ்ரவேலருக்கு அடிக்கடி தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த "பெலிஸ்தியர்' என்ற அந்நிய நாட்டவர் மறுபடியும் இஸ்ரவேலைத் தாக்குவதற்காக படையெடுத்து வந்தனர்.
மன்னர் சவுல் எதிரிகளை முறியடைக்க தம் படைகளைத் திரட்டிக் கொண்டு போர் முனை சென்றார்.
ஒரு மலையின் மீது இஸ்ரவேலின் படைவீரர்கள் அணிவகுத்து நின்றனர். எதிரே இருந்த இன்னொரு மலை மீது பெலிஸ்தியர்கள். இரண்டு மலைகளுக்கும் இடையே உள்ள பள்ளத்தாக்கில் காட்டாறு ஓடியது.
பெலிஸ்தியரின் சேனையில் கோலியாத் என்று ஒரு மாவீரன் இருந்தான். ஆறு முழத்துக்கும் மேலே ஒரு சாண் உயரத்துடன் வானத்துக்கும் பூமிக்குமாக நின்ற ஆஜானுபாகுவான கோலியாத்தின் ராட்சஸத் தோற்றமே இஸ்ரவேலரை குலை நடுங்க வைத்தது.
உச்சந்தலையிலிருந்து பாதம் வரை வெண்கலத்தால் ஆன தலைக்கவசம், கேடயம் போன்ற போர்க் கவசங்களால் தன்னைப் போர்த்திப் பாதுகாத்துக் கொண்டு ஈட்டி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் காலையிலும் மாலையிலும் மலை உச்சியில் தோன்றுவான் கோலியாத்.
இஸ்ரவேல் படைகளை அவன் ஏளனத்துடன் பார்ப்பான். இடி முழக்கம் போன்ற உரத்த குரலில், ""உங்களில் எவனுக்காவது தைரியம் இருந்தால் என்னுடன் போரிட வா. என்னைத் தோற்கடித்தால் நானும் என் பெலிஸ்தியரும் உங்களுக்கு அடிமையாகி ஆயுள் முழுக்க சேவகம் பண்ணுகிறோம். நான் ஜெயித்தால் இஸ்ரவேலர் அனைவருமே எங்களுக்கு அடிமையாகி எங்களுக்கு சேவகம் பண்ணவேண்டும். எவனாவது தயாரா?'' என்று சவால் விடுவான்.
இப்படியே கோலியாத் மலை உச்சியில் தோன்றி 40 நாட்கள் சவால் விட்டான்.
அவனுடைய சவாலை ஏற்று அவனுடன் யுத்தம் செய்ய இஸ்ரவேல் சேனையிலுள்ள எந்த வீரனும் முன்வரவில்லை.
ஒருநாள் தாவீது, தன் தந்தையின் கட்டளைப்படி, போர் முகாமில் இருக்கும் தன் அண்னன்மாருக்கு வறுத்த பயறு அப்பங்கள் ஆகியவற்றைக் கொடுப்பதற்காக வந்தான்.
அப்போது வழக்கம்போல் எதிரே இருந்த மலை மீது கோலியாத் தோன்றி இடிமுழக்கம் போன்ற குரலில் இஸ்ரவேல் படையினரைப் பார்த்து சவால் விட்டான்.
இதைக் கேட்ட இளைஞன் தாவீதுக்கு ஆத்திரமும் தன்மானமும் பொங்கியது. ""நான் போகிறேன். இந்த பெலிஸ்தியனை, என் தெய்வம் யெகோவா எனக்குக் கொடுத்திருக்கும் சக்தியினால் முறியடிப்பேன்...'' என்கிறான்.
அதைக் கேட்ட போர்வீரர்கள் தாவீதை மன்னர் முகாமிட்டிருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.
""அரசே கோலியாத்துடன் மோத இவன் தயார்!'' என்றார்கள்.
மன்னர் தாவீதை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ""நீ மென்மையான இளைஞன். கோலியாத்தோ பல போர்க் களங்களைக் கண்டவன். அந்தக் கொடிய அரக்கனை உன்னால் சமாளிக்க முடியாது...'' என்றார்.
அதற்கு தாவீது, ""அரசே, நான் என் மந்தைக்கு வந்த சிங்கத்தையும் கரடியையும் சாகடித்தவன். அந்த மிருகங்களிடமிருந்து என்னையும் என் ஆடுகளையும் காப்பாற்றிய என் யெகோவா, தெய்வ பக்தியே இல்லாத இந்த பெலிஸ்தனிடமிருந்து என்னைக் காப்பாற்றுவார்'' என்றான்.
அவனுடைய துணிச்சல் கண்டு பிரமித்த மன்னர், ""சரி போய் வா! உன் தெய்வம் உனக்குத் துணை நிற்பார்'' என்று வாழ்த்தினார். வெண்கலப் போர்க் கவசங்களை அவனுக்கு அணிவிக்கச் சொன்னார். ஈட்டி, வாள், கேடயம் போன்றவைகளை வழங்கச் சொன்னார்.
போர்வீரனாக மாறிவிட்ட ஆடு மேய்க்கும் இளைஞன் தாவீது சிறிது தூரம் நடந்து பார்த்து விட்டு அரசரிடமே திரும்பி வந்தான்.
""மன்னா! என்னால் இந்தக் கோலத்தில் போக முடியாது. இதையெல்லாம் சுமந்து எனக்குப் பழக்கமில்லை. என்னை மன்னியுங்கள்'' என்றவன் எல்லாவற்றையும் களைந்து எறிந்துவிட்டு தன் தோல் பை, ஆடு மேய்க்கும் கம்பு இரண்டை மட்டும் எடுத்துக் கொண்டு பள்ளத்தாக்கில் இறங்கினான். ஓடையருகே "பளபள'வென்று கூழாங்கற்கள் கிடப்பதைப் பார்த்தான். அதில் ஐந்தைப் பொறுக்கி எடுத்து தன் தோல் பைக்குள் போட்டுக் கொண்டு கோலியாத் நின்ற மலைக்குச் சென்றான்.
வாட்டசாட்டமாக நின்ற கோலியாத்தை தாவீது அண்ணாந்து பார்த்தான்.
தன்னுடன் மோத வந்திருக்கும் இளைஞனைக் குனிந்து பார்த்த கோலியாத் ஏளனமாகக் கொக்கரித்தான்.
""உன்னுடைய கம்பால் அடித்துவிரட்ட நான் என்ன நாயா? என் பக்கத்தில் வந்து பார். உன்னை பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் தீனியாக்குகிறேன்..'' என்றான்.
உடனே தாவீது, ""என்னோடு யுத்தம் பண்ண நீ ஈட்டி, வாள், கேடயங்களுடன் வந்திருக்கிறாய். ஆனால் ஆண்டவரின் அருளுடன் வந்திருக்கும் என்னிடம் நீ தோற்பது நிச்சயம்!'' என்றான். அசாத்திய துணிச்சலுடன் கோலியாத்தை நோக்கி ஓடினான்.
கோலியாத் அவன் மீது ஈட்டியைப் பாய்ச்ச வந்தபோது-
தாவீது மின்னல் வேகத்தில் தன் தோல் பைக்குள்ளிருந்து உண்டிவில் போன்ற கவண் ஒன்றை எடுத்து, அதில் ஆற்றங்கரையில் சேகரித்த கூழாங்கல்லைப் பதித்து, தன் பலம் கொண்ட மட்டும் சுழற்றியடிக்க-
கவணிலிருந்து விடுபட்ட கல் காற்றைக் கிழித்துக் கொண்டு போய், குறி பிசகாமல், வெண்கலத்தால் மறைக்கப்படாத கோலியாத் நெற்றியின் மையப் பகுதியைத் துளைக்க, கோலியாத் முகம் குப்புற விழுந்தான். அதைப் பார்த்து பீதியடைந்து சிதறியோடிய பெலிஸ்தியர்களை இஸ்ரவேலர் விரட்டியடித்தனர்.
இவ்வாறு தாவீது, யாராலும் தோற்கடிக்க முடியாத கோலியாத்தை ஒரு கவண் மற்றும் ஒரு கல் கொண்டு வீழ்த்தினான். அவன் தலையை வெட்டியெடுத்துக் கொண்டு மன்னரிடம் சென்றான்.
மன்னர் அவன் தைரியத்தையும் வீரத்தையும் தெய்வ நம்பிக்கையையும் பாராட்டினார். ""இனிமேல் நீ ஆடு மேய்க்கப் போகவேண்டாம்...'' என்றார். தாவீதைத் தன் படைகளுக்கெல்லாம் தளபதியாக நியமித்து தன் அருகிலேயே வைத்துக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.