பரிசுகள்
இங்கிலாந்து பெரியம்மாஇன்று காலை வந்தார்
இங்கிலாந்து பெரியம்மா
இன்று காலை வந்தார்
இடுப்புயர பெட்டியொன்றை
எனக்குப் பரிசாய் தந்தார்
சின்னச் சின்ன அடுக்குக்குள்ளே
விதம்விதமாய் இனிப்பு
பெரியபெரிய பைக்குள்ளே
வண்ணவண்ண உடுப்பு
பொம்மை வண்டி, பூச்சாடி,
பூனை, யானை, மான்சிற்பம்.
பந்துகள், போலித் துப்பாக்கி,
பறந்து சுழலும் ஹெலிகாப்டர்,
அடுக்கி வைத்த பரிசுகளை
மலைத்து மலைத்துப் பார்த்தேன்
ஏதோ ஒன்று நினைவிலெழ
அடுத்த நொடியில் திகைத்தேன்
""எல்லாம் சரிதான் பெரியம்மா
ஒன்றை மறந்தாய்'' என்றேன்
தோளைத் தொட்ட பெரியம்மா
""என்ன?'' என்று விழித்தார்
""இங்கிலாந்து பேனா'' என்றேன்
""ஐயோ மறந்தேன்'' என்றார்
""அடுத்த முறை மறக்கமாட்டேன்
வாடி செல்லம்'' என்றார்.