பறவையைத் தொடர்வோம்...
மாடப் புறாவை வீடுகளில் வளர்க்கலாம். வெளிர் சாம்பல் நிறத்தில் இருக்கும். சிறகுகளில் இரண்டு கரும்பட்டைகள்
மாடப் புறா
மாடப் புறாவை வீடுகளில் வளர்க்கலாம். வெளிர் சாம்பல் நிறத்தில் இருக்கும். சிறகுகளில் இரண்டு கரும்பட்டைகள் காணப்படும். கழுத்துப் பகுதியில் மட்டும் சற்றே ஊதா நிறம் காணப்படும்.
முதலில் இப் பறவை பாறைகளின் இடுக்குகளில்தான் வசித்து வந்தது. பின்னர்தான் வீடுகளிலும் கட்டட இடுபாடுகளிலும் இடுக்குகளிலும் வசிக்கும் பறவையாக மாறிப் போனது.
ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் ஆசியாவிலும் அதிகம் காணப்படும் பறவை.
29 முதல் 37 செ.மீ. வரை நீளம் இருக்கும். சிறகுகளை விரித்தால் 72 செ.மீ. வரை இருக்கும். எடை 380 கிராம் வரை இருக்கும். பொதுவாக எல்லாப் புறாக்களின் கண்களுக்குள்ளும் ஆரஞ்சு நிறம் காணப்படும்.
புறாக்கள் பெரும்பாலும் குழுக்களாகவே வசிக்கும். இரை தேடும்போதுகூட கூட்டம் கூட்டமாகவே தேடும். எவ்வளவு தூரம் சென்றாலும் திரும்பவும் தனது இருப்பிடத்துக்கு வந்துவிடக்கூடிய அறிவு இவைகளுக்கு உண்டு. பெரும்பாலும் தானியங்களையே விரும்பிச் சாப்பிடும்.
ஒரு சமயத்தில் இரண்டு முட்டைகளே இடும். ஆண் பெண் இரண்டுமே அடை காக்கும். 17 முதல் 19 நாட்களுக்குள் முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவரும்.
நீலகிரி காட்டுப் புறா
நீலகிரி காட்டுப் புறா மாடப் புறாவை விட சற்றே பெரிதாக இருக்கும். அடர்ந்த காட்டுப் பகுதிகளில் வசிக்கும். அடர்ந்த சாம்பல் நிறமும் செம்பழுப்பு நிறமும் கலந்த கலவையில் இந்தப் பறவை இருக்கும். கால்கள் சிவப்பாக இருக்கும். நீலகிரி மலைப் பகுதியில் அதிகம் காணப்படுவதால் இந்தப் பெயர். ஒரு சமயத்தில் ஒரே ஒரு முட்டைதான் இடும்.
தனியாகவும் ஜோடியாகவும் சமயங்களில் குழுக்களாகவும் இரை தேடும். மரங்களில் இருக்கும் பழங்களை விரும்பிச் சாப்பிடும். பழக் கொட்டைகளை வேறு வேறு இடங்களில் போட்டுவிடுவதால் இவை காடுகளில் மரங்கள் அதிக அளவில் வளர்வதற்கு உதவி புரிகின்றன.
சின்ன தவிட்டுப் புறா (சிரிக்கும் புறா)
சின்ன தவிட்டுப் புறாவின் குரல் சிரிப்பது போல இருப்பதால் இதற்கு சிரிக்கும் புறா என்ற பெயரும் உண்டு.
இது அளவில் சிறியதாக இருக்கும். ஆப்ரிக்காவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் இந்திய தீபகற்பத்திலும் அதிகம் காணப்படும் பறவை.
வால் நீளமாக இருக்கும். 25 செ.மீ. நீளப் பறவை. சிவந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். தலையும் உடலின் அடிப்பாகமும் வெளிர்சிவப்பு நிறத்தில் இருக்கும். கழுத்துப் பகுதியில் சிறிய சிறிய கருப்புக் கட்டங்கள் காணப்படும். கால்கள் முற்றிலும் சிவப்பாக இருக்கும். நீர் குடிக்க மட்டும் பெரிய குழுக்களாகச் செல்லும். மரங்களிலிருந்து விழுந்த விதைகள் மற்றும் சிறிய புழு பூச்சிகளை விரும்பிச் சாப்பிடும்.
ஒரு நாளில் இரண்டு முட்டைகளை இடும். 15 நாட்களுக்குள் முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவந்துவிடும்.