டச் ஸ்க்ரீன்
ரொட்டியை நறுக்கும் முறையைக் கண்டுபிடித்தது யார்?
ஏதாவது புதுமைகள் செய்து கொண்டு இருப்பதே பொழுதுபோக்காக இருந்தது ஆட்டோ ரோவெடர் என்பவருக்கு. இவர் அமெரிக்கர். மிசூரி மாகாணத்தில் சில்லிகோத் என்ற இடத்தில் இவர் வசித்துவந்தார். ரொட்டி போன்ற எளிமையான தினசரி உணவுப் பொருளில் ஏதாவது புதுமை செய்தால் என்ன என்று யோசித்தார்.
ரொட்டியை துண்டுகளாக்கி வைத்திருந்தால் அது சீக்கிரமே கெட்டுப்போய்விடும். அதனால் முழு ரொட்டியாக விற்பதே அந்தக் காலத்து வழக்கமாக இருந்தது. தங்களுக்கு வேண்டிய ரொட்டியைத் தாங்களே வீட்டில் செய்ய இயலாத சிலர் மட்டுமே கடைகளில் "ரெடிமேட் ரொட்டி' வாங்குவார்கள்.
இப்படிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இன்னொரு வசதியை செய்து தரலாமே என்று யோசித்தார் ரோவெடர். ரொட்டிகளை ஸ்லைஸ் செய்து ஒரு பாக்கெட்டில் பொதிந்து தருவது என்ற முடிவுக்கு வந்தார். ரொட்டியை ஒரே சீராக நறுக்குவதற்கு அவர் ஒரு யந்திரத்தைக் கண்டுபிடித்தார். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ரொட்டிகளை, அளவு மாறாமல் ஒரே அளவிலான துண்டுகளாக நறுக்க முடியும்.
ரொட்டித் துண்டின் பருமன் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க இல்லத்தரசிகளிடையே அவர் பெரும் ஆய்வே நடத்தினார். இன்றைய கருத்துக் கணிப்பின் முன்னோடியாகவும் அது அமைந்தது. அரை அங்குல அளவு பருமன் உள்ள ரொட்டித் துண்டுகள் பார்க்க அழகாகவும் கைக்கு அடக்கமாகவும் இருப்பதை பெரும்பாலானவர்கள் விரும்பியதைக் கண்டுகொண்டார். ரொட்டியைக் கொண்டு தயாரிக்கப்படும் எந்த வகையான உணவுக்கும் இந்த அளவுதான் பொருத்தமாக இருக்குமென்று முடிவுக்கு வந்தார்.
பருமனைத் தவிர, ரொட்டி எந்த பதத்தில் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் சிந்தித்தார். பேக்கரிகளில் தயாரிக்கப்பட்ட ரொட்டியை விட தனது தொழிற்சாலையில் தயாரிக்கும் ரொட்டிகள் மென்மையாக இருக்கும் வண்ணமாகச் செய்தார்.
உள்ளூர் செய்தித்தாளில் முழுப் பக்க விளம்பரம் செய்து 1928-ஆம் ஆண்டில் தனது நறுக்கிய ரொட்டியை சில்லிகோத் நகரத்தில் விற்பனைக்குக் கொண்டு வந்தார் ரோவெடர். தொழிற்சாலையில் தயாரான நறுக்கிய ரொட்டி பற்றிய அந்த விளம்பரத்தில், ரொட்டிப் பொட்டலத்தை ஒரு பக்கத்தில் பிரிக்கவும்... எவ்வளவு துண்டுகள் வேண்டுமோ அவ்வளவு துண்டுகளை வெளியே எடுத்துப் பயன்படுத்தவும்... என்பது போன்ற வழிமுறைகளைக் குறிப்பிட்டார். ரொட்டி நறுக்குகள் ஒன்றுடன் ஒன்று நெருங்கி, முழு அளவு போலவே தோற்றத்தைத் தருவதற்காக ஒரு நீளமான ஊசியை ரொட்டி ஊடாகச் செருகினார்.
விரைவிலேயே மென்மையான, அளவாக கத்திரித்த ரொட்டிகள் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றன. வீடுகளில் சதுர வடிவ ரொட்டித் துண்டுகளால் செய்யப்பட்ட சாண்ட்விச், உணவகங்களில் செய்யப்பட்ட பல வகை பண்டங்கள் என பெரும் புரட்சியே செய்துவிட்டது. 1930-வாக்கில் அமெரிக்காவின் அனைத்து ஊர்களிலும் நறுக்கிய ரொட்டிகள் மிகப் பிரபலமாகிவிட்டன.