நைல் சமவெளி நாகரிகம் என்று பெருமை வாய்ந்த எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோ. உலகின் பழமையான கலாசார நகரம் இது. கெய்ரோ என்பதற்கு "வெற்றி நகரம்' என்று பொருள். பிரமிப்பூட்டும் பிரமிடுகளின் நகரம் என்றும் கூறலாம்.
உலக மாவீரன் நெப்போலியனும் எகிப்தை சிறிது காலம் ஆட்சி புரிந்துள்ளார். 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கில அரசின் ஆட்சியின் கீழ் வந்த எகிப்து, 1922-ஆம் ஆண்டில் கெய்ரோவைத் தலைநகராகக் கொண்ட சுதந்திர நாடானது. ஒரு கோடியே எண்பது லட்சம் மக்கள் வசிக்கும் கெய்ரோ நகரம் உலகின் ஆறாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகத் திகழ்கிறது.
கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் பாலமாக கெய்ரோ பிற உலக நகரங்களுடன் விமானம் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பன்னாட்டு விமான நிலையமும், ராம்சே புகைவண்டி நிலையமும் ஓய்வில்லாமல் இயங்குபவை.
பிரமிட்: எகிப்து என்றதுமே நினைவுக்கு வருவது கட்டடக் கலையின் மாபெரும் சாதனை எனப்படும் பிரமிடுகள்தான். உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக "பிரமிடுகள்' சிறப்பிக்கப்படுகின்றன. இவை கெய்ரோ நகருக்கு மேற்கே சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் கிசா என்ற பகுதியில் உள்ளன. இவை எகிப்து நாட்டை ஆண்ட பண்டைய மன்னர்களின் கல்லறைகளாகும்.
ஸ்பிங்ஸ்: பிரமிடுகளின் அருகே இருப்பது ஸ்பிங்ஸ் எனப்படும் மற்றொரு புகழ்பெற்ற புராதனச் சின்னமாகும். ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டு பூனையை நினைவுபடுத்தும் இந்தப் பிரமாண்டமான சிலை கட்டடக் கலையின் அதிசயம் என்று கூறலாம்.
அருங்காட்சியகம்: மிகவும் புராதனமான எகிப்தியப் பொருட்களின் கண்காட்சியான இது, உலகின் மிகச்சிறந்த அருங்காட்சியகங்களில் ஒன்றாகும். பழங்காலக் கட்டடக் கலை நுணுக்கமும், புதிய நாகரிகமும் கலந்து 1900-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தில் ஒரு லட்சத்து இருபதாயிரத்துக்கும் அதிகமான புராதன எகிப்திய கலைப் பொருள்கள் காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.
பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும் "மம்மி' எனப்படும் மனித உடல்களும், கல்லாலான சவப்பெட்டிகளும், சிற்பங்களும், சிலைகளும், பண்டைக்கால ஆபரணங்களும் மண்ணினால் தயாரிக்கப்பட்ட வீட்டு உபயோகப் பொருட்களும் இங்கு இடம்பெற்றுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தில் பார்வையாளர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்ப்பது மன்னன் துதன்கமென் என்பவரின் கல்லறை மற்றும் அதில் காணப்படும் பலதரப்பட்ட கலைப்பொருட்களின் கருவூலம். கற்காலம் முதல் கிரேக்க ரோமானியர் காலம் வரையிலான பல்வேறு புராதனப் பொருட்களின் புதையலான இந்த அருங்காட்சியகம், எகிப்தியரின் பண்டைய வரலாறு, புகழ் வாய்ந்த பாரம்பரியம் ஆகியவற்றை நம் கண்முன்னே நிறுத்துகிறது.
மெம்பிஸ்: கி.மு. 3100-ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட புராதன நகரமான மெம்பிஸ் கெய்ரோவிற்கு தெற்கே 24 கி.மீ. தொலைவில் உள்ளது. இது ஒரு கோட்டையைப்போல் நிர்மாணிக்கப்பட்டது. அந்த இடத்தில் இன்று எஞ்சியிருப்பது பரந்து விரிந்த இடிபாடுகளும் நைல் நதியின் வண்டல் மண்ணும், சில கிராமங்களும்தான்.
மித் ரஹினா என்ற சிறிய கிராமத்தைச் சுற்றிலும் இந்நகரத்தின் பல அரிய சின்னங்கள் இன்றும் உள்ளன. இரண்டாவது ராம்சே மன்னனின் சிலை அமைந்துள்ள கோவிலும், "பாரவோ' என்ற பெயரால் அழைக்கப்படும் எகிப்திய அரசர்களின் நினைவாக கி.மு. 14-ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட அல்பாஸ்டர் ஸ்பிங்ஸ் என்ற பெரிய சிற்பமும், அப்ரிஸ் மன்னனின் அரண்மனை இடிபாடு
களும் காண வேண்டிய முக்கியச் சின்னங்களாகும்.
கெய்ரோ கோட்டை: அயூபித் மன்னன் சலா அல்தினின் அதிகாரி மொகம்மது அலியால் கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோட்டை அரச குடும்ப குடியிருப்பாகவும், படைவீரர்கள் விடுதியாகவும் செயல்பட்டு வந்தது. இப்போது இங்கே வரலாற்றுப் புகழ்பெற்ற சின்னங்கள் பல உள்ளன. அவற்றில் முக்கியமானது 14-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அல் நஸீர் முகம்மது மசூதியாகும். படிப்படியாக மாறி வந்துள்ள கட்டடக் கலையின் பாணிகளையும், சிற்பக் கலைச் சிறப்புகளையும் எடுத்துக்காட்டுகின்றன இவை.
காப்டிக் அருங்காட்சியகம்: மார்கோஸ் ஸ்மைகா பாஷா என்பவரால் 1910-ஆம் ஆண்டு இந்த அருங்காட்சியகம் நிர்மாணிக்கப்பட்டது. எகிப்திய கிறிஸ்துவ மதத்தின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் இந்த அருங்காட்சியகத்தில் 16 ஆயிரத்துக்கும் மேலான கலைப்பொருட்கள் உள்ளன. எகிப்திய மன்னர்கள் காலம், கிரேக்க ரோமானியர் காலம், இஸ்லாமிய காலம் ஆகியவற்றின்போது ஏற்பட்ட கலை வளர்ச்சியை அவை காட்டுகின்றன.
அபூ பாறைகள்: கெய்ரோவிலிருந்து 900 கி.மீ. தொலைவில் இருப்பினும் எகிப்து நாட்டிற்கு வரும் எவரும் காண வேண்டிய வரலாற்றுச் சிறப்புப் பெற்ற இடம் இது! நைல் நதிக் கரையில் உள்ள செங்குத்தான மலைப்பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ள அற்புதமான இரு ஆலயங்கள் இங்குள்ளன.
கி.மு. 1250-ஆம் ஆண்டு இரண்டாம் ராம்சே காலத்தில், மணற்கற்களைக் குடைந்து அமைக்கப்பட்ட இந்த ஆலயங்கள் எகிப்தியரின் சூரியக் கடவுளான ரீ ஹெரெக்டேயின் நினைவாக எழுப்பப்பட்டவை.
கி.பி. 1960-ஆம் ஆண்டில் நைல் நதியின் குறுக்கே அஸ்வான் என்ற இடத்தில் அணை கட்டப்பட்டதால் நதியின் நீர் மட்டம் உயர்ந்து இந்தப் புராதனச் சின்னங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டபொழுது இங்கிருந்த ஆலயங்கள் 950 துண்டுகளாகப் பிரித்து எடுக்கப்பட்டு நதியிலிருந்து சற்றுத் தொலைவில் உள்ள நிலப்பகுதியில் பழைய ஆலயம் போலவே மீண்டும் உருவாக்கப்பட்டது.
லக்சார்: எகிப்தின் முக்கிய நகரமான லக்சாரில் பரந்து விரிந்த பாலைவனம், அழகான நைல் நதி, மிகப்பெரிய புராதனக் கோவில்கள், மன்னர்களின் கல்லறைகள் ஆகியவை அமைந்துள்ளன. எகிப்திய வரலாற்றுச் சின்னங்களில் மூன்றில் ஒரு பகுதி இங்கு அமைந்துள்ளது.
புராதனகால முக்கிய வழிபாட்டுத் தலங்களான லக்சார் மற்றும் கர்னாக் ஆகிய இடங்களில் காணப்படும் பிரமாண்டமான சிலைகளும், மலை உச்சியில் குறுகி இருக்கும் நீண்ட கல் கம்பங்கள் போன்ற சின்னங்களும், சரணாலயங்களும் அவசியம் காண வேண்டியவை.
பாலைவனச் சோலை: எழில் மிளிரும் பாலைவனப் பசுஞ்சோலை கெய்ரோவிலிருந்து 800 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குள்ள வெந்நீர் ஊற்றுகள் உலகப் புகழ் பெற்றவை. செங்கடல் கரையில் அமைந்துள்ள ஹுர்கடா எனப்படும் கடற்கரை, நீருக்கடியில் அமைந்துள்ள அழகான பவழப்பாறைகள் அற்புதமான காட்சிகள். வண்ண வண்ண நிறங்களில் பலவித வடிவங்களில் காட்சியளிக்கும் மீன்களுடன் இங்கு தண்ணீரில் நீந்தி மகிழ்வது சுகமான பொழுதுபோக்கு.
புதிய கெய்ரோ: இங்கு காண வேண்டியவை கெய்ரோ கோபுரம், பன்னாட்டு விளையாட்டு அரங்கம், ஓபரா ஹவுஸ் ஆகியவையாகும்.
கெய்ரோவின் முக்கிய வியாபார மையம் கான் எல் கைலிலி சந்தை. பித்தளை, தாமிரம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட அழகுப் பொருட்கள், மர வேலைப்பாடுகள் உடைய பெட்டிகள், அணிகலன்கள், காலணிகள், பைகள், தோல் பொருட்கள், நறுமணப் பொருட்கள் ஆகியவற்றுக்குப் புகழ்பெற்ற இடம்.
கெய்ரோ செல்பவர்கள் மறக்காமல் காண வேண்டியவை எகிப்திய நடனம், இசை மற்றும் எகிப்திய உணவு. இம் மூன்றையும் ஒரே சமயத்தில் வழங்குகிறது நைல் நதிப் படகுச் சவாரி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.