கதைப்பாடல்: எல்லா உயிரும் தொழும்!
வானமோர் கடலாய்ப் பொங்கிவையத்தில் பொழிதல் போலத்
சிறுவர்மணிகதைப்பாடல்: எல்லா உயிரும் தொழும்!
வானமோர் கடலாய்ப் பொங்கிவையத்தில் பொழிதல் போலத்
வானமோர் கடலாய்ப் பொங்கி
வையத்தில் பொழிதல் போலத்
தோணவே மழையும் பெய்து
துயரத்தை இழைக்க லாச்சு!
தாகத்தைத் தணிக்க மேகம்
தருகின்ற மழைசின் னேரம்
சோகத்தை வளர்த்து நம்மைச்
சோதித்தல் வழக்க மாச்சு!
ஆறுகள் குளங்கள் எல்லாம்
அளவின்றிப் பெருகித் தண்ணீர்
ஊரினுள் புகுந்து மக்கள்
உறக்கத்தைத் தொலைக்க லாச்சு!
ஓலைகள் ஓட்டு வீடு
ஒழுகியே இடிந்து வீழச்
சாலையில் மரங்கள் ஆடிச்
சாய்ந்துமே மறிக்க லாச்சு!
வாகனம் வீதி எங்கும்
வற்றாத வெள்ளம் தன்னில்
காகிதக் கப்ப லாட்டம்
கண்முன்னே மிதக்க லாச்சு!
விளையாட்டுத் திடல்கள் யாவும்
விரிநீரின் குளங்கள் ஆகி
உழுந்தோட்டப் பயிர்கள் மூழ்கி
உரியோரை வருத்த லாச்சு!
பட்டினிக் குணவில் லாமல்
பசியினால் துடிப்போர் துன்பம்
பொட்டலம் விமானம் மூலம்
போட்டுமே துடைக்க லாச்சு!
ஆடுகள் கோழி குஞ்சு
அன்புடன் வளர்த்து வந்த
மாடுக ளோடு கன்று
மனிதர்கள் இறக்க லாச்சு!
தப்பிக்க வழிகள் இன்றித்
தவிப்புடன் இருப்போர் தம்மை
முப்படை வீரர் மீட்க
முழுதும்கை கொடுக்க லாச்சு!
கல்லூரி பள்ளி கட்குக்
கனமழை ஓயும் மட்டும்
செல்லாமல் விடுப்புத் தந்து
சிரமங்கள் தடுக்க லாச்சு!
நீரினால் அடைந்த சேதம்
நெஞ்சினை அழுத்து வோரை
நேரிலே ஆள்வோர் பார்த்து
நிவாரணம் அளிக்க லாச்சு!
பொல்லாத இடர்கள் போக்கிப்
புவிவாழ்வின் இயல்பைத் தேக்க
எல்லாமாய் இருகை கூப்பி
இயற்கையைத் துதிக்க லாச்சு!