கதைப்பாடல்: நெஞ்சம் மறவா நேரு மாமா!
ஆயிரத்து எண்ணூற்று எண்பத்து ஒன்பதில்,அலகா பாத்தில், பதிநான்கு நவம்பரில்,
சிறுவர்மணிகதைப்பாடல்: நெஞ்சம் மறவா நேரு மாமா!
ஆயிரத்து எண்ணூற்று எண்பத்து ஒன்பதில்,அலகா பாத்தில், பதிநான்கு நவம்பரில்,
ஆயிரத்து எண்ணூற்று எண்பத்து ஒன்பதில்,
அலகா பாத்தில், பதிநான்கு நவம்பரில்,
சேயென சொரூப ராணி, மோதிலால்
செல்வக் குடும்பத்தில் பிறந்தவர் நேரு!
பிள்ளைப் பருவத்தில் அராபிய நாட்டுப்
பெண்மணி ஒருவர்மேற் பார்வையில் வளர்ந்து,
பள்ளிக் கல்வியை ஐரிஸ் அறிஞர்
அன்புடன் ஊட்டிடப் பயின்றவர் நேரு!
இங்கி லாந்தினில் ஹமாரா நகரினில்
இத்தாலி வீரன் "கரிபால்டி' சரிதத்தில்
முங்கி விடுதலை வேட்கை நெருப்பினை
மூச்சிலும் உயிரிலும் சுமந்தவர் நேரு!
பிரிட்டன் "கேம்பிரிட்ஜ்' பல்கலைக் கழகத்தின்
பெருமை வாய்ந்த "டிரினிடி' கல்லூரியில்
பிரிட்டிஷ் பிரதமர்கள் பயிற்சி முகாமில்
பெற்றார் சோஷ லிஸம்தனை நேரு!
சட்டப் படிப்பினை லண்டனில் முடித்துச்
சமர்த்தராய் இந்தியா திரும்பிய பொழுது
விட்டது வழக்கு அறிஞரின் ஆசை
விரும்பினர் அரசியல் களம்தனை நேரு!
ஜாலியன் வாலா பாக்கினில் நடந்த
ஜனக்கொலை கண்டு பாரத நாட்டின்
வேலியை விட்டு வெள்ளையர் கூட்டத்தை
விரட்டிட வெகுண்டு எழுந்தவர் நேரு!
அந்நிய அடிமை விலங்கினை உடைக்க
அல்லும் பகலும் அயராது உழைத்து
இந்தியப் பிரதமர் பதவியும் வகித்த
எல்லோர்க்கும் முதன்மையாய் இருந்தவர் நேரு!
விஞ்ஞானம், கல்வி, விவசாயம், தொழில்வளம்
வேற்றுமையில் ஒற்றுமை, வேலைவாய்ப்பு, படைபலம்,
பஞ்ச சீலக் கொள்கையும் பளிச்சிட
பட்டொளி வீசிப் பறந்தவர் நேரு!
காந்தியார் ஏற்றிய சுதந்திர தீபத்தைக்
கடைசி வரையிலும் அணையாது காத்துமே
சாந்தியாய் அமைதியாய் சமாதா னத்துடன்
சத்திய சீலராய்த் திகழ்ந்தவர் நேரு!
"ஆசிய ஜோதி'யாய் அகிலம் முழுவதும்
அகத்தினில் ஏந்தியே போற்றிடும் புகழுடன்
மாசிலா "மனிதருள் மாணிக்கம்' ஆகியே
மதிப்பினில் மேருவாய் உயர்ந்தவர் நேரு!
துள்ளிக் குதித்திடும் சின்னஞ் சிறுவரைத்
தூக்கி அணைத்துமே கொஞ்சி மகிழ்ந்ததால்
பள்ளிக் குழந்தைகள் உள்ளம் அனைத்திலும்
பசுமரத் தாணியாய்ப் பதிந்தவர் நேரு!
ஆசையாய் ரோஜாவை அனுதினம் ஆடையில்
அணிந்திடும் தனது பிறந்தநாள் ஆனதை
தேசக் "குழந்தைகள் தினம்'என ஆக்கியே
தேனூறும் இன்பத்தில் திளைந்தவர் நேரு!
இத்தரை கடல்மலை எழுகதிர் வான்மதி
இருக்கிற வரையிலும் இருந்துயிர் வாழ்பவர்
நித்திரை கனவுகள், நினைவுடன் யாவரின்
நெஞ்சிலும் மறவாது நிறைந்தவர் நேரு!