முகப்பு
சிறுவர்மணி

ஊதியம்

அக்பர் பீர்பாலிடம் அன்பும், மரியாதையும் வைத்திருந்தார். அதே சமயம் சில நேரங்களில் அக்பருக்கு அவரிடம் கோபமும் எரிச்சலும்

Updated On : 12 மார்ச், 2016 at 3:26 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:15 PM

அக்பர் பீர்பாலிடம் அன்பும், மரியாதையும் வைத்திருந்தார். அதே சமயம் சில நேரங்களில் அக்பருக்கு அவரிடம் கோபமும் எரிச்சலும் வந்து விடுவதும் உண்டு. அரசாங்க காரியங்களின் சுமையினால் அவருக்கு சில சமயங்களில் பீர்பாலிடம் சண்டை வந்து விடும். அரசரின் அவசர புத்தி, சில சமயம் பீர்பாலுக்கு தண்டனை வழங்கிவிடும். அவர்தான் மிகுந்த புத்திசாலி ஆயிற்றே! எப்படியோ சாமர்த்தியமாகச் சமாளிப்பார்.

 இப்படித்தான் ஒருமுறை அக்பர் பீர்பாலை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுவிட்டார். அரசரின் ஆணையை யார் மீற முடியும்? தண்டனையை ஏற்றுக் கொண்ட பீர்பால், நாட்டை விட்டே வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

 நாட்டை விட்டுக் கிளம்பிய பீர்பால், நீண்ட தூரம் பயணம் செய்தார். பயணக் களைப்பால் அவரது கால்கள் சோர்வுற்று விட்டன. நாள் முழுவதும் சாப்பிடாமல் பசி வேறு துன்புறுத்தியது. கையிலோ காசு ஏதும் இல்லை. களைப்பின் மிகுதியால் சோர்வுற்ற பீர்பால் ஒரு வீட்டின் திண்ணயில் அமர்ந்து விட்டார்.

Advertisement

 அந்தப் பக்கம் வந்துகொண்டிருந்த ஒரு விவசாயி பீர்பாலைப் பார்த்ததும், ""அட! இவர் அக்பர் சக்கரவர்த்தியின் அவையிலிருந்த மதி நுட்பம் வாய்ந்த பீர்பால் அல்லவா? இவர் எப்படி இங்கே? இந்தக் கோலத்தில்! ஒரு பரதேசியைப் போல் படுத்துக் கொண்டிருக்கிறார்!'' என்று நினைத்து ஆறுதலாக சில வார்த்தைகள் பேசினார்.  சாப்பிடுவதற்கு உணவும் தந்து, அவர் தங்குவதற்கு ஒரு குடிசையையும் தந்து உதவினார்.

 அங்கு பீர்பால் சில ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாகக் கல்வியும் போதித்துக் கொண்டு இருந்தார். அங்குள்ள சில ஏழைகள் அவருக்குச் சிறிது பொருளுதவியும் செய்தனர்.

 அந்த ஊரில் பரம்பரைச் சொத்துகள் நிறைந்த ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் மிகவும் கருமியாக இருந்தான். எவ்வளவு சொத்துகள் இருந்தென்ன? அவனிடம் கல்விச் செல்வம் இல்லை. தன் மகனுக்காவது கல்வி புகட்ட அவன் விரும்பினான். ஆனால் அதற்காக அவன் அதிகமாகப் பொருட்செலவு செய்யத் தயாராக இல்லை!

அவன் பீர்பால்

இலவசமாகக் கல்வி போதிப்பதாகக் கேள்வியுற்றான்.

 அந்த செல்வந்தனைப் பற்றிக் கேள்விப் பட்டார் பீர்பால்! அவனைத் திருத்த நினைத்தார்.

 அந்த பணக்காரக் கருமியும் தன் மகனுடன் ஒரு குதிரை வண்டியில் பீர்பாலைக் காண வந்தார். பீர்பாலிடம் தன் மகனுக்குக் கல்வி போதிக்கும்படியும் வேண்டிக் கொண்டார்.

""எவ்வளவு ஊதியம் தருவீர்கள்'' என்று கேட்டார் பீர்பால்.

""இலவசம் என்று கேள்வியுற்றேனே''

""அது ஏழைகளுக்கு..., உன் போன்ற பணக்காரர்களுக்கு அல்ல''

""சரி. மாதம் இருபது பணம் தருகிறேன்''

பீர்பாலுக்கு மிகவும் கோபம் வந்தது! (அப்போது அது மிகச் சொற்பத் தொகை!)

""அதோ அங்கே நிற்கிறாரே உங்கள் குதிரை வண்டிக்காரர்! அவருக்கு என்ன சம்பளம் தருகிறீர்கள்?''

""மாதம் முப்பது பணம் தருகிறேன்''

""என்னிடம் அவன் படித்தால் ஒரு குதிரை ஓட்டுபவரைவிட குறைந்த ஊதியமே அவனுக்குக் கிடைக்கப் போகிறது. பேசாமல் அந்தக் குதிரை ஓட்டுபவரிடம் வண்டி ஓட்டும் பயிற்சியை எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள். என்னைவிட அதிக ஊதியத்தைத் தங்கள் மகன் பெறலாம் அல்லவா?'' என்றார் பீர்பால் எரிச்சலுடன்.

 பீர்பாலின் பேச்சு அந்த செல்வந்தனின் கன்னத்தில் "பளார்...,பளார்' என்று அறைந்தது போல் இருந்தது. தனது கஞ்சத்தனத்தை தகுந்த வார்த்தைகளால் உணர்த்திய பீர்பாலின் நாவன்மை அவனை வியப்பில் ஆழ்த்தியது. பீர்பாலிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்ட செல்வந்தன் அவர் கேட்கும் தொகையை அவருக்கு அளிப்பதாகக் கூறித் தன் மகனை அவரிடம் கல்வி கற்க அனுமதி வேண்டி நின்றான்.

""கல்வி வியாபாரப் பொருளல்ல...நீ திருந்தியதே போதும் எனக்கு...,இங்குள்ள எளியோர்க்கு உன்னால் முடிந்ததைச் செய் அதுவே நீ எனக்குத் தரும் சம்பளமாகும்.'' என்றார் பீர்பால்.

(கவலைப் படவேண்டாம். அக்பர், பீர்பாலை முன்யோசனையின்றி நாட்டைவிட்டு வெளியேற்றி விட்டாரே தவிர பீர்பால் இல்லாமல் அவருக்கு வேலையே ஓடவில்லை. தன் பரிவாரங்களுடன் அவரைத் தேடிக் கண்டுபிடித்து அழைத்துச் சென்றுவிட்டார்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.