முகப்பு
சிறுவர்மணி

துறவியின் மகிமை!

அன்னை ஒருவள் மகனோடு அறிவுரை வழங்கும் குருபீடம்தன்னை அடைந்தார் கனிவோடுதவிப்புடன் வாசலில் காத்திருந்தார்!

Updated On : 20 மார்ச், 2016 at 6:27 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:19 PM

அன்னை ஒருவள் மகனோடு

அறிவுரை வழங்கும் குருபீடம்

தன்னை அடைந்தார் கனிவோடு

Advertisement

தவிப்புடன் வாசலில் காத்திருந்தார்!

"அம்மா உள்ளே வா!' என்று

அருகே அழைத்த அத்துறவி

"நம்மிடம் என்ன வேண்டுகின்றாய்?...

நவில்க!' என்றார் அன்போடு!

"எந்தன் அருமை மகனிடத்தில்

இருக்கும் குறையை என்சொல்வேன்?

அந்தக் குறையைத் தீர்ப்பதற்கு

அடிகள் உதவ வேண்டு'மென்றாள்

"என்ன குறையுன் மகனிடத்தில்

இருக்கக் கண்டாய் இயம்பிடுவாய்...

சொன்னால் தீர்ப்பேன் உடனே நான்

சொல்க' என்றே கேட்டாராம்!

"சும்மா சும்மா இனிப்பதனை

சொல்லச் சொல்லக் கேட்காமல்

அள்ளி, அள்ளித் தின்னுவதை

அடிகள் தடுக்க வேண்டு'மென்றாள்!

அதனைக் கேட்ட அத்துறவி

"அடுத்த வாரம் ஆசிரமம்

மகனை அழைத்து வா..! வந்தால்...,

மார்க்கம் சொல்வேன்' என்றாராம்!

தாயும் தனது மகனோடு

தனது இல்லம் சென்றுவிட்டு

காயும் வெயிலில் மறுவாரம்

கடுகி வந்தாள் துறவியிடம்!

"இனிமேல் இனிப்பு தின்னாதே

இனிப்பு தின்னல் மிகத்தவறு...!

கனிவாய் அன்னை சொல்வதெல்லாம்

கருத்தில் வை!...போ!' என்றாராம்!

"அதிர்ந்து போன அத்தாயோ

இதுதான் உங்கள் அறிவுரையா?

இதிலே என்ன இருக்கிறது?...,

இதற்கேன் இத்தனை நாள்?' என்றாள்.

"அம்மா எனக்கும் இனிப்பதனை

அதிகம் தின்னும் பழக்கமுண்டு...,

என்னிடம் அக்குறை இருக்கையிலே

எப்படி அறிவுரை சொல்வேன் நான்?....,

கடந்த ஏழு நாட்களிலே

களைந்து விட்டேன் அப்பழக்கம்!

தப்பு! விடு! என தம்பிக்கு

தக்க அறிவுரை தந்தேன் நான்!'

என்ற துறவியின் பெருமையினை

எண்ணி எண்ணி மிக வியந்தாள்!

சென்றாள் அன்னை மகனோடு

சிறுவனும் இனிப்பைத் தவிர்த்தானாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.