சிறுவர்மணி

கதைப் பாடல்: காக்கைக் கூடு

DIN

சுள்ளென வெய்யில்
சுடாமல் படர்ந்த
முள்மர இலைகள்
மூடிய ஒரு கிளை!

தன்னை அடைந்த
தனிப்பெருங் காகம்
அன்னையாய்க் கூடு
கட்ட முனைந்தது!

கவ்விய மூக்கில்
ஒவ்வொரு குச்சியைத்
தொய்வில் லாமல்
தொடர்ந்து சேர்த்தது!

மெத்தென்ற புற்கள்
பற்பல வற்றால்
அழகாய்ப் பின்னி
அமைத்தது படுக்கை!

நலிவிலா உடலால்
மெலிவிலாக் காகம்
இரண்டொரு முட்டை
இட்டடை காத்தது!

பருவத்தில் பழுக்கும்
பழம்போல் முட்டை
உருவத்தி லிருந்தே
உயிர்த்தன குஞ்சுகள்!

இளந்தளிர் நாற்றாய்
இருந்தது கண்டு
காகமும் மகிழ்ந்து
ஆகாரம் தந்தது!

காற்றுதா லாட்ட
கனத்த பெருகிளை
ஏற்ற ஊஞ்சலாய்
எப்போதும் அலைந்தது!

வில்லனைப் போல
விரைந்தபாம் பொன்று
செல்வதைக் கண்டு
சிலிர்த்தது காகம்!

காலால் அலகால்
பிராண்டிய தோடு
மேலும் கீழுமாய்ப்
பறந்து திரிந்தது!

அலைந்த காக்கையின்
அவலம் பார்த்த
பருந்துக்கு விருந்தாய்ப்
பாம்பும் ஆனது!

பார்த்த காக்கை
பாசத் தோடே
சேர்த்த இறகால்
செய்தது நன்றி!

ஒருவர்க் கொருவர்
உதவிடும் தன்மையை
இருபெரும் பறவையால்
இனிதறிந் தோமே!

-தெ.முருகசாமி, 
புதுச்சேரி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

‘ஒரு காபி சாப்பிடலாம், வா!’

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

"அவமானத்துக்குரிய மௌனத்தையே மோடி கடைபிடிக்கிறார்": ராகுல் | செய்திகள்: சிலவரிகளில் | 01.05.2024

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

SCROLL FOR NEXT