சிறுவர்மணி

கதைப் பாடல்

DIN

ஆளை அறிந்து வேலைக்குப் போ!
கரடி யானை நண்பர்களாம்
காட்டில் கல்வி பயின்றனவாம்!
இருவரும் ஏழைகள் என்றாலும்
எடுப்பது அதிக மதிப்பெண்களாம்!

பட்டப் படிப்பை முடித்துவிட்டு
படிகள் பலவும் ஏறியுமே...
"எட்டப் போ!...போ!....வேலையில்லை!''
என்றே கேட்டு நொந்தனவாம்!

ஒருநாள் காலை கரடியுமே
ஓடி வந்த யானையிடம்
"மரத்தை வெட்டணும் காட்டினிலே
மருதூர் நரியார் கூப்பிட்டார்!.....

.....இருவரும் போவோம்!'' என்றதுவாம்!
"என்ன மரம் என்று தெரிந்திடணும்
அரசின் மரம் எனில் தண்டனைதான்
அறிந்திடு'' என்றதாம் யானையுமே!

"விருப்பம் இல்லை உனக்கென்றால் 
வீட்டில் குந்தி இருந்துக்கோ
தருகிறான் கூலி எனக்கெந்தத் 
தயக்கமும் இல்லை போகின்றேன்''

என்றே கரடி நடந்ததுவாம்
இரண்டு நாட்கள் கடந்தனவாம்!
சென்ற கரடி சோகமுடன் 
திரும்பி வந்ததாம் யானையிடம்!

வண்டியில் ஏற்றிடும் மூட்டைகளை 
வாங்கிப் போட்டிடும் வேலையிலே
நண்பனைக் கண்டதும் கரடியுமே
நடந்ததைச் சொன்னதாம் கரடியுமே!

"அதிகக் கூலி கொடுப்பதுவாய்
அழைத்தவன் செய்வது மரக்கடத்தல்! 
அதிக விலைக்குப் போகும் மரம்
அதனை வெட்டிட அவன் சொன்னான்!......

......வெட்டிடும் போது காவல் புலி
விரைந்தே வந்தார் பிடிப்பதற்கு!
எட்ட மறைவில் நின்றதனால் 
இங்கே நானும் தப்பி வந்தேன்!''

"ஆளைப் பற்றி அறிந்த பின்னே
அங்கே போகணும் வேலைக்கு!
நாளும் வறுமை வாட்டியதால்
நடந்தாய் அப்படி வருந்தாதே!

பெற்றோர் நமக்கு உணவு, உடை,
பிடித்தமான படிப்பினையும் 
நெற்றி வியர்வை சிந்தியுமே 
நேர்மையாய் உழைத்தே தந்தார்கள்!

உழைத்தே தேய்ந்த நம் பெற்றோரும் 
ஓய்வினைப் பெற நாம் உழைத்திடணும்!
உழைத்திடு இங்கே சுமை தூக்கு!
உடனே'' என்றதாம் யானையுமே!

"சரி'' என கரடி தூக்கியதாம்
தளரா முயற்சியால் வேலையுமே 
பெரிய நிறுவனம் ஒன்றினிலே 
பெற்றே இரண்டும் மகிழ்ந்தனவாம்!

-புலேந்திரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

SCROLL FOR NEXT