காட்சி - 1
இடம் - வீடு
மாந்தர் - சீனிவாசன், சாவித்திரி, கண்ணன் மற்றும் மகேஷ்.
சீனிவாசன்: இந்தச் சின்னஞ்சிறுசுகளைப் போய் கடைக்கு அனுப்புறியே....நல்லாயிருக்கா?
சாவித்திரி: ஏன்? அனுப்பினா என்ன? அவங்களும் தெரிஞ்சிக்கட்டுமே!....
சீனிவாசன்: அது நாம கடைக்குப் போய் பர்சேஸ் பண்றபோது கூட இருந்து பார்க்க வைக்கணும்!..அதுல அவங்களுக்குப் பழக்கமாகும்! இப்படி தனியா அனுப்பினா?
சாவித்திரி: எதையாவது சொல்லாதீங்க! இத்தனை நாள்தான் கூட்டிப்போயாச்சே! ரெண்டு பேருக்கும் ஒரு வயசுதான் வித்தியாசம்! பதிமூணு! பதினாலு! இங்க ரோட்டு மேலே இருக்கிற கடைக்கு அனுப்பினா என்ன சுருங்கிப் போயிடுவாங்களா? நீங்க பேசாம இருங்க!..டேய், பசங்களா! ரெண்டு பேரும் வாங்க!..
கண்ணன் மற்றும் மகேஷ்: என்னம்மா?
(ஒருசேரக் கேட்டுக்கொண்டு அம்மா முன் வந்து நிற்கின்றனர்.)
சாவித்திரி: கடைக்குப்போய் கால் கிலோ புளி,....கால் கிலோ மிளகாய் வற்றல் வாங்கிட்டு வாங்க. ரோட்டு மேலே இருக்கே, குமரன் ஸ்டோர், அங்க வாங்கினாப் போதும்.....ரோட்டைக் கடந்து எதிர்க் கடைக்குப் போகக் கூடாது!....வண்டிகள் வரும்,....சரியா?
(சொல்லிக் கொண்டே பணத்தை நீட்டுகிறாள்)
சாவித்திரி : பத்திரமா டவுசர் பாக்கெட்டுக்குள்ள வை!..... (கண்ணனைப் பார்த்துக் கூறுகிறாள்.)
மகேஷ்: நானும் கவனிச்சிக்கிறேம்மா!
கண்ணன்: (அம்மா பை நீட்டுவதைப் பார்த்து....) கடைக்காரன் பைல போட்டுத் தருவானேம்மா.....இந்தத் துணிப் பை எதுக்கு?
சாவித்திரி: அவன் ப்ளாஸ்டிக் பையில தருவான்!...அது வேண்டாம்னுடு! இந்தத் துணிப்பைல வாங்கிட்டு வா!....
மகேஷ்: இல்லம்மா! போன தடவை நாம கடைக்குப் போனப்பவே பை கொண்டுவாங்கன்னு போட்டிருந்தானே!..நான் படிச்சனே!....
சாவித்திரி: அப்படியா! எங்கண்ணு! எப்படி கவனிச்சிருக்கு! சமத்து! ப்ளாஸ்டிக் உபயோகத்தைக் குறைக்கணும்னு கவர்ன்மென்ட்ல சொல்றாங்கல்ல? டி.வி.ல நியூஸ் கேட்டீல்ல?
கண்ணன்: அது சரிம்மா! கடைக்காரங்களே துணிப்பை விற்கிறாங்களே?
சாவித்திரி: அது பை இல்லாதவங்க வாங்கிக்கட்டும்! நீ இதுல வாங்கிட்டு வா! .சரியா? பையை வீட்டுல வச்சிக்கிட்டு எதுக்கு அநாவசியமா காசு கொடுத்து இன்னொண்ணு வாங்கணும்? செலவு செய்யலாம்,.....காசை விரயம் பண்ணக் கூடாது!....தெரிஞ்சிதா? எது அவசியம்,....எது அநாவசியம்னு தெரிஞ்சிக்கணும்.
(கண்ணனும் மகேஷூம் அம்மா முகத்தையே வியப்போடு பார்க்கின்றனர்.)
சாவித்திரி: சரி,...சமத்தா போயிட்டு வாங்க ரெண்டு பேரும்!
(அவர்கள் வெளியேறுகின்றனர்.)
சீனிவாசன்: இதுக்கு நான் போனா பத்தாதா? சின்னஞ்சிறிசுகளைப் போய் அனுப்புறியே?.... உப்புக்கும் புளிக்கும் இப்பவே அதுக அலையணுமா?
சாவித்திரி: இத்தனை வருஷமா போனீங்கள்ல?...போதும்!....பேசாம உட்காருங்க...
காட்சி - 2
இடம் -குமரன் ஸ்டோர்ஸ் வாசல்
மாந்தர்- கண்ணன், மகேஷ், கடைக்காரர்.
கண்ணன்: சார்!...கால் கிலோ புளி,.... கால் கிலோ மிளகாய் வற்றல்.....
(தெளிவாய் வந்த குரலைக் கேட்டு அவர்களை விழித்துப் பார்க்கிறார் கடைக்காரர்)
கடைக்காரர்: புதுப்புளியா? பழம் புளியா?
(கேள்வி வந்து விழுந்த வேகத்தைப் பார்த்து அசந்து போகின்றனர் இருவரும்)
மகேஷ்: (சற்றுத் தள்ளிப் போய் நின்று) இங்க வாடா,...ஓடிப் போய் அம்மாட்டக் கேட்டுட்டு வந்திடட்டுமா? அஞ்சே நிமிஷம்....
கண்ணன்: போடா, கிறுக்கு மாதிரிப் பேசாத!....எங்கயாச்சும் பழம் புளிய வாங்குவாங்களா?....புதுசை வாங்கிட்டுப் போனாத்தான் அம்மா பாராட்டுவாங்க!....பழசை வாங்கினா இதை ஏன் வாங்கிட்டு வந்தீங்க..இது கூடத் தெரியாதான்னு சொல்லித் திட்டுவாங்க! நாம புதுப்புளின்னே கேட்டு வாங்கிட்டுப் போவோம்!....
மகேஷ்: சரிடா!....
கடைக்காரர்: சீக்கிரம் சொல்லுங்க தம்பி,.....மொளகாவத்தல்,.....நீட்டமா? உருட்டா?
கண்ணன்: இதென்னடா வம்பாப் போச்சு! புதுசா இன்னொண்ணைக் கேட்குறாரு? மிளகா வத்தல்னா அதுல ஒண்ணுதானடா இருக்கணும்? புளி மாதிரியே இதுலயும் ரெண்டா?
மகேஷ்: சரியான தலைவலிடா?
(இருவரும் யோசிக்கின்றனர்)
கடைக்காரர்: நீங்க ரெண்டு பேரும் எல்.ஐ.சி. சீனிவாசன் சார் பிள்ளைங்கதானே? உங்க அம்மா என்ன வாங்குவாங்கன்னு எனக்குத் தெரியும்.....நான் தர்றேன்....கொண்டு போய்க் கொடுங்க,...சரியா இருக்கும்!..
(இருவரும் தலையாட்டுகின்றனர்)
மகேஷ்: (வாங்கிக்கொண்டு வீடு திரும்புகையில் கண்ணனைப் பார்த்து) இத முதல்லயே அந்தாளு கொடுத்திருக்கலாமில்லே,....ரெண்டு சந்தேகத்தைக் கிளப்பிட்டுத்
தர்றாரு!.... குழம்ப வச்சிட்டாரேடா?.... எனக்கு வயித்தைக் கலக்கிடுச்சுடா!..... நல்லா மாட்டிக்கிட்டோம்னே நினைச்சிட்டேன்!....
கண்ணன்: முதல்ல வீட்டுக்குபோய் அம்மாட்ட இதைக் கொடுத்திட்டு, இதுபோல இன்னும் என்னென்னெல்லாம் ரெண்டு ரெண்டு இருக்குன்னு கேட்டுத் தெரிஞ்சிக்கணும்டா. இப்டி வெளில வந்து அசடு மாதிரி இனிமே முழிக்கக் கூடாது... சரியா?
மகேஷ்: அது மட்டுமில்ல,.....இனிமே கடைக்குப் போற வேலையை நாமதான் செய்யணும்!....எல்லாத்தையும் தெரிஞ்சிக்கணும்!....அம்மாவை அலைய விடக் கூடாது....ஓ,கே?
கண்ணன்: ஓ.கே.டா..!!!
(இருவரும் உற்சாகமாய் வீடு நோக்கி நடக்கின்றனர்....இருவரின் வாயும் அவர்களை அறியாமல் முனகுகின்றது...)
புதுப்புளி!.... பழம்புளி!..புதுப்புளி!.... பழம்புளி!,...... நீளவற்றல்!...... உருட்டு வற்றல்! நீள வற்றல்!.... உருட்டு வற்றல்!!.
"ஆளும் வளரணும்!..... அறிவும் வளரணும்!... அதுதாண்டா வளர்ச்சி!....' - எங்கிருந்தோ பாடல் சத்தம் கேட்கிறது!....மென்மையாய்! இனிமையாய்!.....கம்பீரமாய்!....
திரை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.