காட்சி - 1.
இடம் : வீடு, மாந்தர் : வெங்கடேசன்,
ருக்மணி, சிறுவன் சதீஷ்.
சதீஷ் : ஏதுப்பா இந்த மரப் பெட்டி....?
வெங்கடேசன் : இது உங்க தாத்தாவோடது.... இருக்கிறவரைக்கும் உபயோகிச்சிட்டிருந்தது.
சதீஷ் : இதுக்குள்ள என்னெல்லாம் இருக்கு....காண்பி.?....
வெங்கடேசன் : காண்பிப்பேன். ஆனா அதெல்லாம் எனக்கு வேணும்னு நீ கேட்கக் கூடாது....
சதீஷ்: ஏன்? கேட்டா என்னவாம்...?
வெங்கடேசன்: அதெல்லாம் உங்க தாத்தா நினைவா வச்சிருக்கிறது ...அதுக்கு மதிப்பு ஜாஸ்தி!....மரியாதைக்குரியது!....அதனாலதான்!....
சதீஷ் : சரி, கேட்கலை.... காண்பி...பார்ப்போம்!.....
வெங்கடேசன் பெட்டியைத் திறக்கிறார். கனமான தேக்கு மரப்பெட்டி அது. நான்கு புறமும் இரும்புப் பூண் அடித்து அழகாய் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மூடியின் மேற்புறத்தில் இரு புறமும் இரு வட்டக் குழிகளும், நடுவில் நீண்ட ஆழமில்லாத குழி ஒன்றும் இருப்பதைப் பார்த்துக் கேட்கிறான் சதீஷ்.
சதீஷ் : இந்த ரெண்டு குழிகளும் எதுக்கு வலதும் இடதுமா?
வெங்கடேசன் : அது இங்க் பாட்டில் வச்சிக்கிறதுக்கு....ஒண்ணு ரெட் இங்க்...இன்னொண்ணு ப்ளூ இங்க்...
சதீஷ் : இங்க்கா....? அப்டீன்னா...?
வெங்கடேசன் : இப்பல்லாம் நீங்க லெட் பேனா வச்சி எழுதறீங்கல்லியா...அந்தக்காலத்துல நிப்பு வச்ச இங்க் பேனாதான்....இதோ இருக்கே இது மாதிரி....ஒரு பழைய பேனாவை அந்தப் பெட்டிக்குள்ளிருந்து எடுத்துக் காண்பிக்கிறார். (நீளமாய் இருந்த அதை வாங்கிப் பார்க்கிறான் சதீஷ்.) இத வச்சி பாட்டில்ல இருக்கிற கலர் இங்க்ல இப்டித் தொட்டுத் தொட்டு எழுதணும்....செய்து காண்பிக்கிறார். பின்னால இங்க் ஊத்தி எழுதற பேனாவும் வந்தது...
சதீஷ்: ரெட்டு, ப்ளூன்னியே....அது எதுக்கு?
வெங்கடேசன்: உங்க தாத்தா அந்தக் காலத்துல ஜவுளிக்கடை வச்சிருந்தார். வெளியூர் போய் கொள்முதல் பண்ணிட்டு வருவார். வரவு செலவுக் கணக்கை பற்று, வரவுன்னு பிரிச்சி எழுதும்போது வித்தியாசம் தெரியறாப்ல அப்டி சிவப்பு, ப்ளூன்னு ரெண்டு பேனாவைப் பயன்படுத்துவார். அந்தப் பேனாவைப் படுக்கப்போட்டு அது உருளாம இருக்க வைக்கத்தான் இந்த நீண்ட குழி...
சதீஷ் : எங்கிட்டக் கொடுப்பா....என்று சொல்லி வாங்கி தாளில் கிறுக்கிப் பார்த்தான். பேப்பர்தான் கிழிந்தது. என்னப்பா இப்டிக் குத்துது....எழுதவே வர மாட்டேங்குது....?
வெங்கடேசன் : இங்க் இல்லையே....இருந்தா தொட்டுத் தொட்டு லேசு லேசா எழுதிப் பழகினேன்னா வந்திடும்.....வச்சிரு...கையைக் குத்திடாமே....
சதீஷ் : அப்புறம் என்னெல்லாம் இருக்கு...எனக்குக் காண்பிப்பா.....?
வெங்கடேசன் பெட்டியை நன்றாய்த் திறக்கிறார் "ஆ'வென்று வாய் பிளந்து நோக்குகிறான் சதீஷ். பகடை, சோழிகள், பழைய நாணயங்கள் சிலவென்று அவனை வாய்பிளக்க வைக்கின்றன.
சதீஷ் : இதென்னப்பா....ஒரே கயிறாக் கிடக்கு!...இந்தக் கருப்புக் கயிறெல்லாம் எதுக்கு?
வெங்கடேசன் : இதுக்குப் பேரு காசிக் கயிறு. உங்க தாத்தா நிறையத் தடவை காசிக்குப் போயிட்டு வந்தார். அப்போ வாங்கி வந்தது. எல்லாரையும் கைல கட்டிக்கச் சொல்லுவார்... இடது கைல வாட்ச் கட்டிக்கிறோமில்லியா...இது வலது கைல....இப்டி மூணு சுத்தோ, அஞ்சு சுத்தோ கட்டிக்கணும்.....அப்படிக் கட்டிக்கிட்டா நோய் நொடி வராது....மனசுல பயமிருக்காதுன்னு கட்டி விடுவாங்க.....
சதீஷ் : எனக்குக் கட்டி விடுப்பா....?
வெங்கடேசன் : பார்த்தியா...இதுக்குத்தான் ஆரம்பத்துலயே சொன்னேன். எதையும் கேட்கக் கூடாதுன்னு...அதோட மட்டுமில்ல...இதெல்லாம் பழசு....ஒருத்தர் மேலே மதிப்பா, அவர் நினைவா வச்சிப் பாதுகாக்கிறது....உனக்கு புதுசா வாங்கித்தர்றேன்...கட்டிக்கோ....சரியா....?
சதீஷ் : எங்கிட்டக் கொடுப்பா...என் கைல வச்சிப் பார்த்திட்டாவது தர்றேன்... (கொடுக்கிறார்) எவ்வளவு பள பளன்னு இருக்கு...இதப் போய் பழசுங்கிறியே? இதென்னப்பா... ....ஐய்ய்ய்.....மஞ்சளா, இத்தனை பெரிஸ்ஸ்ஸா....? சொல்லிக்கொண்டே ஆசையாய்க் கையில் எடுத்தான் சதீஷ்.
வெங்கடேசன் : அதுதான் யானைப்பல்.......!
சதீஷ் : என்னது...யானைப்பல்லா.....? பயந்தவன்போல் சட்டென்று கீழே வைத்துவிட்டான்.
வெங்கடேசன் : என்னடாது பயந்திட்டியா....? முழு பல்லில்லே....இது தேய்ஞ்சு போனது...இதப்போல மூணு பங்கு பெரிசா இருக்கும் தேயாத முழு யானைப் பல்லு.....
சதீஷ் : சற்றே பயம் நீங்கியவனாய் அதைக் கையில் மறுபடியும் எடுத்துக் கொண்டே கேட்டான். இது எப்படி இங்க வந்தது?
வெங்கடேசன் : அதெல்லாம் தெரியாது. அந்தக் காலத்துலேர்ந்து இருக்கு...அவ்வளவுதான்... தலைவலி, காய்ச்சல்னா...உங்க பாட்டி இதைத் தரையிலே துளி தண்ணி விட்டு உரைச்சு, நெற்றில பற்றுப் போடுவா....ஏதோ மந்திரம் சொல்லி விபூதி இடுவா....மறுநாள் காலம்பற காய்ச்சல் பறந்தோடிப் போயிடும்.
சதீஷ் : அவ்வளவு பவரா இதுக்கு...? டாக்டர்ட்டயே போக வேண்டாமா....? செலவேயில்ல....!
வெங்கடேசன் : அப்டித்தான் அந்தக் காலத்துல நாங்க செய்துக்கிட்டோம். ஊர்ல எல்லாரும் உங்க பாட்டிட்டத்தான் வருவாங்க....தேவலையாச்சே எல்லாருக்கும்.....அதுக்குப்பேர்தான் பாட்டி வைத்தியம்.....
(பாட்டி வைத்தியம்....சதீஷ் ஒரு முறை தனக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டான். தனக்கு ஒரு பாட்டியில்லையே என்ற ஏக்கம் அவன் மனதில் உதித்தது அப்போது.
ஆனாலும் சட்டென்று ஒரு கேள்வி
பிறந்தது மனதில்.)
சதீஷ் : அது சரிப்பா....எந்த மிருகங்களையும் கொல்லக் கூடாதுங்கிறதுதானே சட்டம்...அப்டியிருக்கும்போது இந்த யானைப் பல் எப்டி பாட்டி கைக்கு வந்தது? விலைக்கு வாங்கினதா? அல்லது யாராவது கொடுத்தாங்களா? விலைக்கு வாங்கினதுன்னா இதை விற்ற கடைக்கு எப்டி இந்தப் பல் வந்திருக்கும்? யானையைக் கொன்று எடுத்ததா? அல்லது செத்துப்போன யானைட்டயிருந்து பிடுங்கினதா? யார் கொண்டு வந்து பாட்டிட்டக் கொடுத்திருப்பாங்க....? பாட்டி சொல்லலியா?
வெங்கடேசன் : ஆரம்பிச்சிட்டியா? எதையும் எதற்காக, ஏன், எப்படி என்று கேள்ன்னு சாக்ரடீஸ் சொன்ன மாதிரி கேள்வி மேல கேள்வி போடுறியே....? இப்போ இதுக்கு பதில் சொல்ல உங்க பாட்டி வந்தாத்தான் ஆகும்....அவ மேலோகம் போயி மாமாங்கம் ஆச்சு....ஆள விடு.....
சதீஷ் : சரிப்பா....இப்போவாவது இதைப் பயன்படுத்தலாமில்லியா...? நம்ம வீட்டுல யாருக்காச்சும் காய்ச்சல் வந்தா பாட்டி செய்த மாதிரி உரைச்சு நெற்றிப்பற்று போடலாம்தானே....?
வெங்கடேசன் : சரியாப்போச்சு....உங்கிட்ட இதையெல்லாம் காண்பிச்சதே தப்பால்ல போச்சு..... அதெல்லாம் அந்தக் காலம்....மருந்துகள் மாத்திரைகள்னு செழிப்பா இல்லாத காலம் அது...அதுனால அப்போ இதைப் பயன்படுத்தினாங்க....நாட்டு வைத்தியம்ங்கிற பேர்ல நம்பிக்கையா இருந்தது. இப்போ இதெல்லாம் எடுபடாது....சொன்னா சிரிப்பாங்க....பயப்படுவாங்க... உடனடியா டாக்டர்ட்டப் போறதுதான் இன்றைக்கு புத்திசாலித்தனம்...தெரிஞ்சிதா? : சொல்லிக்கொண்டே அந்த யானைப்பல்லை வாங்கி மறுபடியும் பெட்டிக்குள் வைத்தார் வெங்கடேசன். எட்டி எட்டி உள்ளே பார்ப்பதைப் பார்த்து...தலையை எடு...இடிக்கப் போறது...என்றார்.
ருக்மணி : சரி...சரி...பார்த்தது போதும்...சாப்பிட வாங்க ரெண்டு பேரும்....
காட்சி : 2
இடம் : வீடு : மாந்தர் : வெங்கடேசன்,
ருக்மணி, சதீஷ்
இன்னும் என்னென்ன பொருளெல்லாம் அந்தப் பெட்டிக்குள் இருக்கும் என்கிற
சிந்தனையே சதீஷின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. நீண்ட ஓலைச்சுவடிகள் சில அவனது கவனத்தைக் கவர்ந்திருந்தது. தாத்தா படத்தோடு இன்னொரு தாத்தா படமும் வீட்டில் மாட்டப்பட்டிருப்பதும், அவர்களைப் பற்றி அப்பா சில முறை சொல்லியிருப்பதும் நினைவுக்கு வந்தது.
ருக்மணி : பழைய திருவிளையாடற்புராணம் அதுல இருக்குன்னு உங்கள எடுக்கச் சொன்னா அத விட்டிட்டு மற்றதெல்லாம் அவனுக்குக் காண்பிச்சிட்டிருக்கீங்களே...?
வெங்கடேசன் : காண்பிச்சா என்ன...? பார்த்திட்டுப் போறான்...தாத்தா பாட்டியைப் பார்க்காட்டாலும் அவங்களப் பத்தித் தெரிஞ்சிக்க ஒரு சந்தர்ப்பம்...
மனசுல ஒரு மரியாதை மதிப்பு வரும்...அது நல்லதுதானே....
ருக்மணி : அதுக்கில்லே...பழைய ஏடுகள்லாம் வச்சிருக்காரே....அதை எங்கே கைத் தவறுதலா எடுத்துப் பிச்சுப்புடுவானோன்னு பயம் எனக்கு. அதுக்காகச் சொன்னேன்.....தொட்டாலே உதிர்ந்திடும்
போல்ருக்கு...அவைகள்...
வெங்கடேசன் : அந்த ஏட்டுக்கு ஒரு தனிக் கதையே உண்டாக்கும். தஞ்சாவூர் உத்தமதானபுரம் போய் உ.வே.சா.கிட்டே கொடுத்துட்டு வான்னு எங்கப்பாவுக்குத் தாத்தா சொல்லிண்டே இருப்பாராம்.....எங்கப்பா அப்போ சின்னப் பொடியன்...என்னைப் போய் அனுப்புறாரேன்னு அழுவாராம்....இன்னும் சில ஏடுகளும் இருந்ததாம்.
ருக்மணி : ஆமா...உங்கம்மா சொல்லக் கேட்டிருக்கேன்....அப்படியும் ஒருவாட்டி எடுத்திண்டு போனாராமே.....! எல்லாமே ஸ்வாமி சம்பந்தப்
பட்டதுன்னுவா...
வெங்கடேசன் : அதையும் சொல்லிட்டாளா எங்கம்மா...அப்டி எங்க தாத்தாவே எடுத்திட்டுப் போயிருந்தபோது உ.வே.சா. ஊர்ல இல்லையாம்.....இருட்டுற வரைக்கும் காத்துக் கிடந்துட்டு வராமே, அவரை தரிசிக்க முடியாமே, அவர்ட்டத்தான் நேர்ல ஒப்படைக்கணும்னு பிடிவாதமா திரும்பக் கொண்டு வந்துட்டாராம்....
ருக்மணி : அத்தோட நின்னு போச்சு....பொட்டிலயே முடங்கிடுத்து.....அதுக்கு யோகமில்லை....அவர்ட்டப் போய்ச் சேர.....
வெங்கடேசன் : அதான் பெரிய்ய்ய்ய சோகம்....தாத்தாவோட அந்த ஒரே ஆசை நிறைவேறவேயில்லை....படுக்கைல கிடந்தபோது கூட சொல்லிண்டேயிருந்தாராம்...அந்த மகான்ட்ட சேர்க்க முடியலையேன்னு...
சதீஷ் : அந்த ஏடுகள் பொட்டில இப்பயும் இருக்காப்பா.....? தான் எட்டி எட்டிப் பார்த்ததை வைத்துக் கேட்டான்.
வெங்கடேசன் :.....தன் கைக்குக் கிடைச்ச பொக்கிஷமா அதை இன்னைவரைக்கும் பாதுகாத்துண்டு வரா உங்கம்மா......அவ்வளவு பக்தி....எத்தனை ஸ்லோகங்கள் மனப்பாடம் தெரியுமா அவளுக்கு...? வாய் சதா முனகிண்டேதான் இருக்குமாக்கும்...
(சதீஷ் அம்மாவை மரியாதையோடு பார்த்தான். மனதில் ஆசை பெருக்கெடுத்து ஓடியது. யார் அந்த உ.வே.சா.என்கிற தாத்தா? வீட்டில் தொங்கும் படம் ஞாபகத்துக்கு வந்தது. கேள்வி பிறந்தது. இன்னும் என்னவெல்லாம் அதிசயங்கள் அந்தப் பெட்டியில் காணக்கூடும் என்கிற கற்பனையோடேயே அன்றிரவு உறங்கப் போனான்.)
திரை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.