முகப்பு
சிறுவர்மணி

யார் முட்டாள் ?

மாதவன் ஒரு அப்பாவி! ஒரு நாள் ஆற்றங்கரையில் நடந்து கொண்டிருந்தபோது அவனுக்கு ஆற்றுமணலில் தகதக என்று ஏதோ

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:59 PM
பகிர்:

மாதவன் ஒரு அப்பாவி! ஒரு நாள் ஆற்றங்கரையில் நடந்து கொண்டிருந்தபோது அவனுக்கு ஆற்றுமணலில் தகதக என்று ஏதோ மின்னுவது போலிருந்தது! மாதவன்  வியப்புடன் அருகில் சென்று பார்த்தான். அது ஒரு கல்! ஸ்படிகம் போல் இருந்தது. வியப்புடன் அதை எடுத்தான் பையில் போட்டுக்கொண்டான். அந்தக் கல்லுக்கு என்ன மதிப்பு என்பதை மாதவன் அறியவில்லை. ஆனால் ஏதோ விலையுயர்ந்த கல்தான் அது  என்று நினைத்துக் கொண்டான். இந்தக் கல்லை விற்றுவிடலாம் என்று முடிவு செய்தான். 

மறுநாள் கடைத்தெருவுக்குச் சென்றான்.  கடைத்தெருவில்  ரத்னாகர் என்று ஒரு வியாபாரி இருந்தார், அவரிடம் கல்லைக் காண்பித்தான் மாதவன்.  ரத்னாகருக்கு அது வைரக்கல் என்று தெரிந்துவிட்டது!  மாதவன் ஒரு அப்பாவி என்பதைத் தெரிந்து கொண்டார் அவர். 

""இரண்டாயிரம் ரூபாய் தருகிறேன் இந்தக் கல்லை எனக்குக் கொடுத்து விடு!'' 
""மூவாயிரம் தருவாயா?'' என்று கேட்டான் மாதவன். 

மூவாயிரத்தைத் தர விரும்பாத ரத்னாகர் சற்று மாதவனிடம் பேரம் பேச ஆரம்பித்தார். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தார் இவர்கள் அருகில் இருந்த ஒரு மற்றொரு வியாபாரி ஹேமகாந்த். 

வியாபாரி ஹேமகாந்த், ""நான் தருகிறேன்!'' என்று கூறி  அந்த வைரக்கல்லை மூவாயிரம் கொடுத்து  வாங்கினார்!

ரத்னாகருக்கு ஆத்திரமாக வந்தது! அவன் மாதவனைப் பார்த்து, ""அட!....முட்டாளே!...அந்தக் கல் சாதாரணக் கல் அல்ல! வைரக்கல்!....அதன் மதிப்பு தெரியாமல் இப்படி சொற்ப விலைக்குக் கொடுத்துவிட்டாயே!'' என்று கத்தினார்.

""அதற்கு மாதவன், ""சரி, கல்லின் மதிப்பு எனக்குத் தெரியவில்லை! நான் முட்டாள்தான்!.... ஏமாந்து விட்டேன்!....ஆனால் அது வைரம் என்பது உங்களுக்குத்  தெரியுமே! அது விலை உயர்ந்தது என்பதும் தெரியுமே!....நான் கேட்ட விலையை உடனே கொடுத்து அதை நீங்கள் வாங்கியிருக்கலாமே!....உனக்கு அதற்கான முழு வாய்ப்பும் இருந்தது. இருந்தும் நீங்கள் அதைத் தவற விட்டீர்கள்!....நீங்கள் தான்  என்னை விட  முட்டாள்!'' என்று திருப்பிக் கூறினான்.

மாதவனின் பதிலைக் கவனித்த ஹேமகாந்த் அவனிடம் கல்லுக்குரிய மதிப்பைக் கொடுத்தார். ஏமாற்றும் வாய்ப்பு இருந்தும் மாதவனை அவர் ஏமாற்றவில்லை!  மாதவன் மகிழ்ச்சியோடு வீடு திரும்பினான். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.