என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா?
நான் தான் நாகலிங்க மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் கவுரவ்பீட்டா கயனென்சிஸ் என்பதாகும். நான் லெஸிதிடேசி குடும்பத்தைச் சேர்ந்தவன். தென் அமெரிக்காவின் கரிபியன் கரையிலுள்ள கயானா எனும் நாடு தான் என் தாயகம். படமெடுத்தாடும் நாகப்பாம்பின் தலை சிவலிங்கம் மேல் இருப்பது போல பூக்களை நான் கொண்டிருக்கிறேன். என்னை நீலகிரி மலைப் பகுதியில் ஆங்கிலேயர்கள் தான் அறிமுகப்படுத்தினாங்க. ஒரு காலத்தில் காவேரி நதிக்கரையில் அதிகமாக நான் காணப்பட்டேன். இப்போது நான் நகரங்களுக்கும் குடிபெயர்ந்து வந்து விட்டேன். நான் நிழல் தருவதுடன், தூசிகளை வடிகட்டி, சுற்றுப்புறத்தையும் தூய்மைப்படுத்துவேன்.
அடி மரத்திலேயே நீண்ட குச்சிகளுடன், மரத்தை ஒட்டினாற் போல் பூக்களை நான் தாங்கிக் கொண்டிருப்பேன். நடு மரம் மற்றும் தடித்த பெரிய கிளைகளில் பூக்கள் உருவாகும். ஒரு மீட்டர் நீளப் பூக்களில் சிமிழ் போன்ற வடிவில் பூ மொட்டுகள் உருவாகும். விரிந்த நிலையில் மகரந்த தண்டுகள் இணைந்த பகுதி, நாகப்பாம்பின் படமெடுத்த தலையைப் போல இருக்கும். 4 இதைத் தான் நாகம் குடை பிடிக்க உள்ளே லிங்கம் இருக்கும் என்பார்கள். விரிந்த பகுதியின் கீழ் பூவின் அண்டம் சிவலிங்கத்தைப் போலிருக்கும். இதனால் என்னை நாகலிங்க மரம் என்றார்கள்.
குழந்தைகளே, அமேசான் காட்டுப் பகுதியைச் சேர்ந்த மக்கள் என்னை துர்தேவதைகளை விரட்டும் மரம் என்று சொல்கிறார்கள். ஆசிய கண்டத்தில் என்னை செல்வத்தின் அடையாளமாகக் கருதுகிறார்கள். மேலும், என்னை மாசுக் கட்டுப்பாட்டின் தன்மையாகக் காட்டும் குறியீட்டுக் கருவியாகவும் கருதுகிறார்கள். ஏனென்றால் காற்றில் அதிகமான சல்பர் இருந்தால் நான் என் இலைகளை உதிர்த்து அதை வெளிப்படுத்துவேன்.
என் மரத்தின் இலைகளை அரைத்து தேமல், படை போன்ற தோல் நோய்கள் மேல் தடவினால் அது இருந்த இடம் தெரியாது. இலைகளை மென்று தின்றால் பல்வலி போயே போய் விடும். பட்டைகளையும், காய்களையும் பக்குவப்படுத்தி விஷ காய்ச்சலுக்கு மருந்தாகவும் பயன்படுத்துகிறார்கள். பாப்புவா புதிய கயானா அருகிலுள்ள "இனி' எனும் தீவை சேர்ந்த மக்கள் என் கனிகளை கால்நடைகளுக்கு தீவனமாகக் கொடுக்கிறார்கள்.
நீக்ரோ இனத்தவர் என் கனிகளை உண்பதாகவும், மேலும் கனியிலிருந்து ஒரு வகை பானத்தை தயாரிப்பதாகவும் சொல்கிறார்கள். விவசாயிகள் என்னுடைய இலையை நிலத்திற்கு தழை எருவாக பயன்படுத்துகிறார்கள்.
நான் வெட்ட வெட்ட தழைப்பேன். மரத்திலான வேளாண்மைக் கருவிகள் செய்திட நான் பெரிதும் பயன்படுகிறேன். குழந்தைகளே, என்னை வீட்டில் வளர்க்க மாட்டார்கள்.
மனிதனுக்கு விருந்தாவும் மருந்தாகவும் இருப்பது மரங்களே ! ஓடித் திரியும் உயிரினங்கள் அனைத்திற்கும் இளைப்பாற நிழல் தந்து காப்பவை மரங்களே. பாடித் திரியும் பறவையினங்கள் அமர்வதற்கும், அடைவதற்கும் என உண்மையான சரணாலயமாக இருப்பதும் மரங்களே.
சென்னை, கோடம்பாக்கம், அருள்மிகு புலியூர் பரத்வாஜேஸ்வரர் திருக்கோவிலில் நான் தலவிருட்சமாக இருக்கிறேன். நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
(வளருவேன்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.