நீதி
வேலை ஏதும் கிடைக்காமல்வீட்டில் இருந்தது காட்டெருமை!ஆளைத் தேடி வேலைக்கு
வேலை ஏதும் கிடைக்காமல்
வீட்டில் இருந்தது காட்டெருமை!
ஆளைத் தேடி வேலைக்கு
அங்கே சென்றது குள்ளநரி!
""கருப்பா உனக்கு அடுத்துள்ள
காட்டில் வேலை இருக்கிறது!
சுருக்காய் செய்தே முடித்திடலாம்
சுளையாய் கூலி வாங்கிடலாம்!''
என்று சொல்லிய நரியுடனே
எழுந்துச் சென்றது கருப்பனுமே!
சென்ற வழியில் ஓரிடத்தில்
செழித்தே நின்றன மரங்களுமே!
""வெட்டிடு இந்த மரங்களை நீ
விரைவில் வந்திடும் சரக்குந்து!
சட்டென ஏற்றி விட்டதுமே
சம்பளம் வாங்கிச் சென்றிடலாம்!''
என்றே நரியும் சொன்னதுமே
எடுத்தது கருப்பன் கோடரியை!
நின்ற மரங்களை வெட்டியுமே
நிலத்தில் சாய்த்தது சடுதியிலே!
காட்டுக் காவலர் புலியாரும்
கருப்பனைப் பிடித்தே, ""நீ
வெட்டிப்போடும் மரங்கள்பற்றி
தெரியுமா?'' என்றே அவர் கேட்டார்.
""அய்யா! பட்டினி! வேலை இல்லை!
அதனால் நரியார் சொன்னபடி
செய்தேன்! வேலை வேறெதுவும்
தெரியா'' தென்றது கருப்பனுமே!
அந்த நேரம் சரக்குந்தில்
அங்கே வந்தார் நரியாரும்!
""சந்தன மரமா கடத்துகிறாய்?
சாத்தினார் புலியார் கழியாலே!''
"அய்யோ!' என்றே அழுத நரி,
""அய்யா மரங்களைக் கடத்துவது
மெய்யாய்ச் சொல்கிறேன் கரடியார்தான்!''
மெல்லச் சொன்னது குள்ளநரி!
""இன்னொரு ஆளைத் தருகின்றேன்.
எனக்குப் பதிலாய்!... இப்படித்தான்
முன்னொரு தடவை உதவி செய்தார்
முன்னால் இருந்த அதிகாரி!''
....என்று சொன்னது கரடியுமே!
ஏற்றிட வில்லை புலியாரும்!
""உண்மை யான குற்றவாளி
உனக்கே தண்டனை அளித்திடணும்!''
என்றே புலியார் விலங்கிட்டு
இழுத்துச் சென்றார் கரடியாரை!
நின்றே பார்த்த விலங்களும்
""நீதி இது!'' வெனப் புகழ்ந்தனவே!