அரங்கம்: அபிராம்!
(அங்கே வந்து) அபி.. சாப்டுட்டு அப்புறமா தாத்தா கூட கொஞ்சம் பேங்க் வரைக்கும் போயிட்டு வந்துரு..
காட்சி : 1
இடம் : அபிராமின் வீடு / மொட்டை மாடி
நேரம் : காலை 8.45
மாந்தர் : அபிராம், அப்பா, தாத்தா
(அபிராம் ஈரத்துண்டைக் காயப்போடுகிறான்.)
அப்பா : (அங்கே வந்து) அபி.. சாப்டுட்டு அப்புறமா தாத்தா கூட கொஞ்சம் பேங்க் வரைக்கும் போயிட்டு வந்துரு..
அபிராம் : நானா? இன்னிக்கா ?
அப்பா : நீதான்.. இன்னிக்குத்தான்.. லீவுதானே !
அபிராம் : என்ன விஷயம் ?
அப்பா : எஃப்.டி. முடியுது. வட்டியை வாங்கிட்டு அசலை ரெண்டு வருஷத்துக்குப் போட்டுட்டு வரணும்..
அபிராம் : ப்பா.. அங்க கூட்டமா இருந்தா ரொம்ப நேரம் சும்மாவே வெயிட் பண்ணிட்டிருக்கணும்.. ரொம்ப கடுப்படிக்கும்.. அம்மாவ கூட்டிட்டுப் போகச் சொல்லுங்க..
அப்பா : அம்மாக்கு ஏகப்பட்ட வேலை இருக்குடா.. நீயே பத்து மணிக்கு மேல கிளம்பு... பதினொன்னரைக்குள்ள வந்துர்லாம்.. . வரும்போது வெளியே ஏதாவது சாப்ட்டுட்டு வாங்க..
அபிராம் : ப்பா.. ப்ளீஸ்.. என்னால முடியாது..
அப்பா : (படியிறங்கிக் கொண்டே)... ம்ம்ம்...... போயிட்டு வா!.....
(அபிராமின் முகம் வாடுகிறது.)
காட்சி : 2
இடம் : வங்கி
நேரம் : காலை 10. 45
மாந்தர் : அபிராம், தாத்தா, அதிகாரி
(அபிராம் அதிகாரியிடம் வருகிறான்.)
அபிராம் : சார்..
(அதிகாரி எழுதுவதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்க்கிறார்.)
அதிகாரி : யெஸ்.. ?
அபிராம் : சார்.. ஃஎப்.டி. டைம் பீரியட் முடிஞ்சிருச்சு.. இண்ட்ரெட்ஸ்ட்ட வாங்கிட்டு திருப்பிப்போடணும்.. (கை காட்டி) தாத்தா இங்க வந்திருக்கிறார்..
அதிகாரி : (தாத்தாவைப் பார்த்துவிட்டு) ம்ம்ம்.. பாஸ்புக் , பாண்ட் ரெண்ட்டையும் கொடுங்க.. வேலையிருக்கு.. ஒரு பிஃப்டீன் மினிட்ஸ் ஆகும்..
அபிராம் : (மகிழ்ச்சியுடன்) ஓ.கே. சார்..
(அபிராம் தாத்தாவிடம் வருகிறான்.)
அபிராம் : தாத்தா.. பாஸ்புக் பாண்ட் ரெண்டும் கொடுங்க..
தாத்தா : (திடுக்கிட்டு) பாஸ்புக்கா ? புக் வேணுமா..? அது.. பீரோல இருக்கும்னு நினைக்கிறேன்..
(அபிராமின் முகம் மாறுகிறது.)
காட்சி : 3
இடம் : அபிராமின் வீடு
நேரம் : காலை 11. 10
மாந்தர் : அபிராம், அம்மா
(அபிராம் வேகமாகக் கதவைத் திறந்து உள்ளே வருகிறான்.)
அம்மா : என்னடா.. வேலை முடிஞ்சுதா ?
அபிராம் : ( கோபமாக) ம்ம்ம்.. முடியும் ! பேங்க்குக்குப் போறப்போ பாஸ்புக் எடுத்துட்டுப் போகணும்னுகூட தெரியல.. இந்தத் தாத்தா ரொம்ப டார்ச்சர் பண்றார்..
(அபிராம் அறைக்குள் செல்கிறான்.)
அம்மா : ஏன், நீயும்தானே கூடப்போனே ? ஒரு வார்த்தை கேட்டு "பாஸ் புக்'கை ஞாபகப்படுத்தியிருக்கலாம்ல..
(அபிராம் பீரோவைத் திறந்து தேடும் சத்தம் கேட்கிறது.)
அபிராம் : ( குரல்) ம்மா.. பாஸ்புக்கை எங்க வெச்சிருக்கீங்க? ச்சே.. இந்த வீட்ல எதாவது தேடாம எடுக்கிற மாதிரி இருக்கா ?
(அம்மா எழுந்து செல்கிறார்.)
அம்மா : வர்றேன்.. இரு..
(அறை முழுவதும் துணிகள் இறைந்து கிடக்கின்றன......அம்மா புருவங்களைச் சுருக்கியபடி பாஸ்புக்கைத் தேடிக் கண்டுபிடித்து அபிராமிடம் கொடுக்கிறார்.)
காட்சி : 4
இடம் : வங்கி
நேரம் : காலை 11. 40
மாந்தர் : அபிராம், தாத்தா , அதிகாரி
(தாத்தா பதிவேட்டில் கையொப்பம் போடுகிறார்.)
அபிராம் : தாத்தா.. "பாண்ட்'டுக்குப் பின்னால அவ்ளோ அழகா கையெழுத்துப் போட்டீங்க.. இப்ப ஏன் இப்படி?
அதிகாரி : வயசானவர்ல, தம்பி..... கொஞ்சம் கஷ்ட்டம்தான்..
அபிராம் : அவ்ளோதானே, சார்?
அதிகாரி : ம்ம்ம்.. (உரக்க) ஐயா, இந்தாங்க.. பாண்ட் மறுபடியும் ரெண்டு வருஷத்துக்குப் போட்டிருக்குது ... வட்டிப்பணம் அக்கவுண்ட்ல போட்டாச்சு.. எப்ப வேணுமோ எடுத்துக்குங்க..
தாத்தா : இப்போ எடுத்துட்டுப் போலாங்களா, சார்?
அதிகாரி : ம்ம்ம்.. டோக்கன் எடுத்துட்டு வெயிட் பண்ணி கவுண்ட்டர்ல வாங்கிக்கலாம்.. செக் லீஃப் இல்லேன்னா சலான் எழுதிக் கையெழுத்துப் போட்டுட்டு பணத்தை எடுத்துக்கோங்க.. (அபிராமிடம்) தம்பி, பாஸ்புக் எடுத்துக்கப்பா..
தாத்தா : சரி, வரங்க சார்..
அதிகாரி : போயிட்டு வாங்க, ஐயா..
காட்சி : 5
இடம் : வங்கி
நேரம் : காலை 12. 15
மாந்தர் : அபிராம், தாத்தா
(அபிராம், கவுண்ட்டர் ஒன்றிலிருந்து திரும்பி வருகிறான்.)
அபிராம் : ஸ்úஸா.. ஏன் தாத்தா இப்படியெல்லாம் பண்றீங்க.. வாங்க, உங்கள கூப்புட்றாங்க..
(தாத்தா எழுந்து செல்கிறார்.)
கவுண்ட்டர் அதிகாரி : நீங்கதானா..? ஏன், சலான்ல கையெழுத்து முன்னாடி ஒரு மாதிரியும் பின்னாடி ஒரு மாதிரியும் இருக்கு?
தாத்தா : பதினொரு மணிக்கு நான் சாப்டுட்டு மாத்திரை சாப்பிடணும்.. அதான் கொஞ்சம் நடுக்கமாயிடுச்சு.. வேணும்னா உங்க கண்ணு முன்னாடியே சைன் போடறேன்..
(தாத்தா கையொப்பம் போடுகிறார்.)
கவுண்ட்டர் அதிகாரி : ஐயா, எவ்ளொ பணம் எடுக்கறீங்க?
தாத்தா : இருபத்தி அஞ்சு..
(சலான் மீது சீல் குத்தப்படுகிறது.)
கவுண்ட்டர் அதிகாரி : (அபிராமிடம்) பண விஷயம்லப்பா.. கொஞ்சம் கவனமாத்தான் இருக்கணும்.. வெளிய அம்பது நோட்டு காட்டுதான்னு பார்த்துக்க...
(அபிராம் கவுண்ட்டர் வெளியே இருக்கும் எல்.இ.டி திரையைப் பார்க்கிறான்.....திரையில் 48.. 49.. 50 என தெரிகிறது.)
காட்சி : 6
இடம் : அபிராமின் வீடு
நேரம் : வெவ்வேறு நேரங்கள்
மாந்தர் : அபிராம், தாத்தா, அம்மா
மணி 1. 05 : அபிராமும் தாத்தாவும் வீட்டுக்குள் நுழைகிறார்கள்.
மணி 1.15 : அபிராம் அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிடுகிறான்.
மணி 1. 30 : தாத்தா அம்மாவிடம் பேசுகிறார். அம்மாவின் முகம் மாறுகிறது.
காட்சி : 7
இடம் : அபிராமின் வீடு / முற்றம்
நேரம் : இரவு 9.10
மாந்தர் : அபிராம், அம்மா
(அபிராம் கைகழுவிவிட்டு உள்ளே வருகிறான்.)
அம்மா : சாப்பாடு நல்லாருந்துச்சா ?
அபிராம் : ம்ம்ம்.. ஓ.கே. ம்மா..
(அம்மா அவனை அமைதியாகப் பார்க்கிறார்.)
அபிராம் : என்ன ம்மா?
அம்மா : அபி எங்கிட்ட கோபமாவே பேசிக்கிட்டிருக்கான்.. பிரியமாவே பேசறதில்லனு தாத்தா சொல்றாருடா.. ஏன் அப்படி நடந்துக்கிற?
அபிராம் : (அலட்சியமாக) அவருக்கு வேற வேலையே இல்ல.. எப்பப் பாரு.. இன்னிக்கு நீங்க அவர்கூட நீங்க போய்ப் பார்த்திருந்தா தெரிஞ்சிருக்கும்..
அம்மா : என்ன பண்ணாரு ?
அபிராம் : பாஸ்புக் எடுத்துட்டு வர்ல, கையெழுத்து ஒழுங்கா போடல.. வர்றப்போ ஹோட்டலுக்குப் போனா என்ன ஆர்ட்டர் பண்றதுனே தெரியாம அத சொல்லலாமா இத சொல்லலாமானு என்னையே கேட்டுட்டிருக்காரு.. கோபம் வராம?
அம்மா : ம்ம்ம்... சரி.. உன்னை எதுக்குக் கூடபோகச் சொல்லறது.. இதெயெல்லாம் பார்த்துக் கோபப்படவா?
(அபிராம் அமைதியாக இருக்கிறான்.)
அம்மா : அபி, நீ சின்ன வயசுல தாத்தாகிட்ட எவ்ளோ சேட்டை பண்ணியிருக்கே .. அதுக்கெல்லாம் அவர் ஒருதடவகூட மொகம் சுளிச்சதே கிடையாது.. இது இப்போ உன்னுடைய முறை.. நீ அவர்கிட்ட நல்லபடியா நடந்துக்கணும்.. கொற சொல்லிட்டேயிருக்கக்கூடாது..
(அபிராம் அமைதியாக இருக்கிறான்.)
அம்மா : வயசானவங்களுக்கு மூளையிலிருக்கிற செல்கள் குறைவாத்தான் இருக்கும்.. அதனால சாதாரண செயல்பாடுகள்கூட சிரமமானதா இருக்கலாம்.. இயற்கைதான்.. அதுக்கெல்லாம் கோபப்படுறதா?
(அபிராம் சிறிது நேரம் அமைதியாக இருக்கிறான்.)
அபிராம் : புரியுது ம்மா.. இனிமேல் இதுமாதிரி விஷயங்கள்ல நான் சரியா நடந்துக்கிறேன் ..
(அம்மாவின் முகத்தில் புன்னகை தோன்றுகிறது.)
(திரை)