மரங்களின் வரங்கள்!: தலை குனிந்து நிழல் தரும் மரம் - வில்லோ மரம்
நான்தான் வில்லோ மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் சாலிக்ஸ் டெட்ரெஸ்பர்மா அல்லது சாலிக்ஸ் பாபிலோனிகா என்பதாகும்.
குழந்தைகளே நலமா?
நான்தான் வில்லோ மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் சாலிக்ஸ் டெட்ரெஸ்பர்மா அல்லது சாலிக்ஸ் பாபிலோனிகா என்பதாகும். நான் சாலியசே குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் சதுப்பு நிலங்கள், குளிர்பிரதேசங்கள், நீர்நிறைந்த இடங்களில் காணப்படுவேன். தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்கள் என்னை நீலகிரி மாவட்டத்தில் வளர்த்தார்கள். ஆனால், நான் இப்போது அழியும் நிலையில் உள்ளேன். என்னை அழகுத் தமிழில் நீர்வஞ்சி, நீர்நொச்சி என அழைப்பாங்க. நான் வேகமாக சுமார் 60 அடி உயரம் கூட வளருவேன். சீனா, ஸ்பெயின், அமெரிக்கா, லத்தீன் நாடுகளில் வணிகத்திற்காக என்னை வளர்க்கிறார்கள்.
என் இலைகள் பட்டு போன்று மென்மையாக இருக்கும். என் மரத்திலிருந்து தீக்குச்சிகள் தயாரிக்கிறார்கள். நான் மிகவும் மென்மையாகவும், எடை குறைவாகவும் அதே சமயம் நீண்ட காலம் உழைக்கக் கூடியவனாகவும் இருப்பதால் உங்களுக்குப் பிடித்த கிரிக்கெட் மற்றும் ஹாக்கி விளையாட்டுகளுக்குத் தேவையான மென்மையான மட்டைகள் (பேட்), புல்லாங்குழல், விசில், மீன்பிடி தூண்டில், வண்ணத் தூரிகைகள், பொம்மைகள் தயாரிக்கப் பயன்படுகிறேன்.
நான் அழுவதைப் போல தலைகுனிந்து வளைந்திருப்பதால் என்னை வீப்பிங் வில்லோ மரமுன்னும் அழைப்பாங்க. ஏன்னா, என் வளைந்த கிளைகளில் தாழ்ந்த பசுமையான அழகிய நீண்ட இலைகளுடன் நான் இருப்பேன். மழை பெய்யும் போது இலைகளிலிருந்து சொட்டும் நீர்த்துளிகள் கண்ணீர்விட்டு அழுவது போல இருப்பதால் எனக்கு அந்தப் பெயரை சூட்டிவிட்டார்கள்.
என் மரத்தின் கரியிலிருந்துதான் துப்பாக்கி குண்டுகளில் பயன்படுத்தப்படும் கன்பவுடர் எனும் பொருள் தயாரிக்கப்படுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் நான் அதிகம் இருந்த பகுதிக்கு, ஊட்டியில் வில்லோ பாண்ட் ரோடு என்ற பெயர் இடப்பட்டுள்ளது, இது இன்றும் இருக்கு.
என் மட்டைகள் மிகுந்த மருத்துவ குணமுடையது. பண்டைய கால மக்கள் என்னை அருமருந்தாகப் பயன்படுத்தினர். தி ரிமார்கபிள் ஸ்டோரி ஆப்ஃ எ வொண்டர் டிரக் என்ற நூலில் எகிப்தியர்கள் உடல்வலிகளைப் போக்க என் மரப்பட்டையை பயன்படுத்தியதாக குறிப்பு உள்ளது. அதாவது குழந்தைகளே, என் பட்டையிலுள்ள சாலிசிலிக் அமிலம் சிறந்த வலி நிவாரணமாகும். இதற்கு உடல் அழற்சி, உடம்பு வலி, ஒற்றை தலைவலி முதுகு வலி போன்ற பிரச்னைகளைத் தீர்க்கும் திறனிருக்கு. இது ஆஸ்பிரினுக்கு நிகரானது. என் மரப்பட்டையைப் பொடியாக்கி தயாரிக்கப்படும் தேநீரை வெளிநாட்டினர் அருந்துகிறார்கள்.
அதனால் அவர்களுக்கு காய்ச்சல், பக்கவாதம் மற்றும் இதய சம்பந்தமான நோய்கள் வருவதேயில்லை. அது மட்டுமா, நான் சளி தொல்லையிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதுடன், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறேன்.
அதோட குழந்தைகளே, சரும பிரச்னைகள், பல்வலி, பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் போன்றவற்றிற்கும் என் மரப்பட்டை அருமருந்து. என்னை பணப்பயிர் பட்டியலில் சேர்த்து வளர்த்தால் நான் விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தை ஈட்டித் தருவேன்.
ஐம்பது ஆண்டு வளர்ந்த மரம் பல லட்சம் ரூபாய் சொத்துக்கு சமமான நன்மைகளைத் தருகிறது. நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
(வளருவேன்)