அழகு மயிலின் ஓசை தன்னை
அகவல் என்று கூறுவர்!
பழகு தமிழில் புலவர்களின்
பாடல் ஒன்று அகவல்தான்
குளிரும் காற்று வீசும் போது
தோகை விரிக்கும் மாமயில்!
ஒளிருகின்ற புள்ளிக் கோலம்
உடலில் உண்டு இயற்கையாய்!
ஆடுகின்ற வண்ணத் தோகை
ஆண் மயில்தான் பெற்றது
காடு போன்ற சோலைகளில்
காணலாமே மயில்களை!
வாடைக் காற்றில் ஆடும் மயிலை
வருந்துவதாய் எண்ணியே
ஆடை ஒன்று போர்த்தியுள்ளான்
அன்று வள்ளல் பேகனும்!
ஆறு படையில் வீடு கொண்ட
ஆறுமுக வேலவன்
ஏறுகின்ற ஊர்தி என்று
எழுதி வைத்தார் ஏட்டிலே!
பட்டுத் தோகைச் சிறகில் ஒன்றைப்
புத்தகத்தில் வைப்பதால்
குட்டி போடும் என்று நம்பும்
குழந்தை மனம் வேடிக்கை!
- சி.விநாயகமூர்த்தி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.