பகலும் இரவும்!
சூரியன் உதித்திடும் கிழக்கில் சுள்ளென உறைத்திடும் காலை!காரியம் ஆற்றிட மக்கள்
சூரியன் உதித்திடும் கிழக்கில்
சுள்ளென உறைத்திடும் காலை!
காரியம் ஆற்றிட மக்கள்
கடிதில் சென்றிடும் வேளை!
சூரியன் மறைந்திடும் மேற்கில்
சில்லெனக் காற்று மாலை!
காரியம் முடித்தே மக்கள்
கடிதில் திரும்புவர் வீடு!
கறுத்திடும் மேலே வானம்
காரிருள் சூழ்ந்திடும் இரவு!
உறவுடன் இரவில் உணவு
உறக்கம் வந்திடும் பிறகு!
இருளைப் போக்கி வானிலே
எழுந்திடும் அழகு வெண்ணிலா!
சிறுவர் ஆடிப் பாடவே
சிந்திடும் ஒளியை மண்ணிலே!
எல்லாம் செய்வது இயற்கையே
என்றால் அவரே இறைவனாம்!
வல்லான் நினைவு மனத்திலே
வாழ்வில் மகிழ்ச்சி நிறைக்குமே!